இலங்கை மத்திய வங்கியானது தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினைத் தொடங்குவதற்கு 2020 யூலை 7ஆம் திகதியன்று ஒப்பத்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையின் நிதியியல் பணிகளுக்கான சாத்தியமான நன்மைகளை இலங்கை மத்திய வங்கி 2018இல் இனங்கண்டு வங்கிகள் அதேபோன்று தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை என்பவற்றின் தன்னார்வ பங்கேற்புடன் தொடரேட்டு தொழில்நுட்பம் பற்றிய தொழிற்துறைகளுக்கிடையிலான ஆய்வுகளைத் தொடங்கியது. பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தீர்வொன்றினை உருவாக்கி இலங்கையின் தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த நிதியியல் பணித் தீர்வுகளுக்கு வழியமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது. பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுவதற்கான தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த தீர்வுகளை உருவாக்குவதில் அனுபவமிக்க கம்பனிகளைத் தன்னார்வ அடிப்படையில் இக்கருத்திட்டத்துடன் இணையுமாறு இலங்கை மத்திய வங்கி விளம்பரப்படுத்தியது.
















