முக்கிய தொழிற்பாடுகள்

ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வை

இலங்கை மத்திய வங்கி முக்கிய நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வை செய்து ஒழுங்கு முறைப்படுத்தி வருகின்றது. ஒழுங்குவிதிகளூடாக மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்கள் பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் நியமங்களை அல்லது கொள்கைகளை ஏற்படுத்துகிறது. மேற்பார்வையில் மத்திய வங்கி, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு இடர்நேர்வினை ஏற்படுத்தும் நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்வதுடன், தேவையானவிடத்து, அவற்றைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

முக்கிய ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

(i)   இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்களின் மொத்த பெறுமதிக்கு மூலதனத்தின் குறைந்தபட்ச விகிதம்.
(ii)  பொறுப்புக்களுக்கான திரவச் சொத்துக்களின் குறைந்தபட்ச விகிதம்
(iii) தனியொரு கடன்பாட்டாளருக்கான கடன் வழங்கல் அளவின் மீதான வரையறை
(iv) அறவிட முடியா மற்றும் ஐயப்பாட்டுக்கடன்களுக்கான ஏற்பாடு
(v)  குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களை சமர்ப்பித்தல்.

ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள், வங்கித்தொழிலில் அல்லது நிதியியல் வியாபாரத்தில் இயல்பாகவே இணைந்து காணப்படும் சில இடர்நேர்வுகளை தணிப்பதற்கு நிறுவனங்களுக்கு உதவும் முன்மதியுடைய நியமங்களாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. அத்தகைய ஒழுங்குவிதிகள், தொடர்பான சட்டங்களின் ஏற்பாட்டு நியதிகளில் நிர்ணயிக்கப்படுகின்றன. மேற்பார்வையானது பின்வருவனவற்றுடன் தொடர்புபட்டதாகும்; தலத்திற்கு வெளியேயான கண்காணிப்புக்களினூடாக நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் தலத்திலான பரீட்சிப்புக்கள் தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பு என்பது, நேரகாலத்துடனான மீட்பு நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலம் தீர்வுகாணக்கூடிய நேரிடக்கூடிய பிரச்சனைகளின் நேரகாலத்துடனான எச்சரிக்கைகளை அடையாளம் காணும் பொருட்டு அவற்றின் செயலாற்றம் மற்றும் நிதியியல் அந்தஸ்து தொடர்பாக நிறுவனங்களிலிருந்து காலத்திற்கு காலம் (மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு போன்றவை) பெறப்படும் தகவல்களைப் பரீட்சித்துக் கொள்வதாகும்.

தலத்திலான பரீட்சிப்புக்களின் கீழ் மத்திய வங்கி அலுவலர்கள், நிறுவனங்களின் தொழிற்பாடுகளை பின்வரும் விதத்தில் மேற்பார்வை செய்வதன் பொருட்டு அவற்றின் ஏடுகளையும் கணக்குகளையும் பரீட்சிப்பதற்காக காலத்திற்குக் காலம் நிறுவனங்களுக்கு விஜயம் செய்கின்றனர். முன்மதியுடைய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்வதை சரிபார்த்தல். பல்வேறு இடர்நேர்வுகளையும், அதாவது கொடுகடன் இடர்நேர்வு, திரவத்தன்மை இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வு மற்றும் நிறுவனங்களின் இடர்நேர்வு முகாமைத்துவ இயலாற்றல் என்பனவற்றை மதிப்பீடு செய்தல். இப் பரீட்சிப்புக்களின் முடிவுகளின் அடிப்படையில் மத்திய வங்கி நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு அவதானிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலயீனங்களை நிவர்த்தி செய்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேவைப்படுத்துகின்றது.

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு 

நிதியியல் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய முறையியல் சார்ந்த இடர்நேர்வு கட்டியெழுப்பப்படுவதனை குறைப்பதற்காக ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்க்கூடிய தன்மையினை அதிகரிப்பதனை பேரண்ட முன்மதியுடைய கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரண்ட முன்மதியுடைய கொள்கையானது இடர்நேர்வுகளைத் தடுத்தல் அல்லது தணித்தலின் பொருட்டு, நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை பாதிக்கும் இடர்நேர்வுகளை அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல் என்பனவற்றின் மூலம் ஏற்படுத்தப்படுவதுடன் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு பேணப்படுவதனையும் உறுதிப்படுத்துகிறது. இந்நோக்கத்திற்காக மத்திய வங்கியானது நிதியியல் மற்றும் நாணய முறைமையினையும் முறையியல் சார்ந்த இடர்நேர்வுகளை (ஒட்டு மொத்த சந்தையை பாதிக்கின்ற இடர்நேர்வுகள்) கட்டுப்படுத்துவதற்கான குறிப்பிடப்பட்ட கருவிகளின் பயன்பாட்டையும் அத்துடன்  பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாத முக்கிய நிதியியல் பணிகளுக்கான தடங்கல்களையும் அவதானிக்கின்றது.

இந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற பகுப்பாய்வுகள் பேரண்ட முன்மதியுடைய பகுப்பாய்வு என அறியப்படுகின்றது. இது, நிதியியல் முறைமையியலிருந்து தோன்றுகின்ற அல்லது நிதியியல் முறைமையினால் விரிவாக்கப்பட்ட கடுமையான சமநிலையற்ற தன்மைகளை மற்றும் அத்தகைய சம்பவங்களிலிருந்து தோன்றுகின்ற இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகளை அடையாளம் காண்பதற்காக நிதியியல் முறைமையை முழுமையாக மதிப்பீடு செய்கின்ற பொருளாதார பகுப்பாய்வு முறையொன்றாகும்.

முறிவடைகின்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானம்

நிதியியல் முறைமையிலுள்ள அனைத்து கொடுக்கல்வாங்கல்களினதும் அல்லது நிறுவனங்களினதும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ இல்லாதபோதும், மத்திய வங்கி, ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதியாக தொடர்ந்திருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. ஏதாவது ஆற்றலற்ற நிறுவனம் காணப்படுமாயின், ஒழுங்குபடுத்துநர் என்ற முறையில் மத்திய வங்கி அத்தகைய நிறுவனத்தின் பிரச்சனையினை பாதுகாப்பாக தீர்ப்பதற்கும், அத்தகைய நிறுவனம் முறிவடைவதனால் பரந்த பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளைக் குறைப்பதற்கும் தலையிடுகின்றது. நிதியியல் நெருக்கடிகளில், வரிசெலுத்துவோரின் பணத்தின் தியாகத்தில் முறிவடையும் பல நிறுவனங்கள் தப்பித்துக்கொள்ள முடிகிறது. சாத்தியமான நிறுவன ரீதியான முறிவுகளின் சுமையினை வரி செலுத்துபவர்களிடமிருந்து பங்குடமையாளர்களுக்கும் முறிவடைந்த நிறுவனங்களின் பிணைகளற்ற கடன் வழங்குவோருக்கும் மாற்றுவதற்கும் தீர்மானங்கள் முயற்சிக்கின்றன.

நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு மேற்பார்வை

நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு பொருளாதாரத்தின் சுமுகமான தொழிற்பாட்டில் முக்கிய வகிபாகமொன்றினை ஆற்றுவதுடன் பரந்தளவிலான நிதியியல் உறுதிப்பாட்டினையும் ஊக்குவிக்கின்றது. சந்தையின் பொருத்தமான தொழிற்பாடும் நிதியியல் உறுதிப்பாடும் நிதியியல் உட்கட்டமைப்பினால் வழங்கப்படும் பணிகளின் தொடர்ச்சியான ஒழுங்கான தொழிற்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது. இடர்நேர்வுகளை கண்காணித்தல், முகாமைப்படுத்துதல் மற்றும் தணித்தல் நிதியியல் சந்தை உட்கட்டமைப்பினை வழங்குபவர்களின் முக்கிய பொறுப்பாகும். 

உட்கட்டமைப்பின் முக்கிய வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கின்றன;

அ. நிதியியல் நிறுவனங்களுடன் தொடர்பான கொடுப்பனவு முறைமைகள்
ஆ. பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகள்
இ. மத்திய இணைத் தரப்பினர் போன்ற மற்றையவர்கள் (மத்திய வங்கியின் அதிகார வரம்பிற்குள் வரும் அத்தகைய நிறுவனம் ஏதும் தற்பொழுது இல்லை)

தேவையான பணிகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதனை சந்தை உட்கட்டமைப்பு வழங்குநர்கள் உறுதிப்படுத்துவதற்கான இயலாற்றலின் மீது சந்தைத் தொழிற்பாடுகள் தங்கியிருக்கின்றன. கொடுப்பனவு முறைமைகள், வியாபாரங்களுக்கும் ஏனைய சந்தைப்பங்கேற்பாளர்களுக்கும் அவர்கள் நுகரும் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கொடுப்பனவாகவோ அல்லது பணத்தினை அவர்கள் கடனாகப் பெறுவதற்காகவோ அல்லது கடனாக வழங்குவதற்காகவோ அல்லது வெறுமனே கொடுப்பனவுகளை மாற்றல் செய்வதற்காகவோ கொடுப்பனவுகளாக பணத்தினை அனுப்ப அல்லது பெறுவதற்கு வசதியளிக்கின்றன. பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகள் பங்குரிமை மூலதனம் அல்லது படுகடன் பிணையங்களின் முதலீட்டு பரிவர்த்தனைகளை இயலச்செய்கின்றன. மத்திய இணைத்தரப்பினர்கள், மூல இணைத்தரப்பினரின் செலுத்த தவறுகைக்கு எதிராக பங்கேற்பாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்குகின்றனர். 

இக்கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பொறுப்புக்களுக்குப் புறம்பாக, இலங்கை மத்திய வங்கி தற்பொழுது பாரிய பெறுமதியினைக் கொண்ட ரூபா கொடுப்பனவுகளுக்கும் (அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை) அரச பிணையங்களுக்கான பிணைய தீர்ப்பனவு முறைமைக்குமான (பத்திரங்களற்ற பிணையத் தீர்ப்பனவு முறைமை) கொடுப்பனவு முறைமைகள் உட்கட்டமைப்பினை வழங்குகின்றது.

நிதியியல் பாதுகாப்பு வலையமைப்பு

மேற்பார்வை, தீர்மானங்கள் மற்றும் இறுதிக்கடன் ஈவோன் வசதி என்பனவற்றுடன் சேர்த்து, வைப்புக் காப்புறுதியானது நிதியியல் பாதுகாப்பு வலையமைப்பின் முக்கிய கூறுகளிலொன்றாகக் காணப்படுகின்றது. பன்னாட்டு அபிவிருத்திகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி 2010.10.01 இலிருந்து “இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டம்” என்று அழைக்கப்படும் கட்டாய வைப்புக் காப்புறுதித் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியது. இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், முறிவடைந்த நிதியியல் நிறுவனங்களிலிருந்து வைப்பாளர்களை பாதுகாப்பதும் அதன் மூலம் வைப்பாளர்களின் நம்பிக்கையினை பேணுவதன் மூலம் நிதியியல் நிறுவனங்களின் உறுதிப்பாட்டினையும் நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையினையும் மேம்படுத்துவதற்கான பொறிமுறையொன்றினை உருவாக்குவதுமாகும்.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் உறுப்பு நிறுவனங்கள் அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும் உள்ளடக்குகின்றன. உறுப்பு நிறுவனங்களின் உரிமம் நாணயச் சபையினால் இரத்துச் செய்யப்படும் சந்தர்ப்பத்தில் தகைமையுடைய வைப்பாளர்களுக்கு உயர்ந்தபட்சம் ரூ. 300,000 கொண்ட தொகை இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தினால் நிறுவனமொன்றிற்கு, வைப்பாளரொருவருக்குச் செலுத்தப்படும். எனினும் பொறுப்பானது கிடைக்கத்தக்க நிதி அல்லது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தில் திரட்டப்பட நிதிக்கு மட்டுப்படுத்தப்படும்.

நாணயச் சபையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, உறுப்பினர் நிறுவன மொன்றில் அவசர கால திரவத்தன்மை இடர்பாடொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில்  இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் கீழ் உறுப்பினர் நிறுவனத்திற்கு திரவத்தன்மை ஆதரவு வசதி கிடைக்கத்தக்கதாக இருக்கும்.