மத்திய வங்கி தலைமை அலுவலகம்

1950இல் இலங்கை மத்திய வங்கி தலைமை அலுவலகத்தின் முதலாவது அமைவிடமாக கொழும்பு கோட்டையிலுள்ள யோர்க் வீதியில் அமைந்திருந்த ''சைம்ஸ்" கட்டிடம் விளங்கியதுடன் இது ''கார்கில்ஸ் இல்லம்" எனவும் அழைக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் வங்கி மேற்பார்வை, பொருளாதார ஆராய்ச்சி, பொதுப்படுகடன் மற்றும் செயலகத் திணைக்களங்கள் அமைந்திருந்த வேளையில் நாணயப் பிரிவினை உள்ளடக்கிய  வங்கித்தொழில் திணைக்களம் செயலகக் கட்டிடத்திலிருந்து (தற்பொழுது  நிதி அமைச்சு அமைந்துள்ள பொதுத் திறைசேரி கட்டிடம்) தொழிற்பட்டது.

 

 
1950ஆம் ஆண்டு மத்திய வங்கியினுடைய முதலாவது தலைமை அலுவலகமாக கொழும்புக் கோட்டையின் யோா்க் வீதியில் அமைந்திருந்த சைம்ஸ் கட்டடம் விளங்கியது.
 
செயலகக் கட்டடமானது (பொது திறைசோிக் கட்டடம்) ஆரம்பத்தில் வங்கித்தொழில் மற்றும் நாணயத் திணைக்களமாக விளங்கியது.

மத்திய வங்கி அதன் ஆரம்ப கட்டிடத்தில் நீண்ட காலம் அதன் தொழிற்பாடுகளை தொடரக்கூடிய நிலையில் காணப்படவில்லை. 1955இல் இது ஆரம்பித்ததிலிருந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் போதுமான இட வசதிகள் இல்லாமையின் காரணமாக ஆளுநர் சேர் ஏ.ஜி. ரணசிங்க அவர்களின் காலப்பகுதியில் சைம்ஸ் கட்டிடத்திற்கு முன்னாலிருந்த 'ஹேமாஸ்" கட்டிடத்திற்கு தலைமையலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. ஹேமாஸ் கட்டிடத்தின் தரைமாடி முழுவதும் வங்கித்தொழில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. பொதுப்படுகடன் மற்றும் செயலகத் திணைக்களங்கள் இரண்டாம் மாடியில் அமைந்திருந்தன. ஆளுநர், துணை ஆளுநர், பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர், வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர் மற்றும் செயலாளரின் அலுவலகங்கள் மூன்றாம் மாடியில் அமைந்திருந்தன. இன்னொரு முக்கிய உறுப்பினரான  ஊழியர் சேம நிதியத் திணைக்களம் 1958 ஓகத்து 01ஆம் நாளன்று மத்திய வங்கிக் குடும்பத்தில் இணைந்து கொண்டது. ஹேமாஸ் கட்டிடம் ஊழியர் சேம நிதியத்தினை உள்ளடக்குவதற்கு போதுமான இடவசதியினைக் கொண்டிராமையினால் அது சேர் பாரன் ஜெயதிலக மாவத்தையிலுள்ள வை எம் பீ ஏ கட்டிடத்தில் அமைந்தது.

 
1955இல் மத்திய வங்கியினுடைய தலைமை அலுவலகம் கொழும்புக் கோட்டை யோா்க் வீதியிலுள்ள "ஹேமாஸ்" கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டது.
 
1958ஆம் ஆண்டில் மத்திய வங்கியினுடைய முதலாவது ஊழியா் சேம நிதியக் கட்டடம் இயங்கிய கொழும்பு, சோ் பாரன் ஜெயதிலக மாவத்தையில் அமைந்துள்ள பெளத்த இளைஞா் சங்க மன்றக் கட்டடம் (வை.எம்.பீ.ஏ).

இச் சூழ்நிலைகளின் கீழ்  மத்திய வங்கி சொந்தக் கட்டிடமொன்றிற்கு நகர வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்தது. கொழும்பு கோட்டையில் இராணி வீதியில் அமைந்திருந்த பிரித்தானிய காலனித்துவத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் அரசின் கொடையாக மத்திய வங்கிக்கு அதன் தலைமை அலுவலகத்தினை அமைப்பதற்கு வழங்கப்பட்டது. இதன் அமைவிடம் துலாம்பரமான அடையாளமாகக் காணப்பட்டது. இராணி வீதியும் சதாம் வீதியும் சந்திக்கும் சந்தியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரமும் வெளிச்ச வீடும் இதன் அயலில் உள்ள முக்கிய அடையாளங்களாகும்.

புகழ்பெற்ற கட்டிட ஒப்பந்தக்காரரை தெரிவுசெய்வதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவராலயங்களினூடாக பன்னாட்டு  விலைக் கோரல்கள் அழைக்கப்பட்டதுடன் ஜேர்மனிலுள்ள எட் - சுப்ளின் எஜ் ஸ்ரட்கார்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது. பெல்ஜியத்திலிருந்தான வான்ஹோத்தம் கம்பனி கட்டிடக் கலைக்கு பொறுப்பாக இருந்தது. பட்டயக் கட்டிடக் கலைஞர்களான  செல்வரத்தினம் அன்ட் மொங் அவர்களது இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக விளங்கியது. திரு. டி.டபிள்யு. இராசபத்திரன ஆளுநராக இருந்த காலப்பகுதியான  1960ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆளுநரின் உதவியாளரான திரு. டி.சி குணசேகரா கட்டுமானத்திற்கு பொறுப்பான அலுவலராக விளங்கினார்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பொறியியலாளர்களும் மற்றும் கட்டிடக் கலைஞர்களும் பணிக்காக வெளிநாட்டுப் பொறியியலாளர்களினால் வெகுவாகப் பாராட்டப்பட்ட தகுதி வாய்ந்த உள்நாட்டுத் தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து இக்குறிக்கோளை அடைய கடுமையாக உழைத்தனர். அப்பொழுது கொழும்பு மாநகரில் ஐந்து மாடிகளுக்குக் கூடுதலான கட்டிடங்கள் ஒருசில மட்டுமே காணப்பட்டமையினால் இந்த இராட்சத கட்டிடம் படிப்படியாக உயர்வதனைப் பார்ப்பதற்கு நாளாந்தம் ஏராளமான மக்கள் கூடுவதனைக் காண முடிந்தது.

 
வங்கியின் திணைக்களங்களுக்கான போதிய இடவசதியினை வழங்கி மத்திய வங்கியினுடைய புதிய தலைமை அலுவலகம் கொழும்பு 01, சனாதிபதி மாவத்தை, இல.30இலுள்ள வளாகத்தில் நிறுவப்பட்டது.

வெவ்வேறு கட்டிடங்களில் அமைந்திருந்த மத்திய வங்கியின் வேறுபட்ட திணைக்களங்களை மத்திய வங்கி தலைமை அலுவலகத்தின்  பொதுவான ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவது அடுத்த கடுமையான சவாலாகக் காணப்பட்டது. மத்திய வங்கியின் நிருவாகம் தனியார் துறை பொருள் கொண்டு செல்வோருடன் இணைந்து ஹேமாஸ் கட்டிடம், வைஎம்பிஏ கட்டிடம், எச்சலன் கட்டிடம் மற்றும் செயலகக் கட்டிடம் என்பனவற்றிலிருந்திருந்த அனைத்து திணைக்களங்களையும் அலுவலர்களையும் ஒரு சில நாட்களுக்குள் 1964இல் அதன் சொந்த தலைமை அலுவலகத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தது. ஒரு சிறிய பொருளைக் கூட தவறவிடாமல் இம் மீளமைத்தல் செயற்றிட்டம் நிறைவடைவதற்கு மிகச் சிறந்த பங்களிப்பினை வழங்கிய  வங்கியின் நிருவாகத்திற்கு ஆளுநர் திரு. டி.டபிள்யூ  இராசபத்திரன பாராட்டியிருந்தமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தனிச்சிறப்பு மிக்க தலைமை அலுவலகம் ஒவ்வொரு கோபுரத்திலும் 9 மாடிகளைக் கொண்ட 3 கோபுரங்களையும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள கோபுரங்கள் இடைத் தளங்களையும் உள்ளடக்கியிருந்தன. மத்திய கோபுரத்தில் அமைந்திருந்த தலைமையகக் கட்டிடத்தின் தனிச்சிறப்பு மிக்க வங்கித்தொழில் மண்டபம் பொதுமக்கள் தமது நாணயத் தாள் மற்றும் குத்திகளின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பழுதடைந்த நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கும் வருகை தரும் இடமாக விளங்கியது. ஒன்பதாவது மாடி ஆளுநர், துணை ஆளுநர்கள், நாணயச் சபை அறை மற்றும் மாநாட்டு மண்டபம் ஆகிய அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 

1996ஆம் ஆண்டு சனவரி 31ஆம் திகதி பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலின் விளைவாக மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு பாரியளவிலான சேதம் ஏற்படுத்தப்பட்டது.

வங்கியின் வரலாற்றில் இடம்பெற்ற மிகத்துக்ககரமான சம்பவங்களிலொன்று தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தனவின் காலத்தில், 1996 சனவரி 31 ஆம் நாளன்று இடம்பெற்ற பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதலாகும்.

இப்பாரிய குண்டு வெடிப்பின் விளைவாக கட்டிடம் பாரிய சேதங்களுக்கு உள்ளானதுடன் நாற்பத்தொரு வங்கி ஊழியர்களினதும் பல பொதுமக்களினதும் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டதுடன் இன்னும் பல ஊழியர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். தற்காலிக தீர்வாக, மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் இராஜகிரியவிலுள்ள கிராமிய வங்கித்தொழில் மற்றும் அலுவலர் பயிற்சிக் கல்லூரியில்  (வங்கிதொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம்) உடனடியாக மீளத் தொடங்கின. பின்னர் அமைச்சரைவையின்  ஒப்புதலுடன் தலைமை அலுவலகத்தின் புதுப்பித்தல் வேலைகள் நிறைவடையும் வரை மத்திய வங்கியின் முக்கிய அலுவலகங்கள் புதிய பணிமனைகளுக்கு, அதாவது, உலக வர்த்தக மையத்தின் (இரட்டைக் கோபுரம்) 15 - 17 மாடிகளுக்கு 1996 ஒத்தோபர் 24ஆம் நாள் கொண்டு செல்லப்பட்டது. நாணயத் திணைக்களத்தின் தொழிற்பாடுகள் பொதுத் திறைசேரிக் கட்டிடம், மக்கள் வங்கி தலைமை அலுவலகம், மக்கள் வங்கி லேக் சைட் கிளை, இலங்கை வங்கி தலைமை அலுவலகம் மற்றும் ஸ்டான்டட் சார்டட் வங்கி கட்டிடம் என்பனவற்றிலிருந்து தொழிற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்காக கோட்டை பிரிஸ்டல் வீதியில் சோனக இஸ்லாமிய கலாச்சார இல்லக் கட்டிடத்தில் காசுப் பீடங்கள் திறக்கப்பட்டன. இக் குறிப்பிடத்தக்க திருப்புமுனையில் மிகப்பெரும் தியாகம் செய்து மரணித்த மத்திய வங்கி ஊழியர்களின் தைரியத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஞாபகச் சின்னமொன்றும் எழுப்பப்பட்டது.சேதமடைந்த தலைமை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டமைக்கும் புறம்பாக, மத்திய வங்கி அதன் தலைமை அலுவலகத்துடன் சேர்ந்திருந்த நிலையில் இரண்டு கோபுரங்களை அமைக்கும் நிருமாணப் பணிகளை தொடங்கியது. ஏற்கனவே 1994 ஓகத்தில் அங்கு அத்திவாரக் கல் நாட்டப்பட்டது. ஏற்கனவேயுள்ள சேதமடைந்த கட்டிடங்களைப் புதுப்பிக்கும் வேலை, மத்திய வங்கியின் விரிவாக்கக் கட்டிடம் ஆகிய இரண்டினதும் வேலைகள் ஜேர்மனியின் எட். சப்ளின் ஏஜி, ஸட்டக்கார்ட்டினால் பொறுப்பேற்கப்பட்டன. மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் விபரமான கட்டிடக் கலை வரைபடங்கள், உள்ளகவடிவமைப்பு, விபரமான அமைப்பியல் மற்றும் மின்னூட்டல் எந்திரவியல் வரைபடங்கள் மற்றும் ஒப்பந்த நிருவாகம் என்பனவற்றை வழங்கின. செயற்றிட்டத்திற்கான ஆரம்ப வடிவமைப்பு உள்ளூர் கட்டிடக்கலை நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடன் ஒல்லாந்து கட்டிடக் கலைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டது. நவீன பாலமொன்று பழைய கட்டிடத்தினை புதிய கட்டிடத்துடன் 9வது 10வது 11வது மாடிகளூடாக 3 தளங்களில் இணைக்கின்றது

இப்புதிய கோபுரங்கள் சேர்க்கப்பட்டதுடன் தலைமை அலுவலகத்தில் புதிய பணிமனைகள் இப்பிராந்தியத்தின் நவீன மத்திய வங்கியின் அமைவிடமாக மாறின அதிநவீனத்துவம் வாய்ந்த மாநாட்டு மண்டப வசதிகள், உள்ளக மற்றும் பன்னாட்டு வலையமைப்புக்களுடன் கூடிய  அனைத்தையுமுள்ளடக்கும் தகவல் தொழில்நுட்ப ஏற்பாடுகள் என்பனவற்றுடன் பன்னாட்டு மாநாட்டு மண்டபம் (வங்கியின் ஆரம்ப ஆளுநரின் பணிகளை நினைவுகூறும் விதத்தில் ஜோன் எக்ஸ்டர் மாநாட்டு மண்டபம் என பெயரிடப்பட்டது) அமைக்கப்பட்ட வேளையில் அறிவினை அடிப்படையாகக் கொண்ட பயில்தல் சூழலை உயர்த்தும் பொருட்டு அனைத்து வசதிகளும் கொண்ட ஆராய்ச்சி நூலகம் ஒன்று உட்பட நவீன பணி வசதிகளுடன் கூடிய புதிய பணிக் கலாச்சாரமொன்று ஆரம்பிக்கபட்டது. புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்தில் மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் 1999 ஒத்தோபரில் ஆரம்பமாயின. மத்திய வங்கியின் 50ஆவது பொன் விழாவினை நிறைவுகூறும் விதத்தில் புதிய கட்டிடம் மத்திய வங்கியின் தலைமை அலுவலகமாக, தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தன ஆளுநராக இருந்த காலப்பகுதியில் இலங்கையின் சனாதிபதியும் நிதித் திட்டமிடல் அமைச்சருமான அதிமேதகு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 2000 ஓகத்து 27ஆம் திகதி அலுவலக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் பொன் விழாவினைக் குறிக்கும் விதத்தில் ரூ. 1,000 ஞாபகார்த்த வெள்ளி நாணயக் குத்தியும் முதல் நாள் உறையுடன் ஞாபகார்த்த முத்திரையும் சுவர்ண ஜெயந்தி வெளியீடும் வழங்கப்பட்டன.

"எழுவோம்" - நினைவுச் சின்னம் இலங்கை மத்திய வங்கியின் உயிரிழந்த ஊழியா்களை கௌரவிக்கும் முகமாக எழுப்பப்பட்டது.

இன்று இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகங்கள் இலங்கை சனாதிபதியின் அலுவலக வாசஸ்தலத்திற்குச் செல்லும் சனாதிபதி மாவத்தையில் (முன்னர் இராணி வீதி) கொழும்பு கோட்டையின் இதயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த 5 மாடிகளுடன் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.

 
பின்னணியில் இந்து சமுத்திரத்தினையும் வரலாற்றினையும் கொண்ட கொழும்பின் (கோட்டை) மத்தியில் சனாதிபதி மாவத்தையில் ஐந்து கோபுரங்களுடன் எழுந்துநிற்கின்ற இலங்கை மத்திய வங்கியின் தனித்துவமிக்க தலைமை அலுவலகக் கட்டடம்.