கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த பணவீக்கம் 2020 சனவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 திசெம்பரில் 6.3 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 12.4 சதவீதம் கொண்ட 25 மாத உயர்வொன்றிற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.9 சதவீதமாகக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 திசெம்பரில் 4.5 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 4.4 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2020 சனவரியில் 1.7 சதவீதத்தினைப் பதிவுசெய்ததுடன் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. 

உணவு வகையினுள் முன்னைய மாதத்தின் போது நிலவிய பாதகமான வானிலை நிலைமைகளினால் தோற்றுவிக்கப்பட்ட வழங்கல் பற்றாக்குறைகளின் காரணமாக காய்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்தன. இதற்கு மேலதிகமாக, தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் உடன் பழங்கள் என்பவற்றின் விலைகளும் 2020 சனவரியில் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, மாதகாலப்பகுதியின் போது உணவல்லா வகையிலுள்ள விடயங்களின் விலைகள்  அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தமைக்கு வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (வீட்டு வாடகை); கல்வி, (வகுப்புக் கட்டணங்கள்); மற்றும் விருந்தகங்கள், விடுதிகள் துணை வகைகளின் விடயங்களின் விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. எவ்வாறாயினும், 2019 திசெம்பர் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கீழ்நோக்கிய வரித் திருத்தங்களைப் பிரதிபலித்து நலம் மற்றும் தொடர்பூட்டல் துணை வகைகளிலுள்ள விடயங்களின் விலைகள் 2020 சனவரியில் வீழ்ச்சியடைந்தன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 திசெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 3.0 சதவீத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2019 திசெம்பரில் 5.5 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 5.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழு வடிவம்

Published Date: 

Friday, January 31, 2020