வங்கியின் தொழிற்பாடுகள்

மையத் தொழிற்பாடுகள்

இலங்கை மத்திய வங்கியின் மையத் தொழிற்பாடுகளாவன:

அ. நாணயக் கொள்கையை மேற்கொள்ளுதல்

நாணயக் கொள்கை என்பது, விலை உறுதிப்பாட்டின் பேரண்டப் பொருளாதார குறிக்கோளினை எய்தும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றில் பணத்தின் வழங்கலையும் செலவினையும் முகாமைப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுமொரு செயன்முறையாகும். இலங்கை மத்திய வங்கி இலங்கையில் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்குப் பொறுப்பாகவுள்ளது. இது கொள்கை வட்டி வீதங்களை நிர்ணயித்தல் மற்றும் பொருளாதாரத்தில் திரவத்தன்மையினை முகாமைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்பானதாகும். மத்திய வங்கியின் நாணயத் தொழிற்பாடுகள் பொருளாதாரத்திலுள்ள வட்டி வீதங்களின் மீது செல்வாக்குச் செலுத்தி கடன்பாட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குவோரின் நடத்தைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தி இறுதியில் பணவீக்க வீதத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. ஆகவே மத்திய வங்கி பணவீக்கத்தினை கட்டுப்படுத்தவும் அதனை விரும்பத்தக்கதொரு மட்டத்தில் பேணவும் நாணயக் கொள்கையை பயன்படுத்துகிறது.

ஆ. செலாவணி வீதக் கொள்கையினை மேற்கொள்ளுதல்

இலங்கை 2001 சனவரி 23ஆம் திகதியிலிருந்து சுதந்திரமாக மிதக்கவிடப்பட்ட செலாவணி வீத கொள்கையினை பின்பற்றுகின்றது. இது நாட்டின் செலாவணி வீதம் பொருளாதாரத்தில் காணப்படும் வெளிநாட்டுச் செலாவணிகளின் நிரம்பல் மற்றும் கேள்வியினால் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கின்றது. வெளிநாட்டுச் செலாவணியின் நிரம்பல் ஏற்றுமதி பெறுகைகள், தொழிலாளர் பணவனுப்பல்கள், சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் போன்ற பொருளாதாரத்திற்கான உட்பாய்ச்சல்களில் தங்கியிருக்கின்ற வேளையில் அதற்கான கேள்வி இறக்குமதிக் கொடுப்பனவுகள் மற்றும் கடன் மீள்கொடுப்பனவுகள் போன்ற வெளிப்பாய்ச்சல்களில் தங்கியிருக்கிறது.

எவ்வாறெனினும் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயத்தினை வழங்குவது மற்றும் ஈர்த்துக் கொள்வது என்பனவற்றினூடாக உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிடுவதற்கான உரிமையினை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தலையிடுவதன் நோக்கம் இரண்டு குறிக்கோள்களைக் கொண்டது. செலாவணி வீதத்தில் ஏற்படும் நியாயமற்ற குறுங்காலத் தளம்பல்களை மட்டுப்படுத்துவதற்காகவும் நடுத்தரகாலத்தில் நாட்டின் பன்னாட்டு ஒதுக்குநிலைமையினை கட்டியெழுப்புவதற்காகவும் மத்திய வங்கி சந்தையில் தலையிடுகின்றது.

மேலும் நாணயவிதிச் சட்டத்தின்படி, நாணயச் சபை பன்னாட்டு ஒதுக்குகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்படுகின்றது என கருதுகின்ற பொழுது, இலங்கை ரூபாவின் பன்னாட்டு உறுதித்தன்மை மீது அச்சுறுத்தல் ஏற்படுகின்றபொழுது அல்லது உறுதிப்பாட்டிற்கும் நாட்டின் தேசிய நலன்புரிகளுக்கும் பன்னாட்டுக் கொடுப்பனவுகள் அல்லது பணவனுப்பல்கள் இடர்நேர்வுகளை ஏற்படுத்துகின்ற பொழுது நாணயச் சபை பொருத்தமான கொள்கைகளை மேற்கொள்ளவேண்டியதுடன் நிதித்துறையில் பொறுப்பான அமைச்சரிடம் அறிக்கையொன்றினையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

இ. அலுவல்சார் பன்னாட்டு ஒதுக்குகளை முகாமைப்படுத்தல்

நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின்படி, நாட்டின் அலுவல்சார் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளின் முகாமைத்துவத்திற்கு இலங்கை மத்திய வங்கி பொறுப்புடையதாகும். நாணய விதிச் சட்டமானது, பன்னாட்டு ஒதுக்குகளின் பேணல் மற்றும் உள்ளமைப்பு, ரூபாவின் பன்னாட்டு உறுதிப்பாட்டினைப் பேணிக் காப்பதற்கான நடவடிக்கை, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகளின் செயற்பரப்பு மற்றும் பன்னாட்டு ஒதுக்குகளின் முகாமைத்துவம் தொடர்பில் நாணயச் சபையின் பொறுப்புக்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய விதத்தில் பன்னாட்டு ஒதுக்குகளின் முகாமைத்துவத்திற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பினை வழங்குகிறது. வெளிநாட்டு ஒதுக்குகளை முகாமைப்படுத்தும் விடயத்தில் இலங்கை மத்திய வங்கி பாதுகாப்பு, திரவத்தன்மை மற்றும் அதனால் கிடைக்கும் பெறுபேறுகள் மீது முக்கிய கவனத்தினைச் செலுத்துகின்றது.

பன்னாட்டு ஒதுக்குகள் பல்வேறு முக்கிய நாணயங்களில் குறித்துரைக்கப்பட்டிருப்பதுடன் நிலையான வருமானப் பிணையங்கள், பணச் சந்தைச் சாதனங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது ஒதுக்கின் முக்கிய நாணய உள்ளமைப்புக்கள் ஐ.அ.டொலர், ஸ்டேர்லிங் பவுண், யூரோ, யென், அவுஸ்திரேலியன் டொலர் மற்றும் சீன யுவான் என்பனவற்றில் வைத்திருக்கப்படுவதுடன் இது முக்கியமாக வெளிநாட்டு நாணயப் படுகடன் மீள்கொள்வனவுத் தேவைப்பாடுகள் மற்றும் நாணயங்களின் வருமான உருவாக்க இயலளவு என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

ஈ.  நிதியியல் முறைமையின் மேற்பார்வை

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, இலங்கை மத்திய வங்கி நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கக்கூடிய முறையியல் சார்ந்த இடர்நேர்வுகளைக் கண்காணித்து மட்டுப்படுத்துவதற்காக உண்மைப் பொருளாதாரத்துடனான இதன் செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு முழு நிதியியல் முறைமைகளையும் கண்காணித்து மேற்பார்வை செய்து வருகின்றது. முறையியல் சார்ந்த இடர்நேர்வு என்பது முறைமைக்குள் உள்ள ஒரு நிறுவனம் அல்லது குழுமத்துடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வினைப்போலன்றி முழு நிதியியல் முறைமையினதும் முறிவிற்கும் தடங்கலுக்கும் காரணமாகக் கூடிய இடர்நேர்வாகும். இதனை நிதியியல் முறைமைக்கு எவ்வித தீங்கும் இல்லாமல் கட்டுப்படுத்த முடியும். பேரண்ட முன்மதியுடைய ஒழுங்குவிதிகள் முறையியல் சார்ந்த இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துகின்ற வேளையில் நுண்பாக முன்மதியுடைய ஒழுங்குவிதிகள் தனிப்பட்ட நிறுவனங்கள்/ குழுமங்களின் இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துகின்றன. பேரண்ட முன்மதியுடைய ஒழுங்குவிதிகள் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைக்கும், நுண்பாக முன்மதியுடைய ஒழுங்குவிதிகளுக்குமிடையிலான இடைவெளியினை நிரப்புவதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பேரண்ட முன்மதியுடைய கொள்கையின் முக்கிய வகிபாகம் யாதெனில் முறையியல் சார்ந்த இடர்நேர்வாக நிதியியல் முறைமைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற மிகையான இடர்நேர்வுகள் மேற்கொள்ளப்படுவதனைக் கட்டுப்படுத்துவதேயாகும். நிதியியல் பணிகளின் ஏற்பாடுகளுக்கு பரந்தளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும் இவ்விடர்நேர்வு பொருளாதாரத்திற்கு பாரியளவு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது தொடர்பில் முறையியல் சார்ந்த இடர்நேர்வு நேரம் மற்றும் பிரிவுகளுக்கிடையிலான பரிமாணங்கள் இரண்டையும் கொண்டிருக்கிறது.

உ. வங்கிகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல்,         ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்

வங்கிகளும் தெரிந்தெடுக்கப்பட்ட வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களும் அவற்றின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் வைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களினது நலவுரித்துக்களைப் பாதுகாப்பதனையும் மேம்படுத்தும் விதத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்வது இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகும். தனிப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தலும் மேற்பார்வையும் நுண்பாக முன்மதியுடைய கொள்கை எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் நிதியியல் முறைமையில் வங்கித்தொழில் முறைமை ஆதிக்கம் செலுத்துகிறது. வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தலும் மேற்பார்வையும் வங்கித்தொழில் சட்டத்தினாலும் நாணய விதிச் சட்டத்தினாலும் ஆளப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி, இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரியாக விளங்குவதுடன் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இவை சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்) ஆகிய இரண்டு வகைகளின் கீழ் உரிமங்களை வழங்குகின்றது. வர்த்தக வங்கிகளுக்கும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்குமிடையிலான முக்கிய வேறுபாடு யாதெனில் முன்னையது பொதுமக்களிடமிருந்து கேள்வி வைப்புக்களை ஏற்றுக்கொள்ளவும் நடைமுறைக் கணக்குகளைப் பேணுவதற்கும் வெளிநாட்டு நாணய நடவடிக்கைகளில் முழு வீச்சில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்ட வேளையில் பின்னயது இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தலும் மேற்பார்வையும் வங்கித்தொழில் மேற்பார்வை தொடர்பில் பாசல் குழுவினால் நிர்ணயிக்கப்பட்டு பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உலகளாவிய போக்குகளுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட மேற்பார்வையினை நோக்கி நகர்கின்றது. இம்மேற்பார்வையானது வங்கித்தொழில் இடர்நேர்வுகளை அடையாளம் காணுவது, இடர்நேர்வுகளை முகாமைப்படுத்துவது மற்றும் அத்தகைய இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கான வங்கிகளின் இயலாற்றலை மதிப்பிடுவது என்பன மீது கவனத்தினைச் செலுத்துகின்றது.

இதன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகளின் ஒரு பகுதியாக, இலங்கை மத்திய வங்கி உரிமம் வழங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் வங்கிகளை மூடிவிடுதல், வங்கிகள் தொடர்பாக முன்மதியுடைய தேவைப்பாடுகள், நலிவுற்ற வங்கிகள் தொடர்பான தீர்மானம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைக்கிடுதல் என்பன தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பணிப்புரைகளை விடுக்கிறது. மேற்பார்வையின் பிரதான நுணுக்கங்கள் வங்கிகளின் தொடர்ச்சியான தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பு மற்றும் விழிப்புத்தன்மை மற்றும் வங்கிகளின் தலத்திலான காலாந்தரப் பரீட்சிப்புக்கள், வங்கி முகாமைத்துவத்துடனான கூட்டங்கள் மற்றும் வெளிக் கணக்காய்வாளர்களுடனான ஒத்துழைப்பு என்பனவற்றை உள்ளடக்கியிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி மூலதனப் போதுமை, திரவத்தன்மை, பாரிய வெளிப்படுத்துகைகள், சொத்துக்களின் தரம், செயற்படாக் கடன்களுக்கான ஏற்பாடுகள், தொடர்பான தரப்பினரின் கொடுக்கல்வாங்கல்கள், வருமான அங்கீகாரம், பங்குடமை, முதலீடு, பணிப்பாளர்களினதும் மூத்த முகாமைத்துவத்தினரதும் பொருத்தம் மற்றும் தகுதி மற்றும் நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் வெளிப்படுத்துகை என்பன உள்ளிட்ட பல்வேறுபட்ட முன்மதியுடைய தேவைப்பாடுகளுக்கு வங்கிகள் இணங்குவது தொடர்பில் கண்காணிக்கிறது. மேலும், வங்கிகளிலுள்ள உள்ளகக் கட்டுப்பாடுகள், கம்பனி ஆளுகையின் நியமங்கள் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் என்பனவும் மதிப்பிடப்பட்டன. மேலும், இலங்கை மத்திய வங்கி வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடப்பாடுகள் மீதான வழிகாட்டல்களைத் தருகின்ற வாடிக்கையாளர் சாசனத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நிதி வியாபாரச் சட்டம், நிதிக் குத்தகைக்கு விடுகின்ற சட்டம் மற்றும் நுண்பாக நிதிச் சட்டம் என்பனவற்றின் கீழ் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள், சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் மற்றும் உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள் போன்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்கிறது.

வைப்பாளர்களின் நிதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் நிதிக் கம்பனிகளுக்கும் கட்டாயத் தேவைப்பாடான ''இலங்கை வைப்புக் காப்புறுதி திட்டத்தினை" தொழிற்படுத்துகிறது.

பொதுமக்கள் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கி ''பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிதியியல் நிறுவனங்கள்" தொடர்பாக காலாந்தர ரீதியாக பத்திரிகை வெளியீடுகளை வெளியிடுகின்றது.

உள்நாட்டுத் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் இலங்கை மத்திய வங்கி முதனிலை வணிகர்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்கிறது. 

உள்நாட்டுப் பணம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி நாணய விதிச் சட்டத்தின் கீழ் பணத் தரகர்களை அங்கீகரித்து மேற்பார்வை செய்கிறது.

வேறு எங்கேனும் நிதிகளைப் பெறமுடியாது நிதியியல் இடர்ப்பாடுகளுக்குள்ளாகியிருக்கும் வங்கிகளுக்கு நிதியினைக் கடனாக வழங்குமிடத்து அது இறுதிக் கடன் ஈவோன் வசதியைப் பயன்படுத்துகிறது. இறுதிக் கடன்களை வழங்கும் வசதியின் முக்கிய நோக்கம் தற்காலிகமான திரவத்தன்மைப் பிரச்சனைகளின் காரணமாக வைப்பாளர்கள் பதட்டமடைந்து அளவுக்கதிகமாக நிதிகளை மீளப்பெற்றுக் கொள்வதனால் ஏற்படும் குழப்ப நிலைமையினைத் தடுப்பதன் மூலம் வங்கித்தொழில் மற்றும் நிதியியல் முறைமைகளின் உறுதிப்பாட்டினைப் பேணிப் பாதுகாப்பதேயாகும்.

ஊ. தீர்ப்பனவு வசதிகளின் ஏற்பாடு மற்றும் கொடுப்பனவு முறைமையினை ஒழுங்குபடுத்தல்

நன்கு தொழிற்படுகின்றதும் பாதுகாப்பானதுமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையினைப் பேணுவது உறுதியான நிதியியல் முறைமைக்கு இன்றியமையாததொரு அம்சமாகும். கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுச் சட்டத்தின் நியதிகளில், இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவு, தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளினை ஒழுங்குமுறைப்படுத்தவும் மேற்பார்வை செய்யவும் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இலங்கை மத்திய வங்கி தேசிய கொடுப்பனவு முறைமைக்கான திட்டமொன்றினைத் தயாரிப்பதற்கும் கொடுப்பனவு, தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை உருவாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான வழிகாட்டலையும் தலைமைத்துவத்தினையும் வழங்குவதற்குமான பொறுப்பினைக் கொண்டிருக்கிறது. மேலும், இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவு முறைமைகளிலுள்ள முக்கிய ஆர்வலர்களை உள்ளடக்கிய தேசிய கொடுப்பனவுச் சபைக்கு தலைமை தாங்குகிறது. தேசிய கொடுப்பனவுகள் சபை, இலங்கையில் நிதியியல் உட்கட்டமைப்பின் அபிவிருத்திக்கு விதந்துரைப்புக்களை வழங்குகிறது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையான "லங்கா செட்டில் முறைமை" இன் தொடர்ச்சியான தொழிற்பாட்டினை உறுதிப்படுத்துகின்றது. லங்கா செட்டில் இரண்டு முறைமைகளை உள்ளடக்கியிருக்கிறது: அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் ''லங்கா செகுயர் முறைமை". அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை லங்கா செட்டில் முறைமையின் நிதியத் தீர்ப்பனவுக் கூறாக இருப்பதுடன் இது பாரிய பெறுமதி மற்றும் நேர முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பனவுகளுக்கு வசதியளிப்பதுடன் அதேநேரத்தில் தீர்ப்பனவு இடர்நேர்வுகளையும் ஒழித்துவிடுகின்றது. வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள், அரச பிணையங்கள் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், தேறிய காசோலைத் தீர்ப்பனவு கொடுக்கல்வாங்கல்கள், வங்கிகளுக்கிடையேயான சில்லறைக் கொடுப்பனவு முறைமைகள் மற்றும் பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆழி கொடுக்கல்வாங்கல்கள் என்பன அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையினூடாகத் தீர்ப்பனவு செய்யப்படும் முக்கிய வகைகளாகக் காணப்பட்டன. லங்கா செகுயர் முறைமையானது அரச பிணையங்களுக்கான பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் பத்திரங்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமை என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி சுமுகமான தொழிற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக லங்கா செட்டில் முறைமையின் பங்கேற்பாளர்களுக்கு கட்டணங்களின்றி பிணைய மயப்படுத்தப்பட்ட தன்மையின் அடிப்படையில் நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதிகளை வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு வசதிகளை வழங்குவதற்கு பொறுப்புடையதாகும். வங்கிகளுக்கெல்லாம் வங்கியாளர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கி லங்கா செட்டில் முறைமையில் பங்கேற்பாளர்களாகவுள்ள இந்நிறுவனங்களுக்குத் தீர்ப்பனவு வசதிகளை வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி காசோலைகள், வங்கி வரைவுகள் மற்றும் தலத்திற்கு வெளியேயான நிதிய மாற்றல்கள் போன்ற சில்லறைக் கொடுப்பனவுகளின் தீர்ப்பனவிற்கான வசதிகளை வழங்குவதற்கும் பொறுப்புடையதாகும். சில்லறைக் கொடுப்பனவுச் சாதனங்களுக்கான தீர்வுத் தொழிற்பாடுகள் இலங்கை மத்திய வங்கிக்கும் வர்த்தக வங்கிகளுக்கும் கூட்டாகச் சொந்தமான கம்பனியான லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொடுப்பனவு அட்டைகள், செல்லிட மற்றும் இணையத்தள வங்கித்தொழில் போன்ற இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகள் மற்றும் சாதனங்களின் அபிவிருத்திகளின் காரணமாக நாட்டிலுள்ள ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் பாதுகாப்பானதும் சுமுகமானதுமான தொழிற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கான பணிப்புரைகள், வழிகாட்டல்கள், சுற்றறிக்கைகள் மற்றும் முறைமையின் விதிகளைத் தேவையான நேரங்களில் விடுப்பதற்கான பொறுப்பு மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எ. தேசிய நாணயத்தின் வெளியீடும் விநியோகமும்

நாணய விதிச் சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கி இலங்கையில் சட்ட ரீதியான நாணயமான நாணயத் தாள்களையும் குத்திகளையும் வெளியிடுவதற்கான பிரத்தியேக உரிமையினைக் கொண்டுள்ளது. நாணயத்தின் வழங்கல் முக்கியமாக ஒவ்வொரு நாணய இனத்திற்குமான கொடுக்கல்வாங்கல் கேள்வியினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நிதித் துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் இனவகைகள், பரிமாணங்கள், வடிவமைப்புக்கள் மற்றும் அவற்றின் பண்புகள் பற்றி விபரித்தல் வேண்டும். தற்பொழுது நாணயத் தாள்களில் ஒன்பது இனவகைகளும் (ரூ.5,000, ரூ.2,000, ரூ.1,000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10) காணப்படுவதுடன் நாணயக் குத்திகளில் 10 இன வகைகளும் (ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1, சதங்கள் 50, 25, 10, 5, 2 மற்றும் 1) சுற்றோட்டத்திலிருக்கின்றன. உயர் இன நாணயத் தாள்களின் போலித் தயாரிப்புக்களைத் தவிர்க்கும் விதத்தில் அவற்றின் பாதுகாப்புப் பண்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்களின் தரத்தினை உயர்த்துவதற்காக தூய நாணயத் தாள் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த நாணயத் தாள்களையும் குத்திகளையும் கூட வெளியிட்டு வருகின்றது.

ஏ. பொருளாதார தரவுகளையும் புள்ளிவிபரங்களையும் தொகுத்தல், பரப்புதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்

பொருளாதாரத் தரவுகளையும் புள்ளி விபரங்களையும் தொகுத்தல், பரப்புதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதில் காணப்படும் முக்கிய வகிபாகம், மத்திய வங்கி, பேரண்டப் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்குத் தேவையான புள்ளிவிபரங்களை வடிவமைத்தல், சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள், அரசாங்கம்/ தனியார் முகவர்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புக்களுக்கு வழங்குதல் என்பனவற்றை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துவதாகும். இது உண்மைத் துறை, நாணயத் துறை, நிதியியல் துறை, இறைத் துறை, வெளிநாட்டுத் துறை மற்றும் மாகாணப் புள்ளிவிபரங்கள் என்பனமீதான தரவுகளை உள்ளடக்குகிறது. இவற்றிற்குப் புறம்பாக மத்திய வங்கி பொருளாதாரம், நிதி மற்றும் வியாபார அளவீடுகளையும் மேற்கொள்கிறது. தரவுகளும் புள்ளிவிபரங்களும் அவை தெளிவான, தூய்மையான விதத்தில் சரியான நேரத்தில் செலவுச் சிக்கனமான முறையில் திரட்டப்பட்டு அத்துடன்/ அல்லது பரப்பப்படுகிறது/ வெளியிடப்படுகிறது.  இது பொருளாதாரத்திலும் நிதியியல் முறைமைகளிலுமுள்ள தன்மைகளையும் போக்குகளையும் எடுத்துக்காட்டுவதற்கும் அதேபோன்று ஆராய்ச்சிக்கும் பகுப்பாய்வுகளுக்கும் உதவுகிறது. இது தொடர்பான வகிபாகம் தரவு பயன்படுத்துனர்களுக்கும் அத்தகைய தரவுகளையும் புள்ளிவிபரங்களையும் பரப்பப்பட்ட தகவல்களை புரிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்வதற்காக மீள தயாரிக்கின்ற மற்றையவர்களுக்கும் உதவுவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஐ.  அரசாங்கம் மற்றும் அதன் முகவர்களுக்கான வங்கியாளராக தொழிற்படுவதுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் அரச பிணையங்களுக்காக வர்த்தக வங்கியல்லா முதனிலை வணிகர்களுக்குமான நடைமுறைக் கணக்கு வசதிகளின் ஏற்பாட்டாளராகவும் தொழிற்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி அரசிற்கான வங்கியாளர் என்ற முறையிலும் அரசாங்கத்தின் அலுவல்சார் வைப்பாளர் என்ற ரீதியிலும் (நாணயவிதிச் சட்டங்கள் 106 மற்றும் 107ஆம் பிரிவுகள்) பொதுத்திறைசேரி, ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரச முகவர்களுக்கான நடைமுறைக் கணக்கினை பேணுகின்றது. தற்பொழுது மேலேகுறிப்பிடப்பட்டவாறு அரசாங்கம் மற்றும் ஏனைய முகவர்களின் சார்பில் மத்திய வங்கி ஏறத்தாழ 60 கணக்குகளைப் பேணுகின்றது. இதற்குப் புறம்பாக, இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கணக்குகளைப் பேணுகின்றது.

மேலும் நாணயவிதிச் சட்டத்தின் 89ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்ட நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் இறை வருமானத்தில் 10 சதவீதம் வரையான உச்சவரையறைக்குட்பட்டு கட்டணமெதுவுமின்றி அரசாங்கத்திற்கு தற்காலிக முற்பணங்களை வழங்குகின்றது.

வங்கிகளின் வங்கியாளர் என்ற முறையில் மத்திய வங்கி, வினைத்திறன் மிக்க வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவினை உறுதிப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் முதனிலை வணிகர்களுக்கும் நடைமுறைக் கணக்கு வசதிகளை வழங்குகின்றது.

 

முகவர் தொழிற்பாடுகள்

மேலும், இலங்கை மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பின்வரும் முகவர் தொழிற்பாடுகளையும் ஆற்றுகின்றது:

அ. அரச படுகடனின் முகாமைத்துவம்

நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின்படி, அரசாங்கத்தின் இறை முகவர் என்ற முறையில் பொதுப்படுகடனின் வழங்கல், தீர்த்தல் மற்றும் முகாமைத்துவம் என்பனவற்றிற்கு இலங்கை மத்திய வங்கி பொறுப்பாக இருக்கின்றது. முக்கிய குறிக்கோள் யாதெனில், நடுத்தரத்திலிருந்து நீண்ட காலப்பகுதியொன்றில் இடர்நேர்வின் முன்மதியுடைய அளவொன்றுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் அரசாங்கத்தின் நிதியியல் தேவைப்பாடுகளையும் கொடுப்பனவுக் கடப்பாடுகளையும் சாத்தியமானளவிற்கு குறைந்த செலவில் பூர்த்தி செய்யப்படுவதனை உறுதிப்படுத்துவதேயாகும்.

இலங்கை மத்திய வங்கியினதும் திறைசேரியினதும் அலுவலர்களை உள்ளடக்கிய உள்நாட்டுப் படுகடன் முகாமைத்துவக் குழு, பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட வரையறைக்குள் அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தினைத் தீர்மானிக்கிறது.

இலங்கை மத்திய வங்கி பல்வேறு முதிர்ச்சிகளைக் கொண்ட குறுங்கால திறைசேரி உண்டியல்கள் மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட கால திறைசேரி முறிகள் போன்ற அரச பிணையங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டிக் கொள்கிறது. திறைசேரி உண்டியல்கள் உள்நாட்டுத் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வழங்கப்படுகின்ற வேளையில், திறைசேரி முறிகள் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் வழங்குவதற்காக அரச பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்களினூடாக கிரமமான ஏலங்களை நடத்தி வருகின்றது. திறைசேரி உண்டியல்களும் முறிகளும் பத்திரங்களற்ற வடிவத்தில் வழங்கப்பட்டு வருவதுடன் மத்திய வைப்பக மற்றும் அரச பிணையங்களுக்கான தலைப்பு பதிவகமாகவுமுள்ள ''லங்கா செகுயர்" இல் கணக்கு வைக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளை வெளியிட்டு வருவதுடன் நடுத்தர கால/ நீண்ட கால நிலையான வீதத்தில் நாட்டிற்கான முறிகளை வழங்குவதன் மூலம் பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்து நிதிகளைத் திரட்டிக் கொள்கிறது.

ஆ. வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம்

செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை முகாமைப்படுத்துவதில் அரசாங்கத்தின் முகவர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கி அதன் கடமைகளையும் தொழிற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. முக்கிய தொழிற்பாடுகள் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான கொள்கைகளை உருவாக்குதல், குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் ஒப்புதல்களையும் அனுமதிகளையும் வழங்குதல், நடைமுறைக் கணக்கு கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் தாராளமயப்படுத்தப்பட்ட மூலதனக் கணக்கு கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிநாட்டுச் செலாவணியின் உட்பாய்ச்சல்களையும் வெளிப்பாய்ச்சல்களையும் கண்காணித்தல் மற்றும் சிறந்த நடவடிக்கை முறைகள் தொடர்பில் அதிகாரம்பெற்ற வணிகர்களுக்கு ஆலோசனை வழங்குதல் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.

தற்பொழுது வர்த்தகத்திலுள்ள பொருட்கள் மற்றும் பணிகள் தொடர்பான வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் (அதாவது நடைமுறைக் கணக்கு கொடுக்கல்வாங்கல்கள்) வெளிநாட்டுச் செலாவணியிலுள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ள வணிகர்களினூடாக (முக்கியமாக வங்கிகள்) கொடுக்கல்வாங்கல்களின் நம்பகத்தன்மையினை அடையாளம் காண்பதற்கான அவர்களின் நெருக்கமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்குட்பட்டு அவர்களினூடாக கட்டுப்பாடுகளெதுவுமின்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, உண்மை அல்லது நிதியியல் சொத்துக்களின் (அதாவது மூலதனக் கணக்கு கொடுக்கல்வாங்கல்கள்) கையேற்பு தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள் ஓரளவிற்குத் தாராளமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுவான அனுமதியின் நியதிகளின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருந்தாலொழிய சிலவற்றிற்கு மத்திய வங்கியின் ஒப்புதல் தேவைப்படுத்தப்படுகிறது.

முதலீட்டாளர் நம்பிக்கையினை உயர்த்துதல், வெளிநாட்டு ஒதுக்குகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை உறுதிப்படுத்துதல் என்பனவற்றினைக் கருத்திற் கொண்டு, வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை குறிப்பாக, உலகளாவிய வியாபார நடவடிக்கைகளில் இலங்கையினை மேம்படுத்துவதற்காக பேரண்டப் பொருளாதாரக் கொள்கை நிலையுடன் இசைந்து செல்லும் விதத்தில் மூலதனக் கணக்குக் கொடுக்கல்வாங்கல்களை மேலும் தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இ. நிதிய முகாமைத்துவம் மற்றும் ஊ.சே. நிதியத்தின் கட்டுக்காப்பு

ஊழியர் சேம நிதியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழியர் சேம நிதியம் இலங்கையின் மிகப் பெரிய ஓய்வுகால நிதியமாக விளங்கி வருகின்றது. ஊ.சே. நிதியச் சட்டத்தின் நியதிகளின் கீழ், இலங்கை மத்திய வங்கி நிதியத்தின் கட்டுக்காப்பாளராகவும் நிதிய முகாமைத்துவத்திற்குப் பொறுப்பாகவும் இருந்து வருகின்றது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய நடவடிக்கைகளாக உறுப்பினர் பங்களிப்புக்களையும் மேலதிகக் கட்டணங்களையும் சேகரித்தல், உறுப்பினர் கணக்குகளைப் பேணுதல், மிகையான நிதியங்களை முதலீடு செய்தல், உறுப்பினர் கணக்குகளுக்கு வட்டியை வரவு வைத்தல் மற்றும் நன்மைபெறுநர்களுக்கு நன்மைகளை கொடுப்பனவு செய்தல் என்பன காணப்படுகின்றன.

ஈ. நிதியியல் வசதிகளை வழங்குவதற்கு வசதியளித்தல்

நிதியியல் வசதிகள் வழங்கப்படுவதனையும் நாட்டின் சமச்சீரான வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்காக, அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கி, நிதியியல் வசதிகளை கிடைக்கச் செய்வதனை அதிகரிப்பதற்கும் விழிப்புணர்வினைக் கட்டியெழுப்புவதற்குமான பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களினூடாகத் தேவையான துறைகளுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் நிதியினை வழங்குவதன் மூலம் இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கை மத்திய வங்கி மூன்று முக்கிய துறைகளான வேளாண்மை மற்றும் விலங்கு வளர்ப்பு, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் நுண்பாக நிதி என்பனவற்றினை முக்கிய கவனத்திற்கொண்டு பல்வேறு மீள் நிதியிடல் திட்டங்கள், வட்டி உதவுத்தொகை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொடுகடன் உத்தரவாத்திட்டங்கள் என்பனவற்றையும் கொடுகடன் வழங்கல் துணைநிரப்புப் பணிகளையும் வழங்கியது. முக்கியமாக நிதியியல் அறிவாற்றல், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி, தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பம் போன்றவற்றினை முக்கிய கவனத்தில் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன. கொடுகடன் திட்டங்கள் மற்றும் கொடுகடன் துணைநிரப்பு பணிகள் இலங்கை அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி, கொடை முகவர்கள் மற்றும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் நிதியிடப்பட்டன.

உ. பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடலைத் தடைசெய்தல், கண்டுபிடித்து புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தலுக்கான நிதியியல் உளவறிதல் பணிகள்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாட்டு நியதிகளின் கீழ் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு 2006 மாச்சில் உருவாக்கப்பட்டது. சட்டத்தின் கீழ் மேதகு சனாதிபதியினால் செய்யப்பட்ட கட்டளைகளின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியிலுள்ள நிதியியல் உளவறிதல் பிரிவு, பிரிவொன்றாகத் தொழிற்படுவதுடன் நிதியியல் பிரிவு ஒன்றாகத் தொழிற்படுவதற்காக குறித்துரைக்கப்பட்ட நிறுவனமாக விளங்கும். நிதியியல் உளவறிதல் பிரிவின் முக்கிய தொழிற்பாடுகள் நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு பணம் தூயதாக்கல், பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் மற்றும் சட்டத்திற்கு மாறான வேறு ஏதேனும் நடவடிக்கைகளுடனான சாத்தியமான தொடர்புகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திற்கான நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் மீதான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல். சந்தேகத்திற்கிடமான கொடுக்கல்வாங்கல்களைப் புலனாய்வு செய்தல், தொடர்பான சட்டத்தினை நடைமுறைக்கிடும் முகவர்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்குத் தகவல்களைப் பரப்புதல், அறிக்கையிடும் நிறுவனங்களின் பரீட்சிப்புக்களை நடத்துதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. நிதி வியாபாரம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரம் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் என்பன நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களாக விளங்குகின்றன.