நுண்பாக நிதித் துறை

நுண்பாக நிதி என்பது'' குறைந்த வருமான மக்களுக்கு நிதியியல் பணிகளை வழங்குதல்'' என வறிய மக்களுக்கு உதவுகின்ற ஆலோசனைக்குழு வரைவிலக்கணம் செய்கிறது. இது போதுமான பிணையங்களை வழங்க முடியாமையின் முக்கிய காரணமாக மிகவறிய மக்களுக்கு வழமையான வங்கிகளினால் பணியாற்றப்படாதிருக்கும் கொடுகடன், சேமிப்பு மற்றும் ஏனைய இன்றியமையாத நிதியியல் பணிகளை வழங்குகின்றது. நுண்பாக நிதியானது குறைந்த வருமானம் பெறும் மக்களின் வருமான உருவாக்க நடவடிக்கைகளையும் இயலாற்றலையும் விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் எதிர்பார்க்கிறது. ஆகவே இது நுண்பாக நிதியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஆட்களின் வாழ்க்கை நிலமைகளை மேம்படுத்துகின்ற வேளையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் தீவிரமான வகிபாகத்தினையும் கொண்டிருப்பர்.

இலங்கை வளர்ச்சியடையாத நுண்பாக நிதி முறைமையில் நீண்டகால வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. குறைந்தது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கையில் தொழிற்படுகின்ற 'சீட்டு' முறைசாராததாக ஆனால் சேமிப்பு மற்றும் மூலதனத்திரட்சிக்கு காத்திரமானதொரு வழியாக இருந்ததுடன் இதன்காரணமாக, வறியமக்களுக்கான நுண்பாக நிதியின் அடிப்படை முறையாகவும் தொழிற்படுகிறது. (இலங்கையின் நுண்பாக நிதித்துறை பன்முகத்தன்மை கொண்ட வீச்சிலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்திகளாக வளர்ச்சியுற்று குறைந்த செலவில் அனைத்து மக்களும் நிதியியல் பணிகளை பெற்றுக்கொள்ள இயலுமைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முறைமையினை பிரதிபலிப்பதுடன் சமூகத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குறைந்த வருமானப் பிரிவினருக்கு வலுவூட்டல்களையும் வழங்குகிறது). 

இலங்கையில் உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள், கூட்டுறவு கிராமிய வங்கிகள், சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள், திவிநகும வங்கிகள் மற்றும் நுண்பாக நிதி வியாபாரங்களில் ஈடுபடுகின்ற ஏனைய சமூகம்சார் அமைப்புக்கள், (நுண்பாக நிதிக் கம்பனிகள், அரசு சார்பற்ற) நிறுவனங்கள் போன்ற நுண்பாக நிதியினை வழங்கும் பல்வேறு வகையான நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்நிறுவனங்களில் சில வேறுபட்ட அதிகாரசபைகளின் கீழ் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றன. உரிமம்பெற்ற வங்கிகளும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. கூட்டுறவு கிராமிய வங்கிகளும் சிக்கனக் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்களும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட திவிநகும வங்கிகள் திவிநகும அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. எனினும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகார சபைகளின் அதிகார வரம்பின்கீழ் வராத பல நுண்பாக நிதி வழங்குவோர் காணப்படுகின்றனர்.

நுண்பாக நிதியின் முக்கியத்துவம்

குறைந்த வருமானம் பெறும் பொது மக்களில் பெரும்பாலானோருக்கு அடிப்படை நிதியியல் வசதிகளை அணுக முடியாமலிருக்கின்றது. எனவே, அவர்களுக்கு நிதியியல் பாய்ச்சலை வழங்குவதில் சவால்கள் இன்னமும் காணப்படவே செய்கின்றன. குறைந்த வருமான குடித்தொகையினரிடையே அதிகரித்தளவில் நிதியை அணுகக்கூடியதாக இருப்பது வருமான உருவாக்க நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம் சேமிப்பு பழக்கங்களையும் அதேபோன்று வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்தும். மேலும் ''நுண்பாக நிதிப் பணிகள் நீடித்து நிலைத்திருக்கும் விதத்தில் மக்கள் தமது சொந்தக் காலில் நின்று வறுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது'' (வறிய மக்களுக்கு உதவும் ஆலோசனைக்குழு, 2006). ஆகவே, குறிப்பாக வறுமைக் குறைப்பினை நோக்கி நெறிப்படுத்தப்படும் நிதியியல் பணிகளின் வடிவிலான நுண்பாக நிதியானது வறிய மக்களுக்கான சக்திவாய்ந்த சாதனமொன்றாக இருப்பதுடன், வறியோர் சொத்துக்களை கட்டியெழுப்பவும் அவர்களின் வருமானத்தினை அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு அவர்கள் பாதிக்கப்படும் தன்மையினை குறைக்கவும் இயலுமைப்படுத்துகிறது. இதன் விளைவாக வறியோர் தமது வாழ்க்கை நிலமையினை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் வேளையில் பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமான பங்கினையும் ஆற்றுகின்றனர்.

நுண்பாக நிதிக்கு ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையின் அவசியம்

ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நுண்பாக நிதி நடவடிக்கைகள் சட்டத்திற்கு மாறான வைப்புத்திட்டங்கள், மிகையான  வட்டி வீதங்களுடாக வாடிக்கையாளர்களைச் சுரண்டல் மற்றும் ஒழுக்கவியல் சாராத அறவிடல் முறைகள் என்பனவற்றிற்கு வழிவகுக்கும். மேலும் இந்நிறுவனங்களில் காணப்படும் மோசமான கம்பனி ஆளுகையானது குறைந்தளவு மீள்கொடுப்பனவு வீதங்கள், உயர்ந்த கொடுக்கல்வாங்கல் செலவுகள் மற்றும் மீண்டெழும் இழப்புக்கள் என்பனவற்றிற்கு வழிவகுத்து நிறுவனங்கள் முறிவடைவதற்கு இட்டுச்செல்கின்றன. வைப்புக்கள் ஏற்கும் நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் அல்லது மேற்பார்வை செய்யப்படாமல் இருக்குமாயின் அது திரட்டப்பட்ட வைப்புக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாதாகையால் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இவ்வொழுங்கு முறைப்படுத்தப்படாத நிறுவனங்களினால் வாடிக்கையாளர்கள் சுரண்டப்படுவது நுண்பாக நிதியினைப் பெறுபவர்களை மோசமாகப் பாதிப்பதுடன், வருமானம் குறைந்த வறியபிரிவினரை வறுமை சுழற்சி வட்டத்திற்குள் திணித்துக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கிறது. அதேநேரம் அத்தகைய நடைமுறைகள் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட துறையின் நம்பிக்கை உட்பட நிதியியல் துறையில் வாடிக்கையாளருக்குள்ள நம்பிக்கையைப் பாதிக்கிறது. நிதியியல் துறை பற்றிய குறைவான நம்பிக்கை, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை வெகுவாகப் பாதிக்கும்,  இதனைப் பேணுவது, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோளொன்றாகும். ஆகையினால்,  இலங்கையில் நுண்பாக நிதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பாா்வைசெய்வதற்குமான தேவையொன்று காணப்பட்டது ஆகவே, இலங்கையில் நுண்பாக நிதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேற்குறிப்பிடப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வது அவசியமானதாகும்.

2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதிச்சட்டம்

இலங்கையில் நுண்பாக நிதித்துறையில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக  சட்டவாக்கமொன்றினை மேற்கொள்ள ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக பாராளுமன்றம் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்டத்தினை இயற்றியதுடன் இது 2016 யூலை 15ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவந்தது. இச் சட்டம் நுண்பாக நிதி வியாபாரத்தினை மேற்கொள்கின்ற கம்பனிகளின் உரிமம் வழங்கல், ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வை என்பனவற்றை வழங்குவதுடன் இக்கம்பனிகள் உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள் என அழைக்கப்படுகின்றன. உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நேரடியாக ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. (சட்டமானது 1980ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க வலிந்துதவும் சமூக பணிகள் அமைப்புக்கள் (பதிவுசெய்தல் மற்றும் மேற்பார்வை) சட்டத்தின்கீழ்  தன்னார்வ சமூக பணி நிறுவனங்களின் பதிவாளரினால் (பதிவாளர்) பதிவுசெய்யப்பட்ட அரசல்லா நுண்பாக நிதி நிறுவனங்களைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது).

சட்டம் நுண்பாக நிதி வியாபாரம் பற்றிய வரைவிலக்கணம் ஒன்றைத் தருகின்றது. 

“இது வைப்புக்களை பெற்றுக்கொள்வதுடன் பின்வருவனவற்றை வழங்குகிறது:-
அ. ஏதேனும் வடிவிலான நிதியியல் கடன் வசதிகள்
ஆ. ஏனைய நிதியியல் பணிகள் அல்லது
இ. ஏதேனும் வடிவிலான நிதியியல் கடன் வசதிகள் மற்றும் நிதியியல் பணிகள்,  முக்கியமாக குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில் முயற்சிகளுக்கும்..''

இலங்கையின் உாிமம்பெற்ற நுண்பாக நிதி நிறுவனங்களின் பட்டியல்