நாணயக் கொள்கைக் கருவிகள் மற்றும் நடைமுறைப்படுத்தல்

நாணயக் கொள்கைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதற்காகப் பரந்தளவிலான கருவிகளை மத்திய வங்கி கொண்டிருக்கின்றது. தற்போது, நாணயக் கொள்கையானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைக் கருவிகளின் மீது பெருமளவு தங்கியிருக்கின்றது. இதன் விளைவாக, தற்போது பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான நாணயக் கொள்கைக் கருவிகளாக  கொள்கை வட்டி வீதங்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் வர்த்தக வங்கிகளின் வைப்புப் பொறுப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகள் என்பன காணப்படுகின்றன. நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முதலாவது நடவடிக்கை யாதெனில் திரவத்தன்மை எதிர்வு கூறலாகும். (விபரங்களைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்)

 

கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்

தற்போது, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையினைத் தீவிரமான திறந்த சந்தைத் தொழிற்பாட்டு முறைமையின் கீழ் மேற்கொண்டு வருகின்றது. முறைமையின் முக்கிய கூறுகளாக  (i) வங்கியின் முக்கிய கொள்கை வீதங்களினால் அதாவது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினால் உருவாக்கப்பட்ட வட்டி வீத வீச்சு மற்றும் (ii) திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பன காணப்படுகின்றன.

  1. உத்தேசிக்கப்பட்ட பணவீக்கப் பாதையினை எய்துவதற்கான முக்கிய கருவிகளாக மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதமும் (முன்னாள் மீள்கொள்வனவு வீதம்) துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் (முன்னாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்) விளங்குவதுடன் இவை பணச் சந்தைகளில் ஓரிரவு வட்டி வீதங்களுக்கான தாழ்ந்த மற்றும் உயர் எல்லைகளை உருவாக்குகின்றன. வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையின் மீதான முக்கிய சமிக்ஞைகளை வழங்குகின்ற பொறிமுறையாக விளங்குகின்ற இவ்வீதங்கள் கிரமமான அடிப்படையில் வழமையாக ஆண்டொன்றிற்கு எட்டுத் தடவைகள் மீளாய்வு செய்யப்படுவதுடன் அவசியமானவிடத்து திருத்தியமைக்கப்படுகின்றன.
  2. நாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களுக்குத் துணைநில் வசதிகள் கிடைக்கத்தக்கதாக இருக்கும். அதாவது ஏலமொன்றிற்குப் பின்னரும் கூட, பங்கேற்பாளரொருவரிடம் விஞ்சியளவிலான பணம் இருக்குமாயின் துணைநில் வைப்பு வசதியின் கீழ் அத்தகைய நிதியினை வைப்புச் செய்ய முடியும். அதேபோன்று, பங்கேற்பாளரொருவருக்குப் பற்றாக்குறையினை ஈடுசெய்வதற்குத் திரவத்தன்மை தேவைப்படுமாயின், துணைநில் கடன்வழங்கல் வசதியின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு அடிப்படையொன்றில் நிதியினைக் கடனாகப் பெற முடியும். இதற்கமைய, இவ்வசதிகள் ஓரிரவு வட்டி வீதங்களின் பரந்தளவிலான தளம்பல்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  3. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஒன்றில் திரவத்தன்மை மிகையாக இருக்குமிடத்து அதனை ஈர்த்துக் கொள்வதற்காகவும் அல்லது திரவத்தன்மை பற்றாக்குறையாகக் காணப்படுமாயின் திரவத்தன்மையினை உள்ளீடு செய்வதற்காகவும் மேற்கொள்ளப்படுவதுடன் இதன்மூலம் ஓரிரவு வட்டி வீதங்களில் உறுதிப்பாடு பேணப்படுகின்றது. அரச பிணையங்களை நிரந்தர அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் கொள்வனவு செய்வதற்காக/ விற்பனை செய்வதற்காக ஏலங்களினூடாகத் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. (திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற செய்முறையின் விரிவான விவரணமொன்றினைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்). ஏலமானது பல் விலைக்குறிப்பீடு, பல் விலை முறைமைகள் என்பவற்றின் மீது இடம்பெறுகின்றன. பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குறுங்கால ஏலங்களிலும் மூன்று வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் ஒவ்வொரு நீண்ட கால ஏலங்களிலும் ஆறு வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியுமென்பதுடன் வெற்றி பெறுகின்ற விலைக்குறிப்பீட்டாளர்கள் தொடர்பான விலைக்குறிப்பீடுகளில் குறிப்பீடு செய்த வீதங்களில் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வர்.

 

நியதி ஒதுக்குத் தேவைப்பாடு

நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது வைப்புப் பொறுப்புக்களின் விகிதமாகக் காணப்படுவதுடன் இது மத்திய வங்கியுடன் காசு வைப்பொன்றாகப் பேண வேண்டுமென உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளைத் தேவைப்படுத்துகின்றது. நாணய விதிச் சட்டத்தின் கீழ், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட வீதங்களில் மத்திய வங்கியுடன் ஒதுக்குகளைப் பேணுமாறு தேவைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரூபா நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் கேள்வி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பன நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளுக்குட்பட்டனவாகும்.

நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது கடந்த காலத்தில் பணநிரம்பலின் மீது செல்வாக்கினைச் செலுத்துவதற்குப் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், நாணயக் கொள்கையின் சந்தை சார்ந்த தன்மையினை மேம்படுத்துகின்ற மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மீது நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பாராதீனப்படுத்தக் கூடிய நிதிகளின் உள்ளார்ந்த செலவினைக் குறைக்கின்ற நோக்கில் கிரமமான நாணய முகாமைத்துவ வழிமுறையொன்றாக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் மீது தங்கியிருக்கும் தன்மை படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது. ஆகவே, தற்போது மத்திய வங்கி, சந்தையில் விடாப்பிடியாகக் காணப்படுகின்ற திரவத்தன்மைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினைப் பயன்படுத்துகின்றது. (நியதி ஒதுக்கு தேவைப்பாடு எவ்வாறு கணிக்கப்படுகின்றதென்பது தொடர்பான விபரங்களைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்). 

 

ஏனைய கொள்கைக் கருவிகள்

மேலும், பொருளாதாரத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, மத்திய வங்கியானது கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டி வீதத்தின் மீதான உச்சவரம்பு, தார்மீகக் கடப்பாடுகள் அதேபோன்று நாணய முகாமைத்துவ நோக்கத்திற்காக தொடர்பூட்டல் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.