பொருத்தமற்ற, மாற்றம்செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள்

உருச்சிதைக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள்

கிழிதல் மற்றும் தேய்வடைதல் அல்லது பல்வேறு செயற்பாடுகள் மூலம் வேறுவகையில் கிழிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு, உருக்குலைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, துண்டுகளாக்கப்பட்டு, அழுக்காக்கப்பட்டு, துளைக்கப்பட்டு நாணயத்தாள் ஒன்றின் மூல அளவு குறைக்கப்படுகின்ற போது நாணயத்தாள் உருச்சிதைக்கப்படுகின்றது. இந்நாணயத்தாளின் பெறுமதியினை நிர்ணயிப்பதற்கு இத்தாள்கள் பற்றிய விசேட பரிசோதனை ஒன்று தேவைப்படுகின்றது.

 

வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட,  மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குலைக்கப்பட்ட நாணயத்தாள்கள்

நாணயத்தாள்களை உருச்சிதைத்தல், மாற்றம் செய்தல் அல்லது உருக்குலைத்தல் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாவதுடன் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படக்கூடியதொன்றாகும்.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் "உ"  ஒழுங்குவிதியின் கீழ், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத்தாள்கள் தொடர்பில் கோரல் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் அத்தகைய நாணயத்தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் வைத்திருக்கப்படுதலும் வேண்டும். இந்நாணயத்தாள் வைத்திருப்பவர்கள் அத்தகைய நாணயத்தாள்களின் முகப்புப் பெறுமதியினை இழக்க வேண்டியிருக்கும்.

வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட  அல்லது உருக்குலைக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு 2017/12/31 திகதியின் பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகளை வழங்காது.

 

உருச்சிதைக்கப்பட்ட தாளினை மாற்றுவதில் மத்திய வங்கியின் வகிபாகம்

தீ, வெள்ளம், பூச்சிகள் மற்றும் பீடைகள் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக நாணயத்தாள்கள் பாதிக்கப்பட்டிருப்பின், அதன் பெறுமதியினை மீளளிப்பதற்கான அதிகாரத்தினை இலங்கை மத்திய வங்கிக் "உ" ஒழுங்குவிதி வழங்குகின்றது.

எவ்வாறாயினும், சேதமாக்கப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளின் பெறுமதிக்கான பண மீளளிப்பு சலுகையொன்றாகவே வழங்கப்படும் என்பதுடன் அத்தகைய நாணயத் தாள்களிற்கான பண மீளளிப்புக்களை கோருவதற்கு நாணயத்தாள் வைத்திருப்பவருக்கு உரிமை எதுவும் கிடையாது.
 

உருச்சிதைக்கப்பட்ட அல்லது சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு பணமீளளிப்புச் செய்வதற்கான இலங்கை மத்திய வங்கியின் நடைமுறை

சிதைந்த அல்லது பழுதடைந்த தாள்களுக்கான கொடுப்பனவு நடைமுறை 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பெறுமதி மீட்பு இறுக்கமான முறையில் மேற்கொள்ளப்படும்.

ஒழுங்குவிதி "உ" இற்கமைவான,

சேதமடைந்த உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களின் முழுப்பெறுமதியினையும் மீளளிப்பதற்கான நிபந்தனைகள்

  • நாணயத்தாள் உண்மையானதாக இருக்கவேண்டும்.
  • நாணயத்தாளின் எஞ்சியுள்ள பாகமானது ஆகக்குறைந்தது தாளின் மூல அளவின் 3/4 பாகத்தினைக் கொண்டிருத்தல்.
  • தொடர் இலக்கங்களில் ஆகக்குறைந்தது ஒன்றினையாவது முழுமையாக வாசிக்ககூடியதாக இருத்தல்.
  • தாள் பல துண்டுகளாக கிழிக்கப்பட்டிருக்குமாயின், ஒன்றாக இணைக்கப்படுகின்ற போது, அவை ஒரு நாணயத்தாளின் அத்துடன் அதே நாணயத்தாளின் துண்டுகளாக இனங்கானக்கூடியதாக இருத்தல்வேண்டும்.

சேதமாக்கப்பட்ட/ சிதைவடைந்த நாணயத்தாளொன்றின் பெறுமதியில் அரைவாசியினை மீளளிப்பதற்கான நிபந்தனைகள்

  • நாணயத்தாள் உண்மையானதாக இருக்கவேண்டும்.
  • நாணயத்தாளின் எஞ்சியுள்ள பாகம், தாளின் அரைப்பகுதியினைவிட குறைவாகவிருத்தலாகாது அத்துடன் ஒரு துண்டாக இருக்கவேண்டும்.
  • தொடர் இலக்கம் முழுமையானதாகவும் தெளிவாக இனங்கானக்கூடியதாகவும் இருத்தல்

 மீளளிப்பதற்கான விசேட சந்தர்ப்பங்களில் இலங்கை மத்திய வங்கி ஒவ்வொரு விடயமாக கவனத்தில்கொள்ளும்.