நாணயத்தாளின் உருவங்களைப் பயன்படுத்துதல்

மீளத் தயாரித்தல் என்பதன் கருத்து, கட்புலனாகக்கூடிய தோற்றப்பாட்டின் ஒரு பகுதியை அல்லது முழுமையான தாளினையும் நாணயத் தாளின் உள்ளடக்கம் அல்லது தோற்றத்தினை பிரதிபண்ணுதல், நகல் எடுத்தல், போலிகளைத் தயாரித்தல் மற்றும் வடிவமைத்தல் என்பதாகும். மீளத்தயாரித்தலானது விளக்கப்படங்கள், வர்ணம்தீட்டுதல், புகைப்படங்கள். படங்கள், இலத்திரனியல் தோற்றங்கள், அச்சு அல்லது இலத்திரணியல் ஊடகம், இணையத்தளம், தொலைக்காட்சி மற்றும் படச்சுருள்கள் ஊடாக செய்யப்படக்கூடியதாகும்.

பின்வருவன 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட தொகுப்பொன்றாகும்.

பிரிவு 55: நாணயச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு ஆளும்:

1. வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழியில் ஏதேனும் நாணயத் தாளினை உருச்சிதைத்தல்;

2. ஏதேனும் நாணயத் தாளின் மீது அச்சிடல், முத்திரையிடல் அல்லது எதனையேனும் வரைதல் அல்லது ஏதேனும் நாணயத் தாளின் மீது ஒட்டுதல் சீல் அல்லது முத்திரை பதித்தல்;

3. ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல்; அல்லது

4. ஏதேனும் நாணயத் தாளின் ஏதேனும் வடிவத்தினை மீளத்தயாரித்தல் அல்லது தொலைநகலெடுத்தல்; 

5. ஏதேனும் வேறுவழியில் நாணயத்தாளின் சட்டபூர்வமான தன்மையினைப் பயன்படுத்துதல்;

என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

பின்வரும் வழிகாட்டல்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளையும் ஒப்புதலுடன் நாணயத் தாள்கள் மீளத்தயாரிக்கும் பொழுது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களையும் தருகின்றன.

மீளத்தயாரிப்பதன் மீதான நிபந்தனைகள்

1. அனுமதிக்கப்பட்ட நோக்கங்களாவன கல்விசார் விடயங்கள், ஆராய்ச்சி, செய்தி அறிக்கையிடல், நீதிமன்ற விசாரணை, தொல்பொருள், சுற்றுலாத் தகவல், நாணயவியல் மற்றும் வர்த்தக நோக்கங்கள்.

2. மீளத்தயாரிக்கப்படும் தாள்கள் உண்மையான தாள்களின் அதேயளவில் இருக்கக்கூடாது. அவை சிறியனவாக இருப்பின் தாளின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். பெரிதாக இருப்பின் உண்மையான தாளின் மூல அளவில் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்காக இருத்தல் வேண்டும். தாளின் ஒரு பகுதியை மீளத்தயாரிக்கும் பொழுது இதே நிபந்தனைகளையே பின்பற்றுதல் வேண்டும்.

3. மீளத்தயாரிப்புக்களை நீர்வரி அடையாள தாள்களிலோ அல்லது ஏனைய அடுக்குத்தாள்களிலோ மேற்கொள்ளக்கூடாது. இது மீளத்தயாரிக்கப்பட்ட தாள் உண்மையான தாள் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துவதனைத் தவிர்ப்பதற்கேயாகும்.

4. மீளத்தயாரிக்கப்பட்ட தாளில் ''உருவ மாதிரி" என்ற சொற்கள் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன் இது புலனாகத்தக்க விதத்தில் தடித்த எழுத்திலும் அச்சிடப்பட்டிருத்தல் வேண்டும்.

5. மீளத் தயாரிக்கப்பட்ட தாள் 'மீளத்தயாரிப்பிற்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதலளித்திருக்கிறது" என்ற சொற்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

6. மீளத்தயாரிக்கப்பட்ட தாள் ஒரு பக்கத்தினை மட்டுமே கொண்டிருத்தல் வேண்டும். தாளின் இரண்டு பக்கங்களினதும் அடுக்குகளும் தாள் ஒன்றினை இணைப்பது போன்று அச்சிடப்படக்கூடாது.

7. மீளத்தயாரிக்கப்பட்ட தாள், நாணயத் தாளின் வடிவம், நிறம், வடிவமைப்பு, சின்னம் என்பனவற்றை எந்தவிதத்திலேனும் சிதைப்பதாக இருக்கக்கூடாது.

8. அனுமதியானது ஓராண்டை விஞ்சாத குறித்துரைக்கப்பட்டதொரு காலப்பகுதிக்கு குறித்துரைக்கப்பட்டதொரு நோக்கத்திற்கு மாத்திரமே நடைமுறையிலிருக்கும்/ அனுமதியினைப் புதுப்பிப்பது பரிசீலனையில் கொள்ளப்படலாம்.

9. ஒப்புதல் வழங்கப்பட்டதும் மீளத்தயாரிப்பினை மேற்கொள்கின்ற தொடர்பான விண்ணப்பதாரி ஸ்கான், போட்டோ பிரதி மற்றும் பிம்பங்களை உருவாக்குதல் என்பனவற்றிற்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும்/ சாதனங்களும் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை அல்லது ஒப்புதல் வழங்கப்பட்ட நோக்கங்களுக்குப் புறம்பாக பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

10. நாணயத் தாள்களை மீளத்தயாரிக்க அல்லது மீளத்தயாரித்த நாணயத் தாள்களை களஞ்சியப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட நெக்கடிவ்வுகள், புகைப்படங்கள், புளொக்குகள், பிளேட்டுக்கள், கொம்பக்ற் டிஸ்குகள், படச்சுருள்கள், நுண்படச் சுருள்கள், வீடியோ நாடாக்கள், சிலைட்ஸ் அல்லது மற்றைய பொருட்களை இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைந்து 14 நாட்களுக்குள் அழித்துவிட வேண்டும் அல்லது நீக்கிவிட வேண்டும். இந்நடவடிக்கையினைக் குறிப்பிடுகின்ற அறிக்கையொன்றினை அவர்களின் பதவிற்காக இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்கள கண்காணிப்பாளருக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கான பிரதியொன்றுடன் அனுப்பி வைத்தல் வேண்டும்.

ஒப்புதல் நடைமுறை

1. இலங்கையின் நாணயத் தாளினை மீளத்தயாரிக்க விரும்புகின்ற எந்தவொரு ஆளும் இங்கே பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய விண்ணப்பப் படிவத்தினை உத்தேச மீளத்தயாரிப்பு திகதிக்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களக் கண்காணிப்பாளருக்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

2. ஒப்புதல் பெறப்பட்ட பின்னரும் மீளத்தயாரிப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரும் ஒப்புதலளிக்கப்பட்ட மீளத்தயாரிப்புக்கள் விண்ணப்பத்தாரியினால் இறுதி இசைவுச் சான்றிதழைப் பெறுவதற்காக நாணயத் திணைக்களக் கண்காணிப்பாளருக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

3. நாணயத்தாள்களை மீளத்தயாரித்தல் பற்றிய விடயங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

                   நாணயக் கண்காணிப்பாளர்
                   நாணயத் திணைக்களம்
                   இலங்கை மத்திய வங்கி
                   30, சனாதிபதி மாவத்தை
                   கொழும்பு 01.