நாணய முகாமைத்துவம்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் குறித்துரைக்கின்றவாறு, நாணயத் தாள்கள் மற்றும் குத்திகள் இரண்டையும் உள்ளடக்கிய நாணயங்களை இலங்கையில் வெளியிடுவதற்கான ஏக உரிமையினையும் அதிகாரத்தினையும் இலங்கை மத்திய வங்கி கொண்டிருக்கிறது. இப்பணியினை நிறைவேற்றும் விதத்தில், இலங்கையின் வங்கி நாணயத் தாள்களை வடிவமைத்து, அச்சிட்டு மற்றும் விநியோகிக்கும் பொறுப்பும் நாணயக் குத்திகளை வார்க்கும் பொறுப்பும் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாணய முகாமைத்துவத்தின் நோக்கம் யாதெனில் பெறுமதி மற்றும் மேற்பார்வை என்பனவற்றினைப் பேணிக் காப்பதன் மூலம் நாணயத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதும் பேணுவதும் பொருளாதாரத்தின் சரியான தொழிற்பாடுகளுக்கு இன்றியமைந்ததாக விளங்கும் நாணயங்களுக்கான கேள்வியைப் பூர்த்தி செய்யும் விதத்தில் போதுமான இருப்புக்களைக் கிடைக்கச் செய்வதுமாகும்.

வடிவமைப்பும் உற்பத்தியும்

புதிய தொடராக இருக்கும் போது, தாள்கள் அல்லது நாணயங்களை வடிவமைப்பதற்கு பல மாதங்கள் எடுக்கும். தாள்கள் அல்லது நாணயங்களை மத்திய வங்கியால் அதிகாரமளிக்கப்பட்ட நபர்கள் அல்லது தாள் அச்சிடுவோர் அல்லது வார்ப்போர் வடிவமைக்கின்றனர். வங்கித் தாள்களுக்கு அவற்றின் இனங்கள் வடிவம் மற்றும் ஏனைய பண்புகளும், குத்திகளுக்கு அவற்றின் குறிப்பிடப்பட்ட உலோகங்கள், நிறை, அளவு, வடிவமைப்பு, இனங்கள் என்பனவும் முறையே உற்பத்தி செய்யப்படுவதற்கும், வார்ப்பதற்கும் மத்திய வங்கியின் ஆளுகைச் சபையின் அங்கீகாரம் பெறப்படுவது கட்டாயமாக இருப்பதோடு நிதியமைச்சரின் இணக்கமும் பெறப்பட வேண்டும். வடிவமைப்புகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், ஒப்புதலளிக்கப்பட்ட கொள்வனவு நடைமுறைகள், வழிகாட்டல்கள் என்பனவற்றினைப் பின்பற்றி, நாணயத் தாள் அச்சிடும், குத்தி வார்க்கும் கம்பனியுடன், தாள்களை அச்சிடுவதற்கும் குத்திகளை வார்ப்பதற்கும் வங்கி ஒப்பந்தமொன்றினை மேற்கொள்ளும். 

பகிர்ந்தளிப்பு

பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களிடமிருந்து எழும் கேள்வியைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு போதுமான நாணயத்தாள்களையும் குத்திகளையும் வழங்கி பேணி வருகின்றதுடன் அந்நாணயம் வங்கி வைப்புக்கள் வடிவில் மீண்டும் வங்கியை அடைகின்றது. இத்தகைய நாணயத் தாள்கள், உயர்ந்த வேகமான தாள் செயல்முறைப்படுத்தும் இயந்திரத்தினூடாக நாணய சரிபார்ப்பு, கணக்கிடல் மற்றும் தரப்படுத்தல் முறையினூடாக சரி பார்க்கப்படுகின்றன. பயன்படுத்தப்பட முடியாத தாள்கள் உடனேயே, சிறு துண்டுகளாகக் கிழிக்கப்படுகின்றன. பயன்படுத்தக் கூடிய தாள்கள் அதே நேரத்திலேயே செயல்முறையில் எடுக்கப்பட்டு, வணிக வங்கிகளுக்கு மீண்டும் வழங்கப்படுகின்றன. தாள்கள் மேசை மீது வைக்கப்பட்டுள்ள எண்ணும் இயந்திரங்கள் மூலம் காசாளர்களினால் எண்ணப்பட்டு வணிக வங்கிகளுக்கு, விநியோகத்துக்காக வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் பயன்படுத்த முடியாத தாள்கள் வங்கியினால் அழிக்கப்படுகின்றன.

தூய நாணயத் தாள் கொள்கை

சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்கள் நல்ல தரத்தில் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கி தூய நாணயத் தாள் கொள்கையினை நடைமுறைப்படுத்தியதுடன், நாணயத் தாள்களைச் சிறந்த முறையில் கையாளும் நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு கல்வியூட்டுவதற்காக அநேக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திடடங்களையும் நடத்தி வருகின்றது. இதன் விளைவாக சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களின் தரநியமம் திருப்திகரமான மட்டமொன்றிற்கு மேம்பட்டது.

நாணயத் தாள்களின் சிறந்த கையாளல் நடைமுறைகள்

  • ஈரமான அல்லது வெப்பமான தன்மைகளுக்கு உட்படக்கூடிய இடங்களில் அல்லது பூச்சிகளினால் சேதம் ஏற்படக்கூடிய இடங்களில் நாணயத் தாள்களை வைக்க வேண்டாம்.
  • நாணய இனங்களின் ஒழுங்கில் அவற்றை மடிக்காமலும்/கசக்காமலும் நாணயப் பேழைகளில்/ பணப் பைகளில் வைத்திருக்கவும்.
  • அழுக்கான கைகளினால் நாணயத் தாள்களைத் தொடவோ அல்லது கையாளவோ வேண்டாம்.
  • வெட்டுவதன் மூலம் தாள்களின் மீது வரையவோ அல்லது எழுதவோ வேண்டாம்.
  • தூய தாள்களை நாம் பரிவர்த்தனை செய்து எமது தூய்மை பற்றி மற்றவர்கள் வியந்து கொள்கிறார்கள் என்பதனைப் பாருங்கள்
  • தூய நாணயத் தாள் எமது நாட்டின் நன்மதிப்பினைப் பேணிப் பாதுகாக்கிறது.

 நாணயக் குத்திகளைச் சிறந்த முறையில் கையாளும் நடைமுறைகள்

 
  • ஒவ்வொரு நாளும் எஞ்சுகின்ற நாணயக் குத்திகளை விசேடமாக அதற்கென உள்ள கொள்கலனொன்றிற்குள் போட்டு வைப்பதற்கு உங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பழகிக் கொள்ளச் செய்யுங்கள்.
  • பேருந்துக் கட்டணம் போன்றவற்றிற்கு கொள்கலனிலுள்ள குத்திகளைக் கிரமமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஒன்றுசேர்கின்ற நாணயக் குத்திகளை நீங்கள் வழமையாகப் பொருட்களை வாங்கும் மளிகைக் கடைகளில் மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது வங்கிகளல், மத்திய வங்கி தலைமை அலுவலகங்களில் அல்லது மாகாண அலுவலகங்களில் வைப்பிலிடுங்கள்.
  • வெற்றிகரமான எதிர்காலத்திற்கான நிதியியல் ஒழுக்கங்களின் முக்கியத்துவத்தினை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.