குறிக்கோள்கள்
இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்கள்
இலங்கை மத்திய வங்கி மாற்றமடைந்துவரும் பொருளாதார சூழலுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் கவனத்தையும் தொழிற்பாடுகளையும் விருத்திசெய்து வருகிறது. மத்திய வங்கித் தொழிலின் போக்குகளுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் ஆரம்பத்தில் அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பல்வேறு குறிக்கோள்களிலிருந்தும் அதனை விடுத்து இரண்டு மையக் குறிக்கோள்களை அது பின்பற்றுவதனை இயலச்செய்யும் விதத்தில் 2002இல் நாணய விதிச் சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் மத்திய வங்கியின் குறிக்கோள்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.
மத்திய வங்கி இரண்டு மையக் குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது:
"பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்"
"நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்"
இலங்கையின் உற்பத்தியாக்க மூலவளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்துகின்ற நோக்குடன் மத்திய வங்கி இவ்விரண்டு குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறது.
சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கி பல குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. இவை சில சமயங்களில் முரண்பாடுகளைக் கொண்டனவாக அல்லது ஒன்றுடன் மற்றொன்று ஒத்துப்போகாததாகக் காணப்பட்டது.
அதேவேளை, மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளாக விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதாக இருத்தல் வேண்டும் என்ற உடன்பாடு பன்னாட்டு ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களிளொன்றான விலை உறுதிப்பாடு உறுதியான பேரண்டப் பொருளாதார நிலைமைகளில் முக்கியமாக தங்கியிருப்பதனால் '' பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு '' என குறித்துரைக்கப்படுகிறது. மேலும், மற்றைய நாடுகளின் அனுபவங்கள் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்கு நிதியியல் முறைமை உறுதிப்பாடு இன்றியமையாதது என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. எனவே நிதியியல் முறைமை உறுதிப்பாடும் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோளொன்றாக அடையாளம் காணப்பட்டது. இவ்விரண்டு குறிக்கோள்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் ஒன்றினை ஒன்று பூர்த்தி செய்வதாகவும் காணப்படுகின்றன. விலை உறுதிப்பாட்டினை எய்துவதற்கு, நாணயக் கொள்கை நிதியியல் இடையேற்பாட்டாளர்களினூடாக (நிறுவனங்கள்) பரிமாற்றப்பட்டு வருவதனால் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். எனவே இரண்டு குறிக்கோள்களும் இணங்குவிப்புத் தன்மை கொண்டனவாக இருப்பதுடன் இது மத்திய வங்கி அதன் முக்கிய தொழிற்பாடுகளை மிகக் காத்திரமான முறையில் ஆற்றுவதனையும் இயலுமைப்படுத்துகின்றது. மத்திய வங்கி அதன் குறிக்கோள்களை எய்துவதற்காக அதற்கு அதிகளவு சுயநிர்ணயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்பணியில் மத்திய வங்கி கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் நிதியமைச்சுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணிவருவதுடன் நிதியமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையாக விளங்கும் நாணயச் சபையின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.
பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு
விலை உறுதிப்பாடானது, உள்நாட்டின் நாணயத்தின் நியதிகளிலும் வெளிநாட்டு நாணயங்களின் நியதிகளிலும் இது எவற்றைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்குமென்ற நாணயத்தின் பெறுமதியினைப் பாதுகாக்கிறது. விலை உறுதிப்பாடு அல்லது விலைகளின் உறுதித்தன்மை என்பதன் பொருள் குறைந்த பணவீக்கமாகும். பணவீக்கம் குறைவாக இருக்கும் பொழுதும் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் பொழுதும் பொருளாதாரம் நன்கு செயலாற்றும் என்பதனை அனுபவம் காட்டுகின்றது. இந்நிலைமைகளில் வட்டி வீதங்களும் குறைவாகவே இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையானது, பொருளாதாரம் அதன் வளர்ச்சி வாய்ப்புக்களை அடைவதற்கும் உயர் தொழில்வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கும் அனுமதிக்கிறது. உயர்வானதும் அடிக்கடி மாறுபடுவதுமான பணவீக்கத்தின் இடையூறு விளைவிக்கும் தாக்கம் இல்லாமையால் நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் நம்பிக்கையுடன் பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ளமுடிகிறது. குறைந்த பணவீக்கம் அல்லது விலை உறுதிப்பாடானது உறுதித்தன்மை, நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நிலை என்பவற்றை ஊக்குவிக்கின்றது. மத்திய வங்கி பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு நாணயக் கொள்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.
நிதியியல் முறைமை உறுதிப்பாடு
உறுதியான நிதியியல் முறைமையானது வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான சூழலொன்றினை உருவாக்குவதன் மூலம் வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீடுகளையும் சந்தைகளின் காத்திரமான தொழிற்பாடுகளையும் ஊக்குவிக்கிறது, இதன்மூலம் முதலீட்டினையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாடென்பது நிதியியல் முறைமையின் காத்திரமான தொழிற்பாடு எனவும் (நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள்) வங்கித்தொழில், நாணயம் மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடிகள் இல்லாததொரு தன்மை எனவும் பொருள்படுகிறது. வங்கி முறிவடைதல், மிகையான சொத்து விலைத்தளம்பல் மற்றும் சந்தைத் திரவத்தன்மை சிதைவடைதல் அல்லது கொடுப்பனவு முறைமைக்கான தடங்கல் என்பனவற்றின் காரணமாக நிதியியல் உறுதிப்பாடற்ற தன்மை ஏற்படுகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உறுதியான பேரண்டப் பொருளாதார சூழல், காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு, நன்கமைக்கப்பட்ட நிதியியல் சந்தைகள், ஆற்றல் வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பானதும் உத்வேகம் நிறைந்ததுமான கொடுப்பனவு உட்கட்டமைப்பு என்பன தேவைப்படுத்தப்படுகின்றன. சந்தைகளையும் நிதியியல் நிறுவனங்களையும் கண்காணித்தல், கொடுப்பனவு முறைமைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் என்பனவூடாக நிதியியல் முறைமைக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடைசெய்தல், கண்டுபிடித்தல் மற்றும் குறைத்தல் என்பனவற்றின் மூலம் நிதியியல் உறுதிப்பாடு பேணப்படுகின்றது.