இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2019 ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமடைந்தது. இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக 2019இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட வீழ்ச்சி 2019 ஒத்தோபரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட போதும் 2019 ஒத்தோபரில் (ஆண்டிற்கு ஆண்டு) மேம்பட்டது. நிதியியல் கணக்கில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தை 2019 ஒத்தோபரில் சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலைத் தோற்றுவித்தது. ஒத்தோபர் மாத காலப்பகுதியில் செலாவணி வீதம் கலப்பு அசைவொன்றினைப் பதிவுசெய்ததுடன் இவ்வாண்டுப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராகத் தொடர்ந்தும் உயர்வடைந்தது.















