Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி - 2020 முதலரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் முதலரையாண்டு காலப்பகுதியின் போது 7.1 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 141.6ஆகக் காணப்பட்டது. அதேவேளை, அரையாண்டு அடிப்படையில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2.0 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்துள்ளது. காணி மதிப்பீட்டுக் குறிக்காட்டியின் ஆண்டு மற்றும் அரையாண்டு என்ற இரண்டினதும் சதவீத மாற்றங்கள், அண்மைய காலப்பகுதிகளின் போது வீழ்ச்;சிப்போக்கொன்றினைக் காண்பித்தன. 

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி மதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 7.2 சதவீதம் கொண்ட உயர்வான ஆண்டு அதிகரிப்பினை பதிவுசெய்த அதேவேளை வதிவிடக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் வர்த்தகக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய இரண்டும் 7.1 சதவீத அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 

மத்திய வங்கி 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை 2020 செத்தெம்பர் 30ஆம் நாள்வரை நீடித்திருக்கிறது

நாணயச் சபை 2020 ஓகத்து 19ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இதற்கமைய, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களும் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழான தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான உரிமம்பெற்ற வங்கிகளுக்கு 2020 செத்தெம்பர் 30ஆம் நாள்வரை சமர்ப்பிக்கமுடியும். 

அதேவேளை, மேற்குறிப்பிட்ட வசதியின் கீழ் 36,489 விண்ணப்பதாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட கடன்களுக்கு ரூ.100,017 மில்லியன் பெறுமதியான தொகைக்கு ஒப்புதலளித்ததன் மூலம் 2020 ஓகத்து 18ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் கடன் தொகை ரூ.100 பில்லியன் கடன் தொகைகள் மைல்கல்லினைக் கடந்தது. ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் 2020 ஓகத்து 18ஆம் நாள் உள்ளவாறு, நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 25,365 வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையே ரூ.68.5 பில்லியனுக்கும் கூடுதலான தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்திருக்கின்றன. (விபரங்களுக்கு அட்டவணை 1இனைப் பார்க்கவும்).

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 யூலையில் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 6.3 சதவீதத்திலிருந்து யூலையில் 6.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இதற்கு 2019 யூலையில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 யூனின் 13.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 12.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 யூனின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனின் 5.6 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 5.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் நிறுவப்பட்டிருக்கிறது

திருத்தப்பட்டவாறான, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் குறைகளையும் கையாளும் பொருட்டு ஒரே கூரையின் கீழ் பணியாற்றும் விதத்தில் 2020.08.10ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி “நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றினை நிறுவியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஓகத்து 19ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்தது. இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரித்திருக்கிறது. மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது. இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 யூலை

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கை இயல்புநிலையடைவதிலிருந்து நன்மையடைந்து 2020 யூலையில் தொடர்ந்தும் விரிவடைந்தன. 

வியாபார நடவடிக்கைகளின் இயல்புநிலை மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக கொவிட் நோய்த்தொற்றிற்கு முந்திய மட்டங்களை நோக்கிச் செல்வதனைப் பிரதிபலித்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 யூலையில் 64.6இனைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. இதற்கு புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் விரிவடைதலே முக்கிய காரணங்களாக அமைந்தன.

2020 யூலையில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்; 51.4 இனை அடைந்ததன் மூலம் பணிகள் துறை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக தொடர்ந்தும் விரிவடைந்தது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பணிகள் துறையில் மேலதிக மீட்சியினை எடுத்துக்காட்டி 2020 யூனுடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்