இலங்கைக்கான ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள் சுயநலங்கொண்ட குறித்த சில தரப்பினரால் தவறுதலாகப் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகளினால் தொழிலாளர் பணவனுப்பல்கள் முழுவதையும் அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி நிதிப் பெறப்பட்டதும் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலங்கை மத்திய வங்கியின் விதிகள் தேவைப்படுத்துகின்றன என வாத ஆதாரமற்ற ஊகம் விசமத்தனமாகப் பரப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான விதிகள் தொழிலாளர் பணவனுப்பல்களுக்குப் பொருந்தாது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகளினூடாக தமது வருவாய்களை அனுப்புகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் அத்தகைய நிதியை வெளிநாட்டுச் செலாவணியில் வைத்திருக்கலாம். இதற்கமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் தமது பணவனுப்பல்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயமில்லை.