வங்கித் தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம்

இலங்கை மத்திய வங்கியின் பயிற்சி மற்றும் மனிதவள அபிவிருத்திப் பிரிவாக விளங்கும் வங்கித் தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம், நிதியியல் தோற்றப்பாட்டிற்கு குறிப்பாக வங்கித்தொழில் துறையின் அபிவிருத்திக்கு தேவையான அறிவு மற்றும் தேர்ச்சி தொடர்பில் நாட்டிற்கு வலுவூட்டும் அதன்பணியினை '' கிராமிய வங்கித்தொழில் மற்றும் அலுவலர் பயிற்சிக் கல்லூரி'' என்ற பெயருடன் 1981 செத்தெம்பர் 15ஆம் நாளன்று தொடங்கியது. இது தொடங்கப்பட்ட நாளின் தேவை, கிராமியத் துறையில் நிதியியல் பணிகளை மேம்படுத்துவதாகவும் பொதுவாக நாட்டில் நிதியியல் பணிகளின் கிடைப்பனவினை ஊக்குவிப்பதற்கு தேவையான அறிவு மற்றும் தேவையான தேர்ச்சியுடன் பயிற்சிகளை வழங்குவதாகவும் இருந்தது. ஆகவே, அந்நேரத்தில் பயிற்சிப் பாடநெறிகளின் கவனம் கிராமிய மற்றும் அபிவிருத்தி வங்கித்தொழில்களின் மீது குவிந்திருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட விரைந்த அபிவிருத்தி மற்றும் உலகளாவிய நிதியியல் முறைகளுடன் நிதியியல் துறை ஒருங்கிணைக்கப்பட்டமை என்பனவற்றின் காரணமாக நிதியியல் மற்றும் நிதியியல் அல்லாத துறைகளில் படிப்படியான முன்னேற்றத்தினை இலங்கை அடைந்திருக்கிறது. கிராமிய வங்கித் தொழில் மற்றும் அலுவலர் பயிற்சிக் கல்லூரி, குறிப்பாக, நிதியியல் துறையின் முன்னேற்றம் தொடர்பில் அறிவையும் பயிற்சிகளையும் மேம்படுத்தியதுடன் மாறிவரும் சூழலுக்கு பொருந்துகின்ற விதத்தில் அதன் நிகழ்ச்சித்திட்டங்களையும் பன்முகப்படுத்தியது. இவ்வபிவிருத்திகளை பிரதிபலிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை கிராமிய வங்கித் தொழில் மற்றும் அலுவலர் பயிற்சிக் கல்லூரியினை வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் என 1998இல் பெயர் மாற்றம் செய்தது.

இன்று வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் பயிற்சி நிறுவகமொன்றாக முதிர்ச்சியடைந்திருப்பதுடன், தென்கிழக்காசிய மத்திய வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் பன்னாட்டு பயிற்சி நிறுவனங்கள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்நாட்டிலும் மற்றைய நாடுகளிலுமுள்ள மத்திய வங்கி மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களிலுள்ள அலுவலர்களுக்காக மத்திய வங்கித்தொழில், வங்கித்தொழில் மற்றும் நிதி, பொருளாதாரம், முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பரந்தளவான பயிற்சித் திட்டங்களையும் ஆய்வரங்குகளையும் செயலரங்குகளையும் வழங்குகிறது.

மேலும், வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றின் தோற்றம் பெற்றுவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் சிறப்பு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்துகிறது. வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களும் நிரம்பிய அனுபவமும் ஆற்றலும் கொண்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழில்துறை நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் விழிப்புணர்வினை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார மற்றும் நிதியியல் அறிவினை அபிவிருத்தி செய்தல் ஆகிய சமூகப் பொறுப்புக்களின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்கின்ற விதத்தில், பொருளாதார மற்றும் நிதியியல் துறையுடன் தொடர்பான சமகாலப் பிரச்சனைகள் மீது பகிரங்க விரிவுரைகளையும் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் நடாத்தியது. பள்ளிக்கூடப் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோர் தமது அறிவாற்றலையும் தேர்ச்சியையும் மேலும் அதிகரித்துக்கொள்வதற்காக திட்டமிட்ட கூட்டத்தொடர்களில் கிரமமாக கலந்து கொள்கின்றனர். 

வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் முழுமையான மிக நவீன பயிற்சி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு அறைகள், கேட்போர் கூடம், பயிற்சி அறைகள், குழு அறைகள், கணனிப் பயிற்சி ஆய்வு கூடங்கள், நூல் நிலையம் மற்றும் சிற்றுண்டி சாலைகள் என்பவற்றை உள்ளடக்கிய பல துணை வசதிகளினைக் கொண்டுள்ளது. இங்கு 50 இற்கும் கூடிய ஊர்திகளை நிறுத்தி வைக்கக் கூடிய இடவசதிகளும் உள்ளன. இலங்கை மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் மிக வேகமாக வளர்ந்து வரும் புற நகரப் பிரதேசமான ராஜகிரியவில் புதிய பாராளுமன்றத்துக்கு செல்லும் சிறிஜயவர்த்தனபுர வீதியின் அதிவிரைவுப் பாதை ஓரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு கோட்டையில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது.