புதிய துணை ஆளுநரின் நியமனம்

நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர்     திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது. 

திரு. சி ஜே பி சிறிவர்த்தன

திரு. சி ஜே பி சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற முகவர் தொழிற்பாடுகள் ஆகிய துறைகளில் 31 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உதவி ஆளுநராக பதவியிலிருந்த திரு சிறிவர்த்தன அவர்கள் பொதுப்படுகடன், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் இணங்குவிப்பு, பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, மனித வளங்கள், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் போன்ற திணைக்களங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் வோறிக் பல்கலைக்கழகத்திலிருந்து கணியம்சார் அபிவிருத்திப் பொருளாதாரத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் M.Sc பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட திரு சிறிவர்த்தன றுகுணு பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் B.Sc பட்டத்தினையும் பெற்றிருக்கின்றார். திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கயின் நாணயச் சபைக்கான செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். திரு சிறிவர்த்தன லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் கொழும்பு டொக்யாட் பிஎல்சி போன்றவற்றின் பணிப்பாளரொருவராகவும் தற்போது கடமையாற்றுகின்றார். இவர் இலங்கை மின்சார சபை, புரொவிடன்ட் பரெப்படீஸ் லங்கா லிமிடெட் மற்றும் கந்துரட்ட அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் முதலீட்டுச் சபையினுடைய பணிப்பாளர்கள் சபையின் ஓர் அவதானிப்பாளராகவும் இருந்துள்ளார்.

மேலும், திரு சிறிவர்த்தன, அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினைப் பிரதிபலித்து பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் நீண்டகால பணியில் இடர்நேர்வு முகாமைத்துவம், படுகடன் முகாமைத்துவம், முதலீட்டு முகாமைத்துவம், நிதியியல் உறுதிப்பாடு, நாணயக் கொள்கை, தலைமைத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி போன்ற துறைகளில் பெரும் எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களிலும் பங்கேற்றியிருக்கின்றார். திரு சிறிவர்த்தன, விசேடமாக படுகடன் முகாமைத்துவம் மற்றும் முதலீடுகள் போன்ற துறைகளிலான நியமங்களின் மேம்பாட்டுக்கான விசேட பங்களிப்பு மற்றும் புத்தாக்கங்களை மேற்கொண்டுள்ளார். நாணயக் கொள்கைக் குழு, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு, ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களுக்கிடையிலான குழு மற்றும் நிதியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு போன்றவற்றின் உறுப்பினராக இவர் இருப்பதால், திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களை அடைந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

திரு சிறிவர்த்தன அரச நிதி, படுகடன் முகாமைத்துவம் மற்றும் முறிச் சந்தை அபிவிருத்தி ஆகிய துறைகளில் பிரபல்யமிக்க பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சஞ்சிகைகளில் பல்வேறு கட்டுரைகளின் ஆசிரியராவார். இவர் பல்வேறுபட்ட விடயப்பரப்புக்களின் பல்வேறு அரங்குகளின் கிரமமான பேச்சாரளாக இருப்பதுடன் மலேசியாவிலுள்ள தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் பீட உறுப்பினராகவும் இருந்தார்.

 

 

Published Date: 

Monday, August 21, 2017