2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டக் கட்டளையுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2019 இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்தின் மீதான இலக்கினை பூர்த்திசெய்தல்

“அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு ஊடுகடத்துவதன் வினைத்திறனை அதிகரித்தல்” தொடர்பான 2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டத்தின் கட்டளை, மற்றைய விடயங்களுடன், ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் வெளியீட்டில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அவற்றின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்துடன்  ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் நாளளவில் குறைந்தபட்சம் 250 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றைக் குறைத்தல் வேண்டுமென தேவைப்படுத்தியது. இது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் எவ்வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் இக்கட்டளைத் திகதியன்று, அல்லது, அதற்குப் பின்னரான எந்த ஒரு நேரத்திலும் ஆண்டிற்கு 9.50 சதவீதத்தினை அடைந்துள்ளதோ அல்லது அதற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளதோ அத்தகைய வர்த்தக வங்கிகளுக்கு ஏற்புடைத்தாகமாட்டாது. 

மேலே குறிப்பிடப்பட்ட கட்டளையுடன் அநேகமான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இணங்கியொழுகியுள்ளமையினை மத்திய வங்கி அவதானித்திருப்பதுடன் குறிப்பாக, சில உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இவ்வொழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்வதற்காக, 2019 திசெம்பர் 27ஆம் திகதி முடிவடைந்த வாரகாலப்பகுதியில் தமது சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்தினை மிக அதிகளவில் குறைத்துக்கொண்டன. இதற்கமைய, ஒட்டு மொத்த வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிலுள்ளவாறான 12.24 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பர் 27ஆம் திகதியன்று உள்ளவாறான 9.94 சதவீதத்திற்கு 230 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2016 ஏப்பிறல் 26 இற்குப் பின்னர் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் தனிஒற்றை இலக்க மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

முழுவடிவம்

Published Date: 

Monday, December 30, 2019