உரிமம்பெற்ற வங்கிகளின் தற்றுணிபுக் கொடுப்பனவுகள் மீதான கட்டுப்பாடுகள்

உரிமம்பெற்ற வங்கியினால் காசுப் பங்கிலாபம் செலுத்துதல் உள்ளிட்ட தற்றுணிபுக் கொடுப்பனவுகள் தொடர்பில் சமீப காலத்தில் வெளியாகும் மாறுபட்ட கருத்துக்களை அவதானிக்குமிடத்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது.

கொவிட் - 19 தொற்றினால் ஏற்பட்டுள்ள விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ் உரிமம்பெற்ற வங்கிகளின் மூலதன நிலைமைகளையும் திரவத்தன்மையையும் வலுவாக்கும் நோக்குடன் 2020 மே 13 அன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது காசுப்பங்கிலாபங்களைப் பிரகடனப்படுத்துதல், இலாப மீளனுப்பல்களை மேற்கொள்ளுதல், பங்குகளை மீள வாங்குவதில் ஈடுபடுதல், முகாமைத்துவப் படி மற்றும் பணிப்பாளர் சபைக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற உரிமம்பெற்ற வங்கிகளின் சில தற்றுணிபுக் கொடுப்பனவுகளை 2020 திசெம்பர் 31 வரையில் கட்டுப்படுத்தத் தீர்மானித்தது

ஆயினும் 2021 சனவரி 19 வெளியிட்ட பணிப்புரைகளின் கீழ் இக்கட்டுப்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டுக்கான நிதியியல் கூற்றுக்கள் வெளியகக் கணக்காய்வாளர்களால் கணக்காய்வு செய்யப்பட்ட பின்னர் காசுப்பங்கிலாபக் கொடுப்பனவுகளையும் இலாப மீள் அனுப்பல்களையும் மேற்கொள்ள உரிமம்பெற்ற வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் சவாலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, காசுப்பங்கிலாபக் கொடுப்பனவுகளையும் இலாப மீள் அனுப்பல்களையும் தீர்மானிக்கும்போது எதிர்பார்க்கப்படும் சொத்து வளர்ச்சி, வியாபார விரிவாக்கம் மற்றும் கொவிட் - 19 தொற்றின் தாக்கம் ஆகியவற்றை வங்கிகள் கருத்திலெடுக்க வேண்டப்படுகின்றது.

2021 யூன் 30 வரையில், முன்மதியுடன் செயற்படவேண்டிய தேவைப்பாடு மற்றும் அவசியமற்ற செலவுகளை மேற்கொள்வதிலிருந்து சாத்தியப்பாடான வரையில் விலகியிருத்தலோடு பங்குகளை மீள வாங்குவதில் ஈடுபடுதல், முகாமைத்துவப் படிகள் மற்றும் பணிப்பாளர் சபைக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்றவற்றிலிருந்தும் விலகியிருக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கோரப்படுகின்றன. மேலும், மேற்கூறப்பட்ட காலப்பகுதியில் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ளும்போது உரிமம்பெற்ற வங்கிகள் தீவிர சிரத்தையோடும் முன்மதியோடும் செயற்படவேண்டும் எனக் கோரப்படுகின்றன.

Published Date: 

Saturday, January 23, 2021