தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 யூனில் மாற்றமின்றிக் காணப்பட்டது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கு, 2020 யூனில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 10.3 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 9.8 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூனில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2021 யூனில் 1.45 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 1.23 சதவீதத்தினையும் 0.22 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் அரிசி, காய்கறிகள், தேங்காய் எண்ணெய் மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகளில் பிரதானமாக அதிகரிப்புகள் அவதானிக்கப்பட்டன. மேலும், பிரதானமாக போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்) துணைத் துறையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக மாதகாலப்பகுதியில் உணவல்லா வகை அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2021 மேயின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு சிறிதளவு குறைவடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 யூனில் 4.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, July 22, 2021