பொதுநோக்கு

நிதியியல் முறைமை உறுதிப்பாடு மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். உறுதியான நிதியியல் முறைமை என்பது, சேமிப்புக்களைத் திரட்டி அவற்றை உற்பத்தியாக்க முதலீடுகளுக்கு ஒதுக்குதல், இடர்நேர்வுகளை முகாமைப்படுத்தி கொடுப்பனவுகளை தீர்ப்பனவு செய்தல், பொருளாதார அதிர்வுகள் மற்றும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையிலும் கூட பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனோம்புகைகளுக்கும் பெரும் தாக்கங்கள் எதுவுமின்றிப் பேணிக் கொள்ளும் இயலாற்றலைக் கொண்டதாக இருப்பதேயாகும். இது சிறு முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வினைத்திறன் மிக்க நிதியியல் இடையேற்பாடுகளுக்கான சாதகமான சூழ்நிலையொன்றை உருவாக்க உதவும்.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணுவதில் மத்திய வங்கியின் வகிபாகம் வருமாறு;

  பணத்தில் பொதுமக்களின் நம்பிக்கையினை ஊக்குவித்துப் பேணுதல்.
  தனிப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் பாதுகாப்பினையும் ஆற்றல் வாய்ந்த தன்மையினையும் மேம்படுத்தல்..
  நிதியியல் முறைமைக்கான இடர்நேர்வுகளைக் குறைப்பதன் மூலமாக, மற்றைய நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துநர்களின் ஒத்துழைப்புடன், நிதியியல் முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.
  இறுதிக் கடன் ஈவோனாக தொழிற்படல்.
  முறிவடைந்த நிதியியல் நிறுவனங்களைக் கலைத்துவிடும் சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த நிதியியல் நிறுவனங்கள்/ பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய மோசமான தாக்கங்களை குறைக்கும் விதத்தில் அவற்றை கலைத்தல்.
  நிதியியல் சந்தை உட்கட்டமைப்பினை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தல்.

இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரத்தின் கீழான நிறுவனங்கள்

  உரிமம்பெற்ற வங்கிகள்
  உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்s
  பதிவுசெய்யப்பட்ட குத்தகைக்குவிடும் நிறுவனங்கள்
  உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள்
  அரச பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்கள்
  வெளிநாட்டுச் செலாவணியிலுள்ள அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்
  அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுனர்கள்
  அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகர்கள்

ஏனைய இரண்டு முக்கிய நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள்,

  பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு வானது பங்குப் பரிவர்த்தனை, பங்குத்தரகர்/ வணிகர்கள், கூறுநம்பிக்கை கம்பனிகள், பங்குச் சந்தை கடன் வசதி வழங்குவோர் கொடுகடன் தரமிடல் முகவர்கள், முதலீட்டு முகாமையாளர்கள், பங்குரிமைமூலதன மற்றும் தனியார் படுகடன் பிணையங்களின் தீர்வகங்கள் என்பனவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகும்.
  இலங்கைக் காப்புறுதிச் சபை காப்புறுதிக் கைத்தொழிலை அதாவது காப்புறுதிக் கம்பனிகள், காப்புறுதி முகவர்கள் மற்றும் தரகர்களை ஒழுங்குமுறைப்படுத்துகிறது.

(இவ்வொழுங்குமுறைப்படுத்துநர்கள் ஒவ்வொருவரினதும் பணிப்பாளர்கள் சபையில் நிதியியல் முறைமை உறுப்பாட்டிற்கு பொறுப்பாக இருக்கும் துணை ஆளுநர் இலங்கை மத்திய வங்கியை பிரசன்னப்படுத்துகின்றார்.)