கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மேயின் 4.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 11.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.















