அபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்

இலங்கை மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி வசதிகளை வழங்குவதனை அதிகரிக்கின்ற கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டில் சமச்சீரான வளர்ச்சியை எய்தவும் நாட்டில் அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கும் உதவியளிக்கின்றது. இக்குறிக்கோள்களை அடையும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி பல்வேறுபட்ட மீள்நிதியிடல் திட்டங்களையும் வட்டி உதவுதொகைத் திட்டங்களையும் கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களையும் இணைத்து, வகைப்படுத்தி, நடைமுறைப்படுத்தி வருவதுடன் அதன் பிரதேச அபிவிருத்தி திணைக்களத்தினூடாக கொடுகடன் துணை நிரப்பு பணிகளையும் வழங்கி வருகிறது.

உபாயக் குறிக்கோள்களும் பிரதேச வளர்ச்சி, வறுமைக் குறைப்பு, வருமான உருவாக்க நடவடிக்கைகளை உருவாக்குதல் மற்றும் தொழில் வாய்ப்புக்கள், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் பயிற்சி ஏற்பாடுகள், முறைசார்ந்த நிதியியல் பணிகளுக்கு வசதியளித்தல், பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, உணவினைப் பத்திரபடுத்தல் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக சேதன உணவு உள்ளிட்ட இன்றியமையாத உணவு விடயங்களின்/ பாதுகாப்பினை உயர்த்துதல் என்பனவற்றை உள்ளடக்குகிறது.

பணிகள்

நிதியியல் உதவி

நாட்டில் வேளாண்மை, விலங்கு வளர்ப்பு மற்றும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளிலுள்ள நன்மைபெறுநர்களுக்குப் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம், பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களின் வலையமைப்பிற்கூடாக தாங்கக்கூடிய நிதிகளை வழங்குகின்றது. கடன் திட்டங்களின் நன்மைபெறுநர்கள் அவர்கள் முன்னாலுள்ள சவால்களை வலுவுடன் எதிர்கொள்வதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் தேவையான மக்களுக்கும் வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினூடாக சலுகை ரீதியான நியமங்கள் மற்றும் நியதிகளில் நிதிகள் கிடைக்கச் செய்யப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி, கொடை முகவர்கள் மற்றும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் என்பன நிதியளிக்கின்றன. பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் முக்கியமாக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளாகவும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளாகவும் காணப்படுகின்றன.

கொடுகடன் உத்தரவாதம்

பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களின் கொடுகடன் இடர்நேர்வினைக் குறிப்பிட்ட அளவிற்குத் தணிக்கும் நோக்குடன் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், குறித்துரைக்கப்பட்ட துறைகளுக்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களைச் செலுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. இந்நோக்கத்திற்காக, உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் இழப்பீட்டுக் கொடுப்பனவு போன்றன உட்பட அத்தகைய திட்டங்களின் கீழ் ஏற்புடைத்தான நியதிகளையும் நிபந்தனைகளையும் குறித்துரைக்கின்ற தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களைத் திணைக்களம் வழங்குகிறது. பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களின் இடர்நேர்வுத்தன்மையைக் குறைக்க இத்திட்டங்கள் உதவுவதனால் இவை பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு நன்மையளிக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவதற்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள், குறிப்பிட்ட திட்டத்தின் தொழிற்பாட்டு அறிவுறுத்தலில் குறித்துரைக்கப்பட்டவாறு கட்டுப் பணத்தினைச் செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி உதவுதொகை

தொடர்பான வட்டி உதவுதொகைத் திட்டத்தின் கீழ் அவர்களினால் வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி உதவுதொகைகளைப் பெறுவதற்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் உரித்துடையனவாகும். இத்திட்டங்கள் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களின் நிதிச் செலவினை ஈடுசெய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேளையில் அவை பொருளாதாரத்தில் குறித்துரைக்கப்பட்ட முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றன

பொதுமக்கள் விழிப்புணர்வு

இலங்கை மத்திய வங்கி, விசேடமாக, முறைசார்ந்த நிதியியல் முறைமைகளுக்கு வெளியேயுள்ளவர்களுக்காக, பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டங்கள் விசேடமாக நாட்டின் அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் வசதிகளின் கிடைப்பனவினை ஊக்குவிப்பதற்காக முக்கியமாக நிதியியல் முகாமைத்துவம், தொழில்முயற்சியாண்மை, அபிவிருத்தி, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கான செயலமர்வு என்பனமீது கவனம் செலுத்துகிறது.

ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் மூலம் அவர்களிடையே காணப்படும் வறுமையை ஒழிப்பதற்கு ஒரு குழுவாக பணியாற்ற பரஸ்பரம் உடன்படும் குறைந்த வருமானம்பெறும் ஆட்களுக்கென சமூக வலுவூட்டல்களுக்காக சுயஉதவிக் குழுக்களை அமைப்பதும் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றது. மேலும், பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பயன்படுத்தி நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் வசதிகள் என்பன தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வினை அதிகரிக்கிறது. மேலும், பொருளாதாரத்தின் சமகால வாய்ப்புக்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் பிரதேச அபிவிருத்திகளையும் தேவையான  கொள்கை வழிமுறைகளை எடுத்திருக்கிறது.

கடன் திட்டங்கள்

தற்பொழுது, பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் 9 கடன்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தொடர்புறுத்தி வருகிறது. இத்திட்டங்கள் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகள், நுண்பாக நிதியிடல் மற்றும் வேளாண்மை, விலங்கு வளர்ப்பு துறைகளுக்கான மீள்நிதியிடல் வசதிகள், கொடுகடன் உத்தரவாதங்கள் அத்துடன்/ அல்லது வட்டி உதவுதொகைகள் மற்றும் கொடுகடன் துணைநிரப்பு பணிகள் என்பனவற்றை வழங்குகின்றன.

1.  சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகள்

உயர்ந்த உள்ளார்ந்த வளங்களையும் வாய்ப்புக்களையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி தொடர்ந்தும் பின்வரும் கொடுகடன் திட்டங்களினூடாக அலுவலகரீதியான நிதியிடலை வழங்குகின்றது.

  சௌபாக்கியா
  சிறு உடமையாளர் பெருந்தோட்ட தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
  தேயிலை தொழிற்சாலைகளுக்கான தொழிற்படு மூலதனக் கடன்திட்டம்

2. நுண்பாக நிதியிடல்

சமூக ஒன்றுபடுத்தல் மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி செயன்முறையினைத் தொடர்ந்து வருமான உருவாக்க நடவடிக்கைகளை தொடங்குவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு கடன்களை வழங்குவதன் மூலம் குடும்ப வருமானத்தினை உயர்த்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்ப அலகுகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கும்.

  வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் சுழலும் நிதியம்
  வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் II சுழலும் நிதியம் 
  தருணா திரிய (தேசிய வேளாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்).

3. வேளாண்மை மற்றும் விலங்கு வளர்ப்பு

இன்றியமையாத உணவு விடயங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு பத்திரப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்கும் திணைக்களம் பின்வரும் முக்கிய திட்டங்களூடாகத் தொடர்ந்தும் கொடுகடன்களை வழங்குகின்றது.

  புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டம்
  தேயிலை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட சுழலும் நிதியம்
  வர்த்தகளவிலான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம்

இந்த கொடுகடன் திட்டங்கள் மற்றும் கொடுகடன் துணைப்பணிகள் போன்றவை இலங்கை அரசாங்கம்,  இலங்கை மத்திய வங்கி கொடை முகவர்கள் மற்றும் பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்கள் போன்றவற்றினால் நிதியிடப்படுகின்றன.