வர்த்தகப் பற்றாக்கையில் ஏற்பட்ட மேம்பாடு, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய ஆதரவுடன் 2020 ஓகத்துக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அநேக விடயங்களில் தொடர்ந்தும் மீட்சியடைந்திருக்கிறது. இம்மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த மசகெண்ணெய் விலைகள் என்பனவற்றின் காரணமாக வணிப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேம்பட்டது. இருப்பினும் கூட, தொற்று உலகளாவிய கேள்வியைப் பாதித்தமைக்கிடையிலும் ஏற்றுமதிச் செயலாற்றம் தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக வலுவான நிலையில் காணப்படுகிறது. அதேவேளை, 2020 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்தமையின் மூலம் நடைமுறைக் கணக்கு வலுவடைந்திருக்கிறது.