நிதியியல் சாதனங்கள்

வைப்புக்கள்

வைப்புக்கள் என்பது வாடிக்கையாளர் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதற்காக நிதியியல் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள மொத்தப் பணமாகும்.

மூன்று வகையான வைப்புக்கள் உள்ளன.

      (i)   கேள்வி வைப்புக்கள்,

      (ii)  சேமிப்பு வைப்புக்கள் மற்றும்

      (iii)  நிலையான அல்லது கால வைப்புக்கள்

கேள்வி வைப்புக்கள்

இவை முக்கியமாகக் கொடுக்கல்வாங்கல் நோக்கங்களுக்காகவும் நிதிகளின் பாதுகாப்பிற்காகவும் வைத்திருக்கப்படுகின்றன. கேள்வியின் மீது நிதிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். கேள்வி வைப்புக்கள் வட்டியை உழைக்கமாட்டதெனினும் வங்கிகள் கேள்வி வைப்புக்களின் உடமையாளர்களுக்கு காசோலை வசதிகள், நிலையியல் கட்டளைகள், மீளப்பெறுகை மற்றும் கொடுப்பனவுகளுக்கு வசதியளிப்பதற்காக தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டை மற்றும் பற்று அட்டைகள் போன்றவற்றினை வழங்குகின்றன.

சேமிப்பு வைப்புக்கள்

சேமிப்பு வைப்புக்கள் வட்டியை உழைப்பதுடன் வட்டியானது நாளாந்த, வாராந்த, மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் கணிக்கப்படலாம். பணத்தினை சேமிப்புக் கணக்குகளிலிருந்து எந்தவொரு நேரத்திலும் எடுப்பனவு செய்யலாம். நிதியியல் நிறுவனங்கள் சேமிப்பு வைப்பு உடமையாளர்களுக்கு கொடுக்கல்வாங்கல் விபரங்கள் தொடர்பில் சேமிப்புப் புத்தகங்களை அல்லது கூற்றுக்களையும் தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டை மற்றும் பற்று அட்டை போன்ற சேவைகளினையும் வழங்குகின்றன.

நிலையான அல்லது தவணை வைப்புக்கள்

இவை குறித்துரைக்கப்பட்ட காலத்திற்கு அல்லது தவணைக்கு நிதியியல் நிறுவனங்களில் வைத்திருக்கப்படும் நிதிகளாகும். நிலையான/ தவணை வைப்புக்கள் சேமிப்பு வைப்புக்களிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதங்களை உழைக்கின்றன. நிலையான/ தவணை வைப்புக்கள் குறுங்கால, நடுத்தர கால அல்லது நீண்ட காலங்களைக் கொண்டனவாகும். நிதிகளை முன்னறிவித்தலுடன் முதிர்ச்சிக்கு முன்பே பெற்றுக்கொள்ள முடியும். எனினும், தண்டப் பணமொன்று விதிக்கப்படலாம். நிலையான/ தவணை வைப்பு உடமையாளர்களுக்கு வைப்புக்களை பிணையாகப் பயன்படுத்தி நிதியியல் நிறுவனத்திலிருந்து கடன்பெறும் வசதி வழங்கப்படுகிறது.

கடன்கள்

கடன்கள் என்பது, கடன் வழங்குமொருவரினால், வழமையாக நிதியியல் நிறுவனமொன்றினால் கடன்பாட்டாளரொருவருக்கு, ஒன்றில் தவணை முறையிலோ அல்லது ஒரே தடவையிலோ இணங்கப்பட்ட திகதிகளில் இணங்கப்பட்ட வட்டி வீதத்துடன் சேர்த்து மீளச் செலுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் வழங்கப்படுமொரு குறிப்பிட்ட தொகையாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிதியியல் நிறுவனங்கள் கடன்களுக்காக சில வடிவங்களிலான பிணைகளைத் தேவைப்படுத்துகின்றன.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள்

திறைசேரி உண்டியல்

அரச பிணையங்களான இவை ஓராண்டு வரையான முதிர்ச்சிக் காலத்தினைக் கொண்டிருக்கின்றன. திறைசேரி உண்டியல்கள், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன. திறைசேரி உண்டியல்கள் 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் முதிர்ச்சிகளில் வழங்கப்படுகின்றன. திறைசேரி உண்டியல்கள் பூஜ்ய கூப்பன் பிணையங்களாக இருப்பதுடன் முகப்புப் பெறுமதிக்கான கழிவிடலுடன் விற்பனை செய்யப்படுவதுடன் இவை முதிர்ச்சியில் செலுத்தப்படுகின்றன. கொள்வனவு விலைக்கும் முகப்புப் பெறுமதிக்குமிடையிலான வேறுபாடு உரிமையாளர்களுக்கான வட்டியாகும். திறைசேரி உண்டியல்களை இரண்டாந்தரச் சந்தையில் இலகுவாக விற்பனை செய்ய முடிவதனாலும் காசாக மாற்றிக் கொள்ளமுடிவதனாலும் அவை திரவச் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.

திறைசேரி முறிகள்

இவை நடுத்தர மற்றும் நீண்ட கால அரச பிணைகளாக இருப்பதுடன் 2 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரையான முதிர்ச்சி வீச்சில் வழங்கப்படுகின்றன. திறைசேரி முறிகள் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன. திறைசேரி முறிகள் வட்டி உழைக்கும் பிணையங்களாக இருப்பதுடன் வட்டி ஆண்டில் இரு தடவைகள் செலுத்தப்படுகின்றன. திறைசேரி உண்டியல்களும் முறிகளும் அரச உத்தரவாதத்தினைக் கொண்டனவாக இருப்பதுடன் இவை செலுத்தத் தவறும் இடர்நேர்வுகளற்றனவாக இருப்பதனால் மிகப் பாதுகாப்பான முதலீடொன்றாகும். திறைசேரி உண்டியல்களும் முறிகளும் வர்த்தகப்படுத்தத்தக்க பிணையங்களாக இருப்பதுடன் இவை ஏலத்தின் மூலம் முதனிலை வணிகர்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்கள் அதனைப் பொதுமக்களுக்கு சந்தைப்படுத்துவர். திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மீதான விளைவுகள் சந்தையினால் தீர்மானிக்கப்படுவதுடன் சந்தை சுறுசுறுப்பானதாகவும் திரவத்தன்மைமிக்கதாகவும் காணப்படுகின்றது. 2004 இலிருந்து திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் பத்திரங்களற்ற வடிவத்தில் (காகிதங்கள் அற்ற) வழங்கப்படுவதுடன் கொடுக்கல்வாங்கல்கள் மத்திய வங்கியின் ''லங்கா செகுயர்" முறைமையில் இலத்திரனியல் ரீதியாக பதிவுசெய்யப்படுகின்றன.

மீள்கொள்வனவு உடன்படிக்கைகள்

மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் பின்வருவனவற்றுடன் தொடர்பான உடன்படிக்கைகளாகும்

   (i) பிணையங்களின் காசிற்கான விற்பனை (பொதுவாக அரச பிணையங்கள்)

   (ii) குறித்துரைக்கப்பட்ட விலையில்

   (iii) இதே அல்லது இதைப் போன்ற பிணையங்களை மீள்கொள்வனவு செய்ய வேண்டுமென்ற கடப்பாட்டுடன்

   (iv) நிலையான விலையில்

   (v) குறித்துரைக்கப்பட்ட எதிர்காலத் திகதியில்

விற்பனை விலைக்கும் மீள்கொள்வனவு விலைக்குமிடையிலான வேறுபாடு வட்டி வருமானமாகும். பிணையங்களை வாங்குபவரின் நோக்கிலிருந்து பார்க்கும் பொழுது உடன்படிக்கையானது நேர்மாற்று மீள்கொள்வனவு என அழைக்கப்படுகிறது. மீள்கொள்வனவு என்பது உடன்படிக்கையின் கீழான பிணையங்களினால் பிணையிடப்பட்ட கடனொன்றினைப் போன்றதொன்றாகும். பெரும்பாலான மீள்கொள்வனவுகள் குறுங்கால பணச் சந்தைக் கருவிகளாகவுள்ளன.

வர்த்தகப் பத்திரம்

வர்த்தகப் பத்திரங்கள் என்பது குறுங்காலம், பிணைகளற்ற (பிணையிடப்படாத) படுகடன் பிணையங்கள், தனியார் துறை கம்பனிகளினால் வழங்கப்படுகின்றன.

அவர்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக நிதிகளைத் திரட்டுவதற்காக, வங்கிகளூடாகவும் ஏனைய நிதியியல் இடையேற்பாட்டாளர்களினூடாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. 

வர்த்தகப் பத்திரங்கள் பொதுவாக கொடுகடன் நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களினால் (உயர் தரமிடப்பட்டவை) பெரிய இனப் பெறுமதிகளில், கொடுப்பனவிற்கான மேலதிக வங்கி உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. வர்த்தகப் பத்திரங்கள் வழமையாக கழிவிடலில் விற்பனை செய்யப்படுகின்ற போதும் சில வட்டியை உழைப்பனவாகவுள்ளன.

கம்பனி முறிகளும் தொகுதிக் கடன்களும்

கம்பனி முறிகள் என்பது நடுத்தர அல்லது நீண்ட காலப் பிணையங்கள், தனியார் துறைக் கம்பனிகளுடயவை, சில பிணையங்களினால் பிணையிடப்பட்டவை, வழங்குநர் வட்டியைச் செலுத்த வேண்டுமென்ற கடப்பாடுடையது, முதிர்ச்சியில் முதல் தொகையினை மீட்டுக் கொள்ளக்கூடியது. 

குறிப்பிட்ட சொத்தினால் உத்தரவாதமளிக்கப்படாத கம்பனி முறிகள், தொகுதிக் கடன்கள் என அழைக்கப்படுகின்றன.

தொகுதிக் கடன்கள் என்பது பிணையிடப்படாதது, நடுத்தரம் அல்லது நீண்ட காலம், வட்டி உழைக்கும் முறிகள், தனியார் துறைக் கம்பனிகள், வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றன. இவை வழங்குநரின் பொதுவான கடனின் மூலமாக மாத்திரம் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. தொகுதிக் கடன்கள் வழமையாக பாரிய நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களினாலேயே வழங்கப்படுகின்றன. தொகுதிக் கடன்களின் உடமையாளர்கள் கடன் வழங்கியோராகக் கருதப்படுவதுடன், வழங்குகின்ற கம்பனி ஒடுக்கிவிடப்படும் சந்தர்ப்பமொன்றில் பங்குடமையாளர்களுக்கு முன்னதாகக் கொடுப்பனவுகளைப் பெற உரித்துடையவராவர்.

சொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள்

சொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள் என்பது அடமானங்கள் கடன்கள் அல்லது வேறு பெறத்தக்கவை மூலம் பிணையிடப்பட்ட முறிகள் என்பதாகும். உண்மையில் வழங்குகின்ற நிறுவனம் அடமானங்கள், கடன்கள், தவணைக் கொடுகடன்கள், கொடுகடன் அட்டை அல்லது வேறு ஏதேனும் பெறத்தக்கவைகளை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அல்லது சிறப்பு நோக்கங்களுக்கான நிறுவனங்களுக்கு விற்பதுடன் அவை சொத்துக்களினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குகின்றது. சொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள் வட்டி உழைக்கும் சாதனங்களாக இருப்பதுடன் உத்தரவாதங்கள் அல்லது காப்புறுதி மூலம் வலுவூட்டப்படுகின்றன.

நிதியியல் குத்தகைகள்

நிதியியல் குத்தகை என்பது நீண்ட காலப் பாவனைச் சாதனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை வழங்குகின்ற கடன் வசதியொன்றாகும். இதில் சட்ட ரீதியான சொந்தக்காரர் (குத்தகைக்கு விடுபவர்) சாதனத்தினைக் கொடுப்பனவிற்காக குத்தகைக்கு பெறுபவருக்கு கடனாக வழங்குகின்றார். கொடுப்பனவு முழு முதல் தொகையினையும் வட்டிச் செலவினையும் உள்ளடக்கியிருக்கும். குத்தகைக்கு பெறுபவர் சொத்தினைப் பயன்படுத்துவதிலிருந்து கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெறுவதுடன் அச்சொத்துடமை தொடர்பில் உறப்படும் பேணல், காப்புறுதி மற்றும் வரி போன்ற செலவுகளையும் செலுத்த வேண்டும். கடன் தொகையும் வட்டிக் கொடுப்பனவுகளும் முழுமையாகச் செலுத்தப்படும் பொழுது சாதனத்தின் சட்ட ரீதியான சொத்துடமை, குத்தகைக்குப் பெற்றவரிடம் ஒப்படைக்கப்படும்.