பொதுநோக்கு

இலங்கையின் நிதியியல் துறையில் உச்ச மட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி விளங்குகின்றது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின்கீழ் 1950ஆம் ஆண்டு அரைவாசியளவு சுயநிர்ணயம் கொண்டதொரு நிறுவனமாக இது நிறுவப்பட்டதுடன் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையினால் நிருவகிக்கப்படுகிறது.

ஆரோக்கியமானதும் உறுதியானதுமான பொருளாதாரத்தினையும் நிதியியல் முறைமையினையும் பேணுவதற்காக இரண்டு மையக் குறிக்கோள்களை அடையவும் பேணவும் இலங்கை மத்திய வங்கி நாடுகின்ற அதேவேளையில் மூலவளங்களின் பயன்பாட்டினைக் காத்திரமான முறையில் உச்சப்படுத்தவும் எதிர்பார்க்கிறது. இக்குறிக்கோள்களாவன:

      1.    பொருளாதாரத்தையும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்
      2.    நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்

நாணய விதிச் சட்டம் பொதுமக்களுக்கு நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வெளியிடுகின்ற ஏக அதிகாரத்தினை மத்திய வங்கிக்கு வழங்கியிருக்கிறது. ஆகவே, வங்கி நாணய வெளியீட்டிற்கும் அதன் முகாமைத்துவத்திற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார விடயங்கள் தொடர்பான மதியுரையாளராகவும் வங்கியாளராகவும் விளங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் முகவர் என்ற ரீதியில் ஊழியர் சேம நிதியத்தினை முகாமைப்படுத்தல், நாட்டின் பொதுப் படுகடனை முகாமைப்படுத்தல், செலாவணிக் கட்டுப்பாட்டுப் பணிகளை வழங்குதல் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கான நிதிகள் கிடைப்பதனை அதிகரிக்கும் விதத்தில் வெளிநாட்டு மற்றும் அரச நிதியிடல் கொடுகடன் திட்டங்களை நிருவகித்தல் ஆகிய பணிகள் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முதன்மை நிறைவேற்று அலுவலராக தொழிற்படுகின்ற அதேவேளை, மூத்த முகாமைத்துவமானது ஆளுநருக்கு மேலதிகமாக  துணை ஆளுநர்கள், உதவி ஆளுநர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. வங்கியானது 29 திணைக்களங்களையும் 6 பிரதேச அலுவலகங்களையும்; உள்ளடக்கியுள்ளது. திணைக்களங்களுக்கு பணிப்பாளர்கள் (அல்லது அவர்களுக்குச் சமமானவர்கள்) தலைவர்களாகத் தலைமை வகிப்பதுடன், அவர்கள்  உதவி ஆளுநரினூடாக ஆளுநருக்கு அல்லது துணை ஆளுநருக்கு அறிக்கையிடுகின்றனர்.