இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்தினை மூடுதல்

இலங்கை மத்திய வங்கி 2026 சனவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப் படுகடன் திணைக்களத்தை மூடி, பொதுப் படுகடன் திணைக்களத்தின் லங்கா செக்குயர் பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்திற்கு இடமாற்றுவதாக அறிவிக்கின்றது. 

2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகம் நிதி, திட்டமிடல்  மற்றும்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் 2024 திசெம்பரில் தாபிக்கப்பட்டது. பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகம் 2025 திசெம்பரில் முழுமையாகத் தொழிற்படத் தொடங்கியதுடன் முன்னர் பொதுப் படுகடன் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடுகளின் முழுமையான பொறுப்புக்களையும் பொறுப்பேற்றது. இவ்விடமாற்றமானது நிறுவனசார் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி, இலங்கையின் படுகடன் முகாமைத்துவக் கட்டமைப்பின் வினைத்திறனையும் வெளிப்படைத்தன்மையினையும் மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது. 

எவ்வாறாயினும், பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தினதும் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தினதும் தொடர்புடைய ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய 2026 சனவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் அரசாங்கப் பிணையங்கள் பதிவாளராக  கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நியமிக்கப்பட்டு, அரசாங்கப் பிணையங்களுக்கான  பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் மத்திய வைப்பக முறைமை என்பவற்றை இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் திணைக்களத்தின் கீழ் தொடர்ந்தும் தொழிற்படுத்தும். 

Published Date: 

Wednesday, December 31, 2025