பொதுநோக்கு

கொடுகடன் மற்றும் மூலதனம் என்பனவற்றிற்கான சந்தையான நிதியியல் சந்தையினை பணச் சந்தை எனவும் மூலதனச் சந்தை எனவும் இரண்டாகப் பிரிக்கலாம். பணச் சந்தை என்பது, திறைசேரி உண்டியல், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ் வைப்புக்கள் போன்ற ஓராண்டிற்கும் குறைவான முதிர்ச்சிகளுடன்கூடிய குறுங்கால வட்டியை உழைக்கின்ற சொத்துக்களுக்கான சந்தையாகும். பணச்சந்தையின் முக்கிய பணி பொருளாதாரத்தில் திரவத்தன்மை முகாமைத்துவத்தினை வசதிப்படுத்துவதாகும். பணச் சந்தையின் முக்கிய வழங்குநர்களாக அரசாங்கம், வங்கிகள் மற்றும் தனியார் கம்பனிகள் காணப்படுகின்ற வேளையில் பிரதான முதலீட்டாளர்களாக வங்கிகள், காப்புறுதிக் கம்பனிகள் மற்றும் ஓய்வூதிய மற்றும் சேமநிதிகள் காணப்படுகின்றன. மூலதனச் சந்தை என்பது திறைசேரி முறிகள், தனிப்பட்ட படுகடன் பிணையங்கள் (முறிகள் மற்றும் தொகுதிக்கடன்கள்) மற்றும் பங்குரிமை மூலதனம் (பங்குகள்) போன்ற ஓராண்டிற்கும் கூடுதலான முதிர்ச்சிகளைக் கொண்ட சொத்துக்களை வர்த்தகப்படுத்துவதற்கான சந்தையாகும். மூலதனச் சந்தையின் முக்கிய நோக்கம் நீண்ட கால நிதிகளைத் திரட்டுவதற்கு வசதியளிப்பதாகும். மூலதனச் சந்தையின் முக்கிய வழங்குநர்களாக அரசாங்கம், வங்கிகள் மற்றும் தனியார் கம்பனிகள் விளங்குகின்றவேளையில் முக்கிய முதலீட்டாளர்களாக ஓய்வூதிய மற்றும் சேமலாப நிதியங்களும் காப்புறுதிக் கம்பனிகளும் காணப்படுகின்றன.

நிதியியல் சந்தையினை படுகடன் சந்தை, பங்கு மூலதனச் சந்தை போன்ற சாதனங்களின் அடிப்படையிலும் வகைப்படுத்த முடியும். படுகடன் சந்தை நிலையான வருமானப் பிணையங்கள் சந்தை எனவும் அழைக்கப்படுவதுடன் இதன் பிரிவுகளாக அரச பிணையங்கள் சந்தையும் (திறைசேரி உண்டியல் மற்றும் முறிகள்) தனியார் படுகடன் பிணையங்கள் சந்தையும் (வர்த்தகப் பத்திரங்கள், தனியார் முறிகள் மற்றும் தொகுதிக் கடன்கள்) காணப்படுகின்றன. முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைகளுக்கிடையேயான இன்னொரு சிறப்பான அம்சத்தினையும் கோடிட்டுக் காட்ட முடியும். முதலாந்தரச் சந்தை என்பது பங்குகள் மற்றும் படுகடன் பிணையங்களைப் புதிதாக வழங்குகின்ற சந்தையாகவுள்ள வேளையில் இரண்டாந்தரச் சந்தை என்பது பிணையங்கள் வர்த்தகப்படுத்தப்படும் இடமாகக் காணப்படுகின்றது.

மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நடத்தையினூடாக நிதியியல் சந்தையின் வேறுபட்ட பிரிவினர்கள் மீது வேறுபட்ட அளவுகளில் செல்வாக்கைச் செலுத்துகிறது. மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள், வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தைகள் என அழைக்கப்படும் பணச் சந்தைப் பிரிவின் மீதும் நிலையான வருமானப் பிணையங்கள் அதாவது அரச பிணையங்கள் சந்தைப் பிரிவின் மீதும் பெருமளவு தாக்கத்தினைக் கொண்டிருக்கின்றன. மத்திய வங்கி, பணச் சந்தையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலும் தலையிடுகின்றது.