2019 திசெம்பரில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 திசெம்பரில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபர விளைவுடன் சேர்ந்த உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் இது தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 நவெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 8.6 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.2 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. 

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 நவெம்பரில் 3.0 சதவீதத்திலிருந்த 2019 திசெம்பரில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2019 திசெம்பரில் 1.6 சதவீதத்தினைப் பதிவுசெய்ததுடன் 2019 திசெம்பர் காலப்பகுதியின் போது நிலவிய பாதகமான வானிலை நிலைமைகளினால் தோற்றுவிக்கப்பட்ட உணவு வகையின் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களே ஏக காரணமாக அமைந்தன. உணவு வகையினுள் காய்கறிகள், அரிசி, சின்ன வெங்காயம், தேங்காய் மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் 2019 திசெம்பரில் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள விடயங்களின் விலைகள், இம்மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு 2019 திசெம்பர் 01 தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கீழ்நோக்கிய வரித் திருத்தங்களின் காரணமாக தொடர்பூட்டல்; வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலத்துறை மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விடயங்களில் ஏற்பட்ட விலை வீழ்ச்சிகளே காரணமாக அமைந்தன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 நவெம்பரில் 5.5 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 5.2 சதவீத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமானது 2019 நவெம்பரில் 5.6 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழு வடிவம்

Published Date: 

Tuesday, January 21, 2020