வங்கியல்லா நிதி மற்றும் குத்தகைத் துறை

வங்கியல்லா நிதி மற்றும் குத்தகைத் துறை உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் என்பனவற்றை உள்ளடக்குகிறது. வங்கியல்லா நிதி மற்றும் குத்தகைத் துறையின் மேற்பார்வை பரீட்சிப்புக்கள், தொடர்ச்சியான கண்காணிப்பு, ஒழுங்குமுறைப்படுத்தல் ஒப்புதல்களை வழங்குதல், பணிப்புரைகள் மற்றும் முன்மதியுடைய தேவைப்பாடுகளை வழங்குதல், அதிகாரமின்றி நிதியியல் வியாபாரங்களை மேற்கொள்கின்ற மற்றும் அதிகாரமின்றி வைப்புக்களை ஏற்கின்ற கம்பனிகளை புலனாய்வு செய்தல் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் என்பனவற்றினூடாக மேற்கொள்ளப்படுகிறது. நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள், ஒழுங்குவிதிகள் மற்றும் விதிகள் முக்கியமாக குறைந்தபட்ச மூலதனப்போதுமை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், அறவிடமுடியா மற்றும் ஐயக் கடன்களுக்கான ஏற்பாடு, தனியொரு கடன்பாட்டாளர் வரையறைகள் மற்றும் பங்குரிமை மூலதன முதலீடுகள் மீதான வரையறை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன.

முன்மதியுடைய தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகாத சந்தர்ப்பங்கள் ஏதும் காணப்படுமிடத்து தண்டம், வியாபாரக் கட்டுப்பாடுகள், உரிமத்தினை இரத்துச் செய்தல் மற்றும்  ஏடுகள் போன்றவற்றை மேலும் புலனாய்வு போன்ற விதத்திலான தேவையான சீர்செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாணயச் சபைக்கும் வங்கியல்லா நிதியியல் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் நிதித்தொழில் சட்டம் அதிகாரங்களை வழங்குகிறது.

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் ஒழுங்குவிதிகளையும் மேற்பார்வையையும் வலுப்படுத்துவதற்காகவும் அதிகாரமளிக்கப்படாத நிதி வியாபாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தினை நீக்கி அதற்குப் பதிலாக இயற்றப்பட்ட 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் மூலம் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் ஒழுங்குவிதிகளும் மேற்பார்வையும் ஆளப்படுகின்றன.

இலங்கையின் உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் பட்டியல்

சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள்

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட தொகையினைக் கொண்ட மூலதனத்துடன் நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரினால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழொன்று அவசியமாகும்.

பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனங்களாக பதிவுசெய்யப்படுவதற்கு நான்கு வகையான நிறுவனங்கள் தகைமை பெற்றுள்ளன. அவை, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்வு வாய்ந்த வங்கிகள், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் பகிரங்கக் கம்பனிகள் (சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்) என்பனவாகும். நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களாக பணத்தினை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரின் முன்னொப்புதலுடன் அவை வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக் கடன்கள் போன்ற படுகடன் சாதனங்களை வழங்குவதன் மூலம் பணத்தினைக் கடன்பட்டுக் கொள்ளலாம்.

இலங்கையின் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்களின் பட்டியல்