நாணயக் கொள்கை தொடர்பூட்டல்

மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையினைக் கொண்டு நடத்துவது தொடர்பில் சாத்தியமானளவிற்கு கூடியளவு வெளிப்படைத்தன்மையினைப் பின்பற்றுவதற்கு கடப்பாடு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எட்டு அட்டவணையிடப்பட்ட திகதிகளில், மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைக்கான தீர்மானங்களையும் அத்தகைய தீர்மானங்களின் மீது செல்வாக்குச் செலுத்திய காரணிகளின் விளக்கங்களையும் சேர்த்து அறிவிக்கின்ற பத்திரிகை அறிவித்தலை வெளியிடுகின்றது. மத்திய வங்கியின் வெப்தளம் தேவையான போதெல்லாம் இற்றைப்படுத்தப்படுகிறது. வழமையாக, ஒவ்வொரு நாணயக் கொள்கை மீளாய்விற்குப் பின்னா் ஆளுநரினாலும் மூத்த மத்திய வங்கி அலுவலர்களினாலும் பத்திரிகை மாநாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும், மத்திய வங்கியின் மூத்த அலுவலர்கள் ஊடகங்களினால் அடிக்கடி பேட்டி காணப்படுகின்றனர்.

பொதுமக்களுக்குத் தகவல்களைப் பரப்புவதற்குப் பொறுப்பாக இருக்கும் மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களம், பத்திரிகை வெளியீடுகள் மற்றும் பத்திரிகை குறிப்புக்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்கிறது. நாணயக் கொள்கையினை நடத்துதல் மற்றும் பயன்மிக்க ஏனைய பொருளாதார விடயங்கள் தொடர்பான தகவல்கள் வாராந்த/ மாதாந்த குறிகாட்டிகள், மாதாந்த செய்தித் திரட்டுக்கள், செய்தி அளவீடுகள், பத்திரிகை வெளியீடுகள், ஆண்டறிக்கை மற்றும் ஏனைய வெளியீடுகள் வாயிலாக பரப்பப்பட்டு வருகின்றன.

கொள்கைக்கு கணிசமானளவு மாற்றங்கள் முன்மொழியப்படும் பொழுது, உத்தேச மாற்றங்களினால் பாதிக்கப்படக்கூடிய அமைப்புக்களுடன் உதாரணமாக வங்கியாளர் சங்கம், முதனிலை வணிகர்கள் சங்கம் என்பனவற்றுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. உரிமம் பெற்ற வங்கிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களுடன் ஆளுநர் மாதாந்தக் கூட்டங்களை நடத்துகின்றார். இக்கூட்டங்களில் நாணயச் சூழ்நிலை, மற்றைய பொருளாதார மற்றும் நிதியியல் அபிவிருத்திகள் ஆராயப்படுகின்றன. மத்திய வங்கியின் மூத்த அலுவலர்களினால் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளுடனும் முதனிலை வணிகர்களுடனுமான கூட்டங்கள் கிரமமாக நடத்தப்பட்டு வருகின்றன.