Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமிருந்து கிடைத்த அதிகளவு கோரிக்கைகளையும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றிக் கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளையும் பரிசீலனையில் கொண்டு, அத்தகைய நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றுவதற்கான காலத்தினை 2018 மாச்சு 31 வரை நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நாணயத் தாள்களை சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் அல்லது உருச்சிதைத்தல் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க தண்டனைக்குரியவையாகும். நாணய விதிச் சட்டத்தின் 'உ" ஒழுங்குவிதியின் கீழ், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத் தாள்கள் தொடர்பில் கோரல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படலாகாது என்பதுடன், அத்தகைய நாணயத் தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் பிடித்து வைத்திருக்கப்படலாம்.

அத்தகைய நாணத் தாள்களை வைத்தருப்பவர் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்பெறுமதியினை 2018 ஏப்பிறல் 01 இலிருந்து இழக்கவேண்டியிருக்கும்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஒத்தோபர் 2017

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பனவற்றின் காரணமாக 2017 ஒத்தோபரில் வெளிநாட்டுத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் காட்டியது. தொடர்ந்து நான்காவது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்த உயர்ந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மிதமாக அதிகரித்த வேளையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் மேலும் வீழ்ச்சியடைந்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமைக்கிடையிலும் இம்மாத காலப்பகுதியில் சென்மதிநிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் காணப்பட்டன.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 8 2017

அண்மைக்கால பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற் கொண்டு நாணயச்சபை 2017 திசெம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனவும் தீர்மானித்துள்ளது. எனினும் மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிப்பதுடன் தேவைப்படுமிடத்து பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இத்தகைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நாணயச்சபையால் கீழ்வரும் முக்கிய துறை அபிவிருத்திகள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகளை சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற பெறுகைகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஐ.அ.டொலர் 292.1 மில்லியன் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

2017 நவெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 8.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திலிருந்து 2017 நவெம்பரில் 7.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 நவம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் நவம்பர் மாதத்தில் 58.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒத்தோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.0 புள்ளிகளாலான ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 ஒத்தோபர் உடன் ஒப்பிடும் போது 2017 நவம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பண்டிகைக்கால கேள்விகளுடன் இணங்கிச்செல்லும் விதத்தில், முக்கியமாக உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான தயாரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பினால் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்கள் ஒத்தோபர் 2017 உடன் ஒப்பிடும் போது மாதகாலப்பகுதியில் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இதே வேளையில் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவக்கத்தினை காட்டியது.

Pages

சந்தை அறிவிப்புகள்