வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை ஒரு ஓரிரவுச் சந்தையாக விளங்குவதுடன் வர்த்தக வங்கிகளுக்கிடையே கடன்வழங்கல் மற்றும் கடன்பாடுகளுக்கு வசதியளிப்பதன் மூலம் வர்த்தக வங்கிகள் அவற்றின் உடனடி திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு முக்கியமாக உதவுகிறது. இக்கொடுக்கல்வாங்கல்கள் அவற்றின் தன்மையில் மிகக் குறுகிய காலத் தன்மையினைக் கொண்டனவாக இருப்பதுடன் சந்தையில் திரவத்தன்மையின் கேள்வி மற்றும் நிரம்பலைப் பிரதிபலிப்பதாகவுமுள்ளது. அழைப்புப் பணச் சந்தைக்கு ஏற்புடைத்தான வட்டி வீதங்கள் வங்கிகளுக்கிடையிலான அழைப்பு வீதம் என அழைக்கப்படுகிறது. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் என்பது கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதியினால் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதமாகும். இது ஒவ்வொரு வேலை நாளன்றும் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையின் ஒழுங்கானதும் உறுதியானதுமான தொழிற்பாடு வங்கித்தொழில் முறைமையில் குறுங்கால வட்டி வீதங்களைப் பேணுவதற்கும் திரவத்தன்மை இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் முக்கியமானதாகும். வங்கிகளுக்கிடையிலான அழைப்பு வீதங்களில் அடிக்கடி ஏற்படும் தளம்பல்கள் துணைநில் வீத வீச்சுக்களுக்கிடையில் இருந்த போதும் கூட, அத்தகைய மாற்றங்கள் அழைப்புப் பணவீதத்தினை அடித்தள அளவுக்குறியீடாகப் பயன்படுத்தும் ஏனைய சந்தை வீதங்கள்/ விலைகளின் பாரிய தளம்பல்களுக்குத் தூண்டுதலாக விளங்கும் என்பதனால் அது விரும்பத்தக்கதொன்றல்ல.

பணச் சந்தையின் உறுதியான தன்மையானது, தொடர்பான கொள்கை வீதங்களில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பனவற்றின் முன்கூட்டிய ஏற்பாடுகளின் மூலமாக சந்தைத் திரவத்தன்மை முகாமைப்படுத்தப்படுவதன் மூலம் ஆதரவளிக்கப்படுகிறது.

நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் குறிக்கோள் யாதெனில் பணச் சந்தையின் உறுதிப்பாட்டினைப் பேணுவதேயாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்துவதன் மூலம் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தபடுகின்றது. அதாவது

(i)   துணைநில் வசதிகளை வழங்குவது,
(ii)  நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினை நடைமுறைக்கிடுவது மற்றும்
(iii) தார்மீக நடைமுறைகள்

இதனை அடையும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கி துணைநில் வீத வீச்சிற்குள், குறைந்த தளம்பல்களுடன் விரும்பத்தக்க மட்டமொன்றில் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணவீதத்தினை (அழைப்பு வீதம்) பேணுவதற்கு முயற்சிக்கிறது. அழைப்பு வீதத்தின் விரும்பத்தக்க மட்டம் நாணயக் கொள்கையின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

துணைநில் வீத வீச்சு

இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வீத வீச்சு இரண்டு முக்கிய கொள்கை வீதங்களை உள்ளடக்கியிருக்கிறது

(i)    துணைநில் வைப்பு வசதி வீதம்
(ii)    துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்

இவ்விரண்டு வீதங்களும் அழைப்புப் பண வீதங்களுக்கான முறையே கீழ் எல்லை மற்றும் மேல் எல்லைகளை வழங்குகின்றன. வீச்சின் நோக்கம், சந்தையிலுள்ள குறுங்கால வட்டி வீதங்களில் ஏற்படும் பாரிய தளம்பல்களுக்கான சாத்தியங்களை மட்டுப்படுத்துவதேயாகும். மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையின் மீதான ''சமிக்ஞை பொறிமுறை" யாக விளங்கும் இவ்வீதங்கள் கிரமமான அடிப்படையில், வழமையாக மாதமொரு முறை மீளாய்வு செய்யப்படுவதுடன் தேவையானவிடத்து திருத்தப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்படும் மாற்றங்கள் வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச்சந்தையிலுள்ள வட்டி வீதங்களின் மீது உடனடியான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. அழைப்புச் சந்தை வீதங்களில் ஏற்படும் மாற்றங்கள், மிகக் குறுகிய காலப்பகுதியொன்றிற்குள், ஏனைய குறுங்கால பணச் சந்தை வீதங்களான திறைசேரி உண்டியல்கள், வர்த்தகப் பத்திரங்கள் போன்றவற்றின் விளைவு வீதங்களினதும் வங்கிகளின் குறுங்கால கடன்வழங்கல் வீதங்களினதும் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. இம்மாற்றங்கள், காலதாமதத்துடன் வங்கிகள் மற்றும் மற்றைய கடன்வழங்கல் நிறுவனங்களின் நடுத்தர கால கடன்வழங்கல் மற்றும் வைப்பு வீதங்களிலும் அதேபோன்று மற்றைய சந்தை விளைவு வீதங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

துணைநில் வசதிகள்

பங்கேற்கும் நிறுவனங்கள், அதாவது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் போன்ற பங்கேற்கும் நிறுவனங்களும் முதனிலை வணிகர்களும் இவ்வசதிகளின் கீழேயே நாளொன்றிற்கு மத்திய வங்கியிடமிருந்து நிதிகளை பெறுகின்றன அல்லது மத்திய வங்கியுடன் நிதிகளை வைப்புச் செய்கின்றன. எனவே, இவை ஓரிரவு வசதிகளாகும். பங்கேற்கும் நிறுவனங்கள் அவற்றின் மிகையான நிதிகளை துணைநில் வைப்பு வசதி வீதத்தில் மத்திய வங்கியில் வைப்புச் செய்ய முடிவதுடன் அவை தமது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு துணைநில் கடன்வழங்கல் வசதி வீதங்களில் அரச பிணையங்களை பிணையமாக வைத்துக் கடனாக நிதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். துணைநில் கடன்வழங்கல் வசதி என்பது நேர்மாற்று மீள்கொள்வனவு வசதியாகும். இவ்வசதியின் கீழ் பங்கேற்கும் நிறுவனங்கள் தமது பிணையங்களை துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தில் மீண்டும் வாங்குவோம் என்ற உடன்படிக்கையுடன் மத்திய வங்கிக்கு விற்பனை செய்கின்றன.