பிரதேச அலுவலகங்கள்

வங்கித்தொழில் துறையின் உதவியுடன் குறிப்பிட்ட பிரதேசத்தின் உற்பத்தியாக்க மூலவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஊக்குவிப்புக்களையும் தூண்டுதல்களையும் வழங்கும் நோக்குடன் 1981 மாச்சில் மாத்தறையில் இலங்கை மத்திய வங்கியின் முதலாவது பிரதேச அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதேச அலுவலகங்கள் அனுராதபுரத்திலும் மாத்தளையிலும் முறையே 1982 மாச்சிலும் 1985 திசெம்பரிலும் திறந்து வைக்கப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை உயர்த்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நான்காவது பிரதேச அலுவலகம் யாழ்ப்பாணத்தில் 2010 யூலையிலும் ஐந்தாவது பிரதேச அலுவலகம் திருகோணமலையில் 2010 நவெம்பரிலும் ஆறாவது பிரதேச அலுவலகம் கிளிநொச்சியில் 2015 மேயிலும் திறந்து வைக்கப்பட்டன. 

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டத் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேம நிதிய பணிகளை வழங்குவதற்காக நுவரெலியாவில் 2016 சனவரியில் ஏழாவது பிரதேச அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும், 2017ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பிரதேச அலுவலகமானது கிளிநொச்சி பிரதேச அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதுடன் பிரதேச அலுவலகங்களின் எண்ணிக்கை தற்பொழுது ஆறாகக் காணப்படுகின்றது.

தற்பொழுது பிரதேச அலுவலகங்களும் மத்திய வங்கி நடவடிக்கைகளின் பிரதேச பிரசன்னத்தினைப் பேணுவதன் மூலமாக மத்திய வங்கியின் இரண்டு முக்கிய குறிக்கோள்களான பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பனவற்றைப் பேணுவதற்கும் பங்களித்துள்ளன.

பிரதேச அலுவலகங்களின் தொழிற்பாட்டுப் பிரதேசங்கள்

1. பிரதேச அலுவலகம் - மாத்தறை 

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள்

2. பிரதேச அலுவலகம் - அநுராதபுரம் 

அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள்

3. பிரதேச அலுவலகம் - மாத்தளை

கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்கள்

4. பிரதேச அலுவலகம் - திருகோணமலை 

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்

5. பிரதேச அலுவலகம்  - கிளிநொச்சி 

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்  மற்றும் மன்னார் மாவட்டங்கள்

6. பிரதேச அலுவலகம் - நுவரெலியா

நுவரெலியா, மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்கள்

மேலும், பிரதேச அலுவலகங்களின் முகாமைத்துவத் திணைக்களத்தின் கீழ் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

குறிக்கோள்கள்

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு சுமுகமாகவும் உரியநேரத்திலும் நிதியியல் உதவிகளை வழங்குதல், வழிகாட்டல்கள், சந்தை இணைப்புக்கள் கடன் வழங்கல் பொறிமுறையினை வலுப்படுத்தல் மற்றும் தொடர்பான ஆதரவுப் பணிகளின் இணைப்பு என்பனவற்றினை வசதிப்படுத்துவதன் மூலம் பிரதேச பொருளாதாரத்தினை ஊக்குவித்தல்.

பல்வேறுபட்ட விழிப்புணர்வு, கல்வியூட்டல், பயிற்சி, தொழில்நுட்ப மாற்றல்கள்/ களப்பயணங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக தொடர்பான பிராந்தியங்களில் வறுமையைக் குறைப்பதற்கும் பொருளாதார மற்றும் சமூக நிலமைகளை உயர்த்துவதற்கும் பங்களித்தல்.

பிரதேசங்களில் மத்திய வங்கியின் முக்கிய தொழிற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் இணைக்கவும் உதவியளித்தல்.

பிரதேச அலுவலகங்களின் தொழிற்பாடுகள்

பிரதேசத்தில் கிடைக்கத்தக்கதாகவுள்ள மூலவளங்களின்  அடிப்படையில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளையும் ஊக்குவிப்பதனூடாகவும் வேறுபட்ட பொருளாதார/ வியாபார துறைகளுக்கு ஆதரவளிப்பதனூடாகவும் பிரதேச அபிவிருத்திக்கு வசதியளித்தல்.

வருமான உருவாக்க நடவடிக்கைகளை ஊக்குவிப்பதனூடாகவும் கிராமிய சனசமூகத்தினரிடையே சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதனூடாகவும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பங்களித்தல்.

பிரதேச தரவுகள்/ தகவல்களை சேகரித்தல் மற்றும் தொகுத்தல் அத்துடன் விழிப்புணர்வினை அதிகரிக்கச் செய்வதற்காக பொருளாதார நிதியியல் தரவுகளையும் தகவல்களையும் பரப்புதல்.

முறைசார்ந்த வங்கித்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள், அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனங்கள், உற்பத்திகள், பணிகள் மற்றும் திட்டங்கள், தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு, நாணயத் தாள்களைப் போலியாகத் தயாரித்தல் என்பன தொடர்பாக கிராமிய சமூகத்தினர் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடையே ஆய்வரங்கு/ செயலமர்வுகள் நடத்துவதன் மூலம் நிதியியல் வசதிகளின் கிடைப்பனவு தொடர்பான செயற்பரப்பினை விரிவுபடுத்துவதுடன் விழிப்புணர்வினை உருவாக்குதல்.

பல்வேறுபட்ட விழிப்புணர்வு, கல்வியூட்டல், பயிற்சி, தொழில்நுட்ப மாற்றல்கள்/ களப்பயணங்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திச் செயற்பாடுகளை நடாத்துதல்.

பிரதேச திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் பிராந்தியத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பாதிக்கும் பிரதேசத்திற்கு உரித்தான பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கு மூலவள அளவீடுகளை மேற்கொள்ளுதல்.

இப்பிரதேசத்தில் மத்திய வங்கியின் குறிப்பிட்ட தொழிற்பாடுகளை மேற்கொள்ளுதல்.