நாணயக் கொள்கை

 

பொதுநோக்கு கொள்கை அறிவிப்புத் தேடல் கட்டமைப்பு தீர்மானம் மேற்கொள்ளல்/ வகுத்தல் கால அட்டவணை சாதனங்கள்/ கருவிகள் அறிக்கைகள்/வெளியீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

பொதுநோக்கு

நாணயக் கொள்கை என்றால் என்ன?

 
விலை உறுதிப்பாட்டினை எட்டும் நோக்கொன்றுடன் பணத்தின் செலவு (அதாவது வட்டி வீதம்) மற்றும் கிடைப்பனவு (அதாவது பண நிரம்பல்/திரவத்தன்மை) ஆகியவற்றின் மீது மத்திய வங்கி செல்வாக்கு செலுத்துகின்ற செயன்முறையே நாணயக் கொள்கையாகும். 

இலங்கையில் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கான பொறுப்பு இலங்கை மத்திய வங்கியிடம் காணப்படுவதுடன் இது கொள்கை வட்டி வீதங்களினை நிர்ணயித்தல் மற்றும் பொருளாதாரத்தில் திரவத்தன்மையினை முகாமைசெய்தல் ஆகியவற்றினை முக்கியமாக உள்ளடக்கின்றது. மத்திய வங்கியின் நாணயத் தொழிற்பாடுகள் பொருளாதாரத்தில் வட்டி வீதத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி, கடன்பெறுநர்கள் மற்றும் கடன்வழங்குநர்களின் நடத்தை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இறுதியாக பணவீக்க வீதம் ஆகியவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. எனவே, பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை விரும்பத்தக்க பாதையொன்றில் பேணுவதற்கும் மத்திய வங்கி நாணயக் கொள்கையினைப் பயன்படுத்துகின்றது.

விலை உறுதிப்பாடு

விலை உறுதிப்பாடு என்பது பொருளாதாரத்தில் பொதுவான விலை மட்டத்தில் பரந்தளவிலான தளம்பல்கள் எவையும் காணப்படாதொரு நிலையாகுமென்பதுடன் இது நீடித்துநிலைத்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியினை அடைவதற்குத் துணைபுரிகின்றது. விலைகள் குறைந்த வீதமொன்றில் தளம்பலடைகின்ற போது, அவை பொருளாதார முகவர்களின் அதாவது, குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள், பொருளாதாரத் தீர்மானங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கெதனையும் கொண்டிருக்காது. மேலும், விலை உறுதிப்பாடானது பொதுமக்களிடையே பணவீக்க எதிர்பார்க்கைகளினைச் சிறப்பாக நிலைநிறுத்துவதற்குத் துணைபுரிவதுடன் இதன்மூலம், உண்மையான பணவீக்கத்தினைத் தாழ்ந்த மற்றும் உறுதியான மட்டங்களில் பேணுவதனை எளிதாக்குகின்றது. எனவே, உறுதியான விலைகள் எதனை உற்பத்தி செய்வது மற்றும் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்த பொருளாதாரத் தீர்மானங்களினைச் சிதைவடையச் செய்யாதென்பதுடன், இது பொருளாதாரத்தில் வளங்களினை வினைத்திறன்மிக்க விதத்தில் ஒதுக்கீடு செய்வதனை இயலச்செய்து, நீண்ட காலத்தில் பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் பொருளாதாரத்தில் நீடித்துநிலைத்திருக்கின்ற வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றது. இதற்கமைய, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைதல் மற்றும் பேணுதல் எனும் அதன் முதன்மைக் குறிக்கோளினைப் பின்பற்றுகின்ற போது மத்திய வங்கி ஏனையவற்றிற்கிடையில் வெளியீட்டினை அதன் உள்ளாற்றல் வாய்ந்த மட்டத்தினை நோக்கி உறுதிப்படுத்துவதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். 

மீண்டும் மேலே செல்வதற்கு

கொள்கை அறிவிப்புத் தேடல்

அறிவிப்பு இலக்கம். கூட்டத் திகதி அறிவிப்புத் திகதி ஆவணங்கள் நாணயக் கொள்கை அறிக்கை
1 2026 சனவாி 27, செவ்வாய்க்கிழமை 2026 சனவாி 28, புதன்கிழமை

ஊடக அறிக்கை

எடுத்துரைப்பு

எடுத்துரைப்புக் காணொளி

நேரலைக் காணொளி

நாணயக் கொள்கை அறிக்கை பற்றிய விளக்கவுரை - 2026 பெப்புருவரி

 

எடுத்துரைப்பு (காட்சி வில்லை) PDF 

 

 

2 2026 மாச்சு 24, செவ்வாய்க்கிழமை  2026 மாச்சு 25, புதன்கிழமை 

ஊடக அறிக்கை

எடுத்துரைப்பு

எடுத்துரைப்புக் காணொளி

நேரலைக் காணொளி

3 2026 மே 25, திங்கட்கிழமை  2026 மே 26, செவ்வாய்க்கிழமை 

 

4 2026 யூலை 21, செவ்வாய்க்கிழமை 2026 யூலை 22, புதன்கிழமை

 

 

 

5 2026 செத்தெம்பா் 29, செவ்வாய்க்கிழமை 2026 செத்தெம்பா் 30, புதன்கிழமை

 

6 2026 நவெம்பர் 19, வியாழக்கிழமை 2026 நவெம்பர் 20, வெள்ளிக்கிழமை

 

மீண்டும் மேலே செல்வதற்கு

கொள்கை அறிவிப்புத் தேடல் - 2025

கட்டமைப்பு

மத்திய வங்கியானது உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற அதன் முதன்மைக் குறிக்கோளினை அடைவதற்கு நாணயக் கொள்கையினை நடத்துகின்றது. இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கமைவாக நாணயக் கொள்கையினை வகுத்து, நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி வீதக் கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு நாணயக் கொள்கைச் சபை பொறுப்பாகவுள்ளது. நிதி அமைச்சரிற்கும் மத்திய வங்கிக்குமிடையில் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டவாறு பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட மட்டங்களில் பேணுவதனை நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பானது இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஒத்தோபர் 5ஆம் திகதி அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தற்போதுள்ள நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது காலாண்டு முதன்மைப் பணவீக்கத்தினை 5 சதவீதத்தில் பேணுவதற்கு மத்திய வங்கிக்கு பொறுப்பாணை அளிக்கின்றது. 

பணவீக்க இலக்கினை அடைந்துகொள்ளும் பொருட்டு, விரும்பத்தக்க பாதையில் குறுங்கால வட்டி வீதங்களினை வழிப்படுத்துவதற்கு மத்திய வங்கி அதன் கொள்கைச் சாதனங்களினைப் பயன்படுத்துகின்றது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைச் சமிஞ்சைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கைச் சாதனமான ஓரிரவு கொள்கை வீதமானது அவசியமானவிடத்து, பணச் சந்தையில் குறுங்கால  வட்டி வீதங்களினை வழிப்படுத்துவதற்குக் காலாந்தர ரீதியில் மீளாய்வு செய்யப்பட்டு, பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றது. குறுங்கால பணச் சந்தை வட்டி வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது நடப்பு நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் தொழிற்பாட்டு இலக்காகச் செயற்படுகின்றது. மேலும், விரும்பத்தக்க மட்டங்களில் குறுங்கால வட்டி வீதங்களினை வழிநடத்தும் வகையில் உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மை நிலைமைகளினை முகாமைசெய்வதற்கும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளினை நாளாந்த ஏலத்தில் பெற்றுக்கொள்வதற்கு இயலாதிருந்த பங்கேற்கின்ற  நிதியியல் நிறுவனங்களுக்குத் துணைநில் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.

ஓரிரவு கொள்கை வீதத்தின் அறிமுகப்படுத்தலிற்கு முன்னர், துணைநில் வசதி வீதங்கள் அதாவது, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம், மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களாகத் தொழிற்பட்டன. முன்னர், மத்திய வங்கியானது நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் ஆகிய இரண்டினதும் அம்சங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றினுள் நாணயக் கொள்கையினை நடாத்தியது. இக்கட்டமைப்பின் கீழ், மத்திய வங்கியானது பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்துவதற்கு முயற்சித்தது. தற்போதைய நடைமுறைகளைப் போன்று, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது தொழிற்பாட்டு இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. 1980களின் தொடக்கத்தில், மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நாணய இலக்கிடலினைப் பின்பற்றியதுடன் நாணயக் கொள்கை நடத்தையில் முக்கிய பெயரளவு நிறுத்தியாக நாணயக் கூட்டுக்கள் காணப்பட்டன.   நாணய இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ், பண நிரம்பலிலுள்ள மாற்றங்கள் விலை உறுதிப்பாட்டினைப் பாதிக்கின்ற முதன்மையான காரணிகளாகக் கருதப்படுகின்றன. எனினும், பண நிரம்பல் மற்றும் பணவீக்கம் என்பவற்றிற்கிடையிலான வலுடைகின்ற தொடர்பொன்றிற்கிடையில் பணப் பெருக்கியிலும் வேகத்திலும் ஏற்படுகின்ற அதிகரித்துச்செல்கின்ற தளம்பலினைக் கருத்திற்கொண்டு, பெயரளவு நிறுத்தியொன்றாக நாணய இலக்குகளின் வகிபாகமானது நிச்சயமற்றதாக மாற்றமடைந்ததுடன் மத்திய வங்கியின் தொடர்பூட்டல் உபாயத்தினையும் சிக்கலிற்குட்படுத்தி, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கைக் கட்டமைப்பினைத் தரமுயர்த்துவதற்குக் காரணமாயமைந்தது.

  • சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள்
இலங்கை மத்திய வங்கிச் சட்டம்

நாணயக் கொள்கைக் கட்டமைப்பு


மீண்டும் மேலே செல்வதற்கு

தீர்மானம் மேற்கொள்ளல்/ வகுத்தல்

 

 

நாணயக் கொள்கைக் குழு (MPC)

நாணய விதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு, மத்திய வங்கியின் முதன்மைத் தொழிற்பாடு நாட்டிற்கான நாணயக் கொள்கையினைத் தீர்மானிப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதுமாகும். கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரம், குறிப்பாக நிதியியல் துறையானது, நிதியியல் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவருகின்ற அமைப்பியல்சார் மாற்றங்கள் என்பவற்றுடன் இணைந்து ஆழமடைந்து நவீனத்துவம் வாய்ந்ததொன்றாக மாற்றமடைந்திருக்கின்றது. இதன் விளைவாக, நாணயக் கொள்கையினைத் தீர்மானிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் மத்திய வங்கிப் பணிகளின் சிக்கல் தன்மை அதிகரித்துள்ளது. எனவே, நாணயக் கொள்கைப் பகுப்பாய்வுகளையும் உருவாக்கத்தினையும் வலுப்படுத்துவதற்கான மத்திய வங்கியினது முயற்சியின் பகுதியொன்றாகவும் தீர்மானங்களை வகுக்கின்ற செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துவதனை நோக்கிய நடவடிக்கையொன்றாகவும் முறைசார்ந்த நாணயக் கொள்கைக் குழுவொன்று 2001இன் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.

தற்போது நாணயக் கொள்கைக் குழுவிற்கு ஆளுநர் தலைமை வகிப்பதுடன் அது பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது:

தலைவர்
    •  ஆளுநர்
உறுப்பினர்கள்
    • அனைத்து துணை ஆளுநர்/கள்
    • பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபர மற்றும் சந்தைத் தொழிற்பாடுகள் ஆகிய திணைக்களங்களுக்கு பொறுப்பான உதவி ஆளுநர்/ஆளுநா்கள்
    • பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர்
    • பணிப்பாளர், புள்ளிவிபரம்
    • பணிப்பாளர், சந்தைத் தொழிற்பாடுகள்
    • பணம் மற்றும் வங்கித்தொழில் என்பவற்றை மேற்பாா்வைசெய்கின்ற பொருளாதார ஆராய்ச்சி மேலதிகப் பணிப்பாளர்
    • நாணயக் கொள்கைக் குழுவிற்கான செயலாளர்
    • பணம் மற்றும் வங்கித்தொழில் என்பவற்றை மேற்பாா்வைசெய்கின்ற பொருளாதார ஆராய்ச்சி துணைப் பணிப்பாளர் (பணம் மற்றும் வங்கித்தொழில் பிரிவின் தலைவர், மாற்றுச் செயலாளர்)

குழுவின் முதன்மைத் தொழிற்பாடு யாதெனில், தோற்றம் பெறுகின்ற நாணய மற்றும் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளை எதிர்வுகூறுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பவற்றுடன் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான எதிர்காலப் பணிப்புரைகளின் மீது விதந்துரைப்புக்களை மேற்கொள்வதுமாகும்.

நாணயக் கொள்கைக் குழு கிரமமான இடைவெளியில், குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு எட்டுத் தடவையாவது கூடுகிறது. இக்கூட்டங்களில் நாணயச் சபைக்கான விதந்துரைப்புக்களை உருவாக்குவதில் நாணயக் கொள்கைக் குழுவின் நிதானமான சிந்தனைக்குத் தளமாக அமையக்கூடிய நாணயம், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை மற்றும் விலை அபிவிருத்திகள் தொடர்பில் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் மற்றைய திணைக்களங்களினாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை இறை, வெளிநாட்டுத் துறை மற்றும் உண்மைத் துறைகளின் அபிவிருத்தியுடன் சேர்ந்து உறுப்பினர்கள் பரிசீலிக்கின்றனர். தற்பொழுது, பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்களை, குறிப்பாக பணவீக்க எதிர்வுகூறல்களை உள்ளடக்கிய அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரம் மற்றும் நாணயப் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கப்படுகின்றன.

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு (SEC)

முன்னர் தொழிற்பட்டுவந்த இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை முன்னர் தொழிற்பட்டுவந்த இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து 2022 யூலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு நிறுவப்பட்டுள்ளது. தலைசிறந்த தொழில்சார் நிபுணர்கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை குழு உள்ளடக்கியுள்ளமையினால் மத்திய வங்கியானது அதன் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறையில் அவர்களது நிபுணத்துவத்துவம் மற்றும் அனுபவத்திலிருந்து பயனடைந்து கொள்கின்றது.

மீண்டும் மேலே செல்வதற்கு

சாதனங்கள்/ கருவிகள்

ஓரிரவு கொள்கை வீதம் 

ஓரிரவு கொள்கை வீதம் என்பது ஒற்றை கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் (2024 நவெம்பர் 27 அன்று தொடக்கம் நடைமுறைக்குவருதல்) கீழ் காணப்படும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் ஆகும். இது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை சமிக்ஞைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாகும். இது பணச் சந்தையில் ஓரிரவு கொடுக்கல்வாங்கல்களுக்காக அடிப்படை வட்டி வீதமாக செயலாற்றுகின்றது. பணவீக்கத்தின் விரும்பத்தக்க பாதையொன்றினை அடையும் நோக்குடன், பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அவசியமானவிடத்து, ஓரிரவு கொள்கை வீதம் கால முறையாக மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றது. 

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் 

துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மூலம் உருவாக்கப்பட்ட துணைநில் வீத வீச்சினுள் செயற்பாட்டிலுள்ள திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் முறைமையொன்றின் கீழ் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையை நடாத்துகின்றது. இவை திரவத்தன்மை நிலைமைகளை முகாமைசெய்து ஓரிரவு கொள்கை வீதத்தில் அல்லது ஓரிரவு வீதத்திற்கு அண்மித்த குறுங்கால வட்டி வீதங்களைப் பேணும் பொருட்டு, நாணய கொள்கைச் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லையுடன் ஓரிரவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஒன்றில் திரவத்தன்மை மிகையாக இருக்குமிடத்து அதனை ஈர்த்துக் கொள்வதற்காகவும் அல்லது திரவத்தன்மை பற்றாக்குறையாகக் காணப்படுமாயின் திரவத்தன்மையினை உட்செலுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதுடன் இதன்மூலம்  குறுங்கால வட்டி வீதங்களில் உறுதிப்பாடு பேணப்படுகின்றது. அரச பிணையங்களை நிரந்தர அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் கொள்வனவு செய்வதற்காக/ விற்பனை செய்வதற்காக ஏலங்களினூடாகத் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. (திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற செய்முறையின் விரிவான விவரணமொன்றினைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்). ஏலமானது பல் விலைக்குறிப்பீடு பல் விலை முறைமைகள் என்பவற்றின் மீது இடம்பெறுகின்றன. பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குறுங்கால ஏலங்களிலும் மூன்று வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் ஒவ்வொரு நீண்ட கால ஏலங்களிலும் ஆறு வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியுமென்பதுடன் வெற்றி பெறுகின்ற விலைக்குறிப்பீட்டாளர்கள் தொடர்பான விலைக்குறிப்பீடுகளில் கோரிய வீதங்களில் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முதல்படி திரவத்தன்மை எதிர்வுகூறலாகும் (விபரணமொன்றினைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்)

ஓரிரவு கொள்கை வீதத்துடன சந்தை வட்டி வீதங்கள் அணிசேர்வதை இலக்காகக் கொண்டு திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் கருவிகளின் வீச்சொன்றை உள்ளடக்குகின்றன. பிணையங்களுக்கெதிராக திரவத்தன்மை உள்ளீடுகள் மற்றும் ஈர்த்தல்களில் ஈடுபடுகின்ற மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை இக்கருவிகள் உள்ளடக்குகின்றன. இது இரண்டாந்தரச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் அரசப் பிணையங்களின் விற்பனை அல்லது கொள்வனவுடன் ஈடுபடுகின்றது. ஒவ்வொரு இத்தொழிற்பாடுகளும் சந்தை வட்டி வீதங்களில் நிலையுறுதியை உறுதிப்படுத்தவதற்கு ஓரிரவு கொள்கை வீதத்துடன் உபாய ரீதியாக அளவீடு செய்யப்படுகின்றன. இதனூடாக, நாணயக் கொள்கை நிலைப்பாட்டையும் நாணயக் கொள்கை ஊடுகடத்தலையும் வலுப்படுத்துகின்றது. ஓரிரவு மற்றும் குறுகியகால மீள்கொள்வனவு ஏலங்களுக்கு, மத்திய வங்கி விலைக்குறிப்பீட்டு வீதங்களுக்கு உயர் எல்லையாக ஓரிரவு கொள்கை வீதத்தை நிர்ணயிக்கின்ற அதேவேளை குறைந்த எல்லையாக துணைநில் வைப்பு வசதி வீதம் செயற்படுகின்றது. மறுபுறத்தில், நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களுக்கு, ஓரிரவு கொள்கை வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்திற்குமிடையில் விலைக்குறிப்பீட்டு வீதங்களுக்கான வீச்சு தாபிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது ஓரிரவு மற்றும் குறுகிய கால ஏலங்களுக்கான விலைக்குறிப்பீட்டு வீதங்களின் பரவலை இவ்வீச்சினுள் தளம்பலடையச்செய்வதற்கு அனுமதிக்கின்ற அதேவேளை திரவத்தன்மை சீராக்கங்களுக்கு கட்டுபாடுடையதும், இருப்பினும்  நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையை வழங்குகின்றது.   

துணைநில் வசதிகள்

நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மை தேவைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு இயலாதிருப்பதங்கு  நிதியியல் நிறுவனங்களுக்கென துணைநில் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன. உதாரணமாக, பங்கேற்பாளரிடம் திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலத்தின் பின்னரும் கூட மிகையான பணத்தை பங்கேற்பாளர் கொண்டிருப்பாராயின், துணைநில் வைப்பு வசதி வீதத்தில் துணைநில் வைப்பு வசதியின் கீழ் அந்நிதியங்களை வைப்பாளர் வைப்புச்செய்து கொள்ளமுடியும். இதைப்போன்று, பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு பங்கேற்பாளருக்கு திரவத்தன்மை அவசியமானவிடத்து, பங்கேற்பாளர் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தில் துணைநில் கடன்வழங்கல் வசதியின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு அடிப்படையில் நிதியங்களை கடனாகப்பெற்றுக்கொள்ளலாம். இதற்கமைய, இவ்வசதிகள் ஓரிரவு வட்டி வீதங்களில் பரந்தளவிலான தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

நியதி ஒதுக்குத் தேவைப்பாடு

நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது வைப்புப் பொறுப்புக்களின் விகிதமாகக் காணப்படுவதுடன் இது மத்திய வங்கியுடன் பண வைப்பொன்றாகப் பேண வேண்டுமென உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளைத் தேவைப்படுத்துகின்றது. நாணய விதிச் சட்டத்தின் கீழ், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட வீதங்களில் மத்திய வங்கியுடன் ஒதுக்குகளைப் பேணுமாறு தேவைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரூபா நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் கேள்வி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பன நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளுக்குட்பட்டனவாகும்.

நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது கடந்த காலத்தில் பணநிரம்பலின் மீது செல்வாக்கினைச் செலுத்துவதற்குப் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், நாணயக் கொள்கையின் சந்தை சார்ந்த தன்மையினை மேம்படுத்துகின்ற மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மீது நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பாராதீனப்படுத்தக் கூடிய நிதிகளின் உள்ளார்ந்த செலவினைக் குறைக்கின்ற நோக்கில் கிரமமான நாணய முகாமைத்துவ வழிமுறையொன்றாக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் மீது தங்கியிருக்கும் தன்மை படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது. ஆகவே, தற்போது மத்திய வங்கி, சந்தையில் விடாப்பிடியாகக் காணப்படுகின்ற திரவத்தன்மைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினைப் பயன்படுத்துகின்றது. (நியதி ஒதுக்கு தேவைப்பாடு எவ்வாறு கணிக்கப்படுகின்றதென்பது தொடர்பான விபரங்களைப் பெறுவதற்கு  இங்கே அழுத்தவும்). 

ஏனைய சாதனங்கள்

மேலும், பொருளாதாரத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, மத்திய வங்கியானது கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டி வீதத்தின் மீதான உச்சவரம்பு, தார்மீகக் கடப்பாடுகள் அதேபோன்று நாணய முகாமைத்துவ நோக்கத்திற்காக தொடர்பூட்டல் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் என்பவற்றைப் பயன்படுத்த முடியும். 

மீண்டும் மேலே செல்வதற்கு

அறிக்கைகள்/வெளியீடுகள்

  • வெளிப்படைத்தன்மை

நாணயக் கொள்கை அறிக்கை 

 

சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை

 

மீண்டும் மேலே செல்வதற்கு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நாணயக் கொள்கை என்றால்?

நாணயக் கொள்கை என்பது விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை (பண நிரம்பல்/ திரவத்தன்மை) மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.

நாணயக் கொள்கையினை நடாத்துவதற்கு யார் பொறுப்பாகவுள்ளனர்?

இலங்கையில் நாணயக் கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி இலங்கை மத்திய வங்கியாகும். 2023 செத்தெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வித்தில் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்து உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணும் அதன் முதன்மைக் குறிக்கோளினை அடைவதற்கேற்ப நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புடன் இசைந்துசெல்லும் விதத்தில் நெகிழ்ச்சித்தன்மைவாய்நத செலாவணி வீத எல்லையினை நடைமுறைப்படுத்துவதற்கு நாணயக் கொள்கைச் சபை பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

ஆளுநரினால் தலைமை வகிக்கப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு நாணயச் சபைக்கு நாணயக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு பொறுப்புடையதாகும். தோற்றம்பெறுகின்ற பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றுடன் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டனை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் முதன்மைக் குறிக்கோளினை அடையும் வகையில் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான எதிர்காலப் பணிப்புரைகளின் மீது விதந்துரைப்புக்களை மேற்கொள்தல் என்பன நாணயக் கொள்கைச் சபையின் முதனிலை தொழிற்பாடாகும்.

இலங்கை மத்திய வங்கியின் நடைமுறை நாணயக் கொள்கைக் கட்டமைப்பு யாது?

தற்பொழுது, மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டவாறு இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுவதை இலக்காகக் கொண்ட நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புடன் இசைந்துசெல்லும் விதத்தில் நாணயக் கொள்கையினை நடத்துகின்ற அதேவேளை பொருளாதார வளர்ச்சியானது அதன் உள்ளார்ந்ததன்மையினை அடைந்துகொள்வதற்கு துணையளிக்கின்றது.

அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கிடையிலான தற்போதைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கை 2023 ஒத்தோபர் 05 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பு என்றால் என்ன?

நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ் நடாத்தப்படும் நாணயக் கொள்கையை பணவீக்க  இலக்கினைச் சூழப் பணவீக்கத்தை நிலைப்படுத்துகின்ற அதேவேளை உண்மைப் பொருளாதாரத்திற்கான இடைத்தடங்கலினைக் குறைப்பதை இலக்காக் கொண்டுள்ளது.  தற்போது நிதி அமைச்சிற்கும் மத்திய வங்கிக்குமிடையில் நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டவாறு 5 சதவீதத்தில் பணவீக்கத்தைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கமைவாக, மத்திய வங்கி நாணயக் கொள்கையை நடாத்துகின்றது (அரசாங்க வர்த்தமானி).

அதன் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் யாவை?

நாணயக் கொள்கை சாதனங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல வகையிலான கருவிகளை கொண்டிருக்கின்றது. முக்கிய சாதனங்களாக ஓரிரவு கொள்கை வீதம், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், துணைநில் வசதிகள், மற்றும் நியதி ஒதுக்குத் தேவைப்பாடு என்பன காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக,  கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டிவீதங்கள் மீதான உச்சங்கள், மற்றும் தார்மீகப் பொறுப்பு அதேபோன்று தொடர்பூட்டல் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் என்பனவும் பயன்படுத்தப்படலாம். நாணயக் கொள்கையினை நடத்துவதற்கு  பொருத்தமான சாதனங்களை தெரிவுசெய்கின்ற சுயாதீனத்தை மத்திய வங்கி கொண்டுள்ளது.   

ஓரிரவு கொள்கை வீதம் என்றால் என்ன?

ஓரிரவு கொள்கை வீதம் என்பது ஒற்றை கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் (2024 நவெம்பர் 27 அன்று தொடக்கம் நடைமுறைக்குவந்தது) கீழ் காணப்படும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் ஆகும். இது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை சமிஞ்சைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கையாகும். பணவீக்கத்தின் விரும்பத்தக்க பாதையொன்றினை அடையும் நோக்குடன், பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அவசியமானவிடத்து, ஓரிரவு கொள்கை வீதம் கால முறையாக மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றது. 

ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதத்தினதும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினதும் பயன்பாடு 2024 நவெம்பர் 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் நிறுத்தப்பட்டது. மத்திய வங்கியின் துணைநில் வசதிகளுக்கு ஏற்புடைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன நாணய கொள்கைச் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லையொன்றுடன்  இணைக்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பண வீதங்களுக்கு முறையே, குறைந்த எல்லை மற்றும் உயர்ந்தளவான எல்லையை தொடர்ந்தும் வழங்குகின்றது. 

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்பது வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணக் கொடுக்கல்வாங்கல்களினதும் வர்த்தக வங்கிகளுக்கிடையிலான ஓரிரவு பிணையமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்களினதும் சராசரி நிறையேற்றப்பட்ட வீதமாகக் காணப்படுவதுடன், இது இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகச் செயற்படுகின்றது. 

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக சந்தைத் திரவத் தன்மையினைப் பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையங்களைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படுகின்ற சந்தை அடிப்படையில் அமைந்த நாணயக் கொள்கை தொழிற்பாடுகள் ஆகும். இந்நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அல்லது அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட பிணையங்களையும் இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான பிணையங்களையும் பயன்படுத்தலாம். 

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவின் வகிபாகம் என்ன?

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு தலைசிறந்த தொழில்சார் நிபுணர்;கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தின் நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தி உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு பொருளாதார நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு தொடர்பில் தனியார் துறையினதும் கல்வியலாளர்களினதும் அபிப்பிராயங்களையும் எண்ணப்பாங்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இவ் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் முதன்மை வகிபாகமாகும். மேலும், இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் கொள்கைசார்ந்த வழிமுறைகள் மீது பொருளாதார ஆர்வலர்களின் நோக்கிலிருந்து பின்னூட்டலை வழங்குவதற்கு ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதுடன் இதனூடாக மிகவும் ஆலோசனைபெற்ற விதத்தில் சிறந்த கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையிலுள்ள முக்கிய நாணயக் கூட்டுக்கள் யாவை?

இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய கூட்டுக்களின் முக்கிய வரைவிலக்கணம் பின்வருமாறு;

  1. ஒதுக்குப்பணம்/ நாணயத் தளம் - செலுத்த வேண்டிய நாணயத்தினை (பொதுமக்கள் மூலம் வைத்திருக்கப்படும் நாணயமும் வணிக வங்கிகளுடனான நாணயமும்), இலங்கை மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான அரசாங்க முகவராண்மைகளின் வைப்புக்களை உள்ளடக்குகின்றது.
  2. ஒடுங்கிய பணம் (M1) - பொதுமக்களால் வைத்திருக்கப்படும் நாணயத்தையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கேள்வி வைப்புகளையும் உள்ளடக்குகின்றது.
  3. விரிந்த பணம் (M2) - ஒடுங்கிய பண நிரம்பலையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கப்படுகின்றது.
  4. விரிந்த பணம் (M2b) - ஒடுங்கிய பண நிரம்பல், வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவற்றை  உள்ளடக்கப்படுவதுடன் வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புளின் ஒரு பகுதியினையும் உள்ளடக்குகின்றது.
  5. விரிந்த பணம் (M4) - விரிந்த பணம் (M2b) நிரம்பல் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மூலம் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவை உள்ளடக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் (AWLR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் என்பது தனியார் துறைக்கு வணிக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாக உள்ள கடன்களினதும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதமானது வாரத்தின் போது தமது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வணிக வங்கியின் கடன்வழங்கல் வீதங்களின் அடிப்படையில் வாராந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்றால் என்ன?/ சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்பது வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது. 

சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமும் (AWFDR) வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா தவணை வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (AWNDR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்றால் என்ன? 

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது (AWNDR) ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளில் வைக்கப்பட்ட அனைத்து புதிய வட்டியுடைய வைப்புகளினதும் தொடர்புடைய வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்பது ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது. 

சட்ட ரீதியான/ சந்தை வட்டி வீதம் என்றால் என்ன?

சட்ட ரீதியான வீதமானது 1990ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவை (திருத்தம்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் பணத்தொகையொன்றினை மீள அறவிடுவதற்கான ஏதேனும் நடவடிக்கைக்கு ஏற்புடையதாகும். சந்தை வீதமானது 1990ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க படுகடன் மீள அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இணங்கிய வட்டி வீதம் காணப்படாத வர்த்தக ரீதியான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து தோன்றுகின்ற ரூ.150,000 தொகையினை விஞ்சுகின்ற படுகடனை மீள அறவிடுவதற்காக கடன் வழங்கும் நிறுவனங்களினால் தொடுக்கப்படும் வழக்குகள் தொடர்பில் மாத்திரம் ஏற்புடையதாகும். 

ஆண்டொன்றுக்கான சந்தை வீதமும் சட்ட ரீதியான வீதமும் முன்னுறுகின்ற பன்னிரண்டு மாதங்களில் நிலவிய அனைத்து வணிக வங்கிகளினதும் மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதங்களில் சாதாரண சராசரிகளைக் கருத்திற்கொண்டு திசெம்பர் மாதத்தில் கணிக்கப்படுகின்றது. 

நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்குமிடையிலான நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையின் நோக்கம் என்ன?

நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கை என்பது பொதுவாக பெரும்பாலும் நிதி அமைச்சினால் தலைமைதாங்கப்படும் அரசாங்கத்திற்கும் நாட்டின் மத்திய வங்கிக்கும் இடையிலான முறைசார் உடன்படிக்கையொன்றை பிரதிநிதித்துவம்செய்கின்றது.  மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டினாலும் பகிரப்படும் உறுதியான கடப்பாடொன்றாக குறிப்பிட்ட பணவீக்க இலக்கொன்றை வரையறுப்பதற்கும் அதனைப் பின்பற்றுவதற்குமான வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். இவ்வுடன்படிக்கையானது நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலும், பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டனை அடைவதற்கான நன்கு வரையறுக்கப்பட்ட பாதையை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கிடையிலான தற்போதைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கை 2023 ஒத்தோபர் 05 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

தற்போதைய பணவீக்க இலக்கு என்ன, பணவீக்க இலக்கினை அடைவதற்கு மத்திய வங்கி தவறுமிடத்து அதனை அளவிடுவது எவ்வாறு? மற்றும் மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறுமாயின் என்ன நடக்கும்?

தற்போதைய பணவீக்க இலக்கானது காலாண்டு முதன்மைப் பணவீக்கத்தினை 5 சதவீதத்தில் பேணுவதாகும். இங்கு “காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதம்” என்பது தொடர்புடைய காலாண்டின் மூன்று மாதங்களுக்கான மாதாந்த கொநுவிசு இல் ஆண்டிற்கு ஆண்டு சதவீத மாற்றங்களின் சாதாரண சராசரியைக் குறிக்கின்றது, அதேவேளை “கொநுவிசு” என்பது தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணைக் குறிக்கின்றது.

முதன்மைப் பணவீக்க வீதமானது தொடர்ச்சியாக இரு காலாண்டுகளுக்கு 5 சதவீத பணவீக்க இலக்கிலிருந்து +/- 2 சதவீதப் புள்ளிகளை விட அதிகமாக விலகியிருக்குமாயின், மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறியுள்ளதாகக் கருதப்படும்.

மத்திய வங்கி பணவீக்க இலக்கினை அடையத் தவறியிருக்குமாயின், பின்வரும் தகவல்களுடன் நிதி அமைச்சர் ஊடாக பாராளுமன்றித்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதுடன் அது பொதுமக்களுக்கும் கிடைக்கப்பெறக்கூடிதாகவிருத்தல் வேண்டும்.

(அ) பணவீக்க இலக்கினை அடையத் தவறியமைக்கான காரணங்கள்;

(ஆ) மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்மொழியப்பட்ட பரிகார நடவடிக்கைகள்; அத்துடன்

(இ) பணவீக்க இலக்கு அடையப்பட வேண்டிய காலப்பகுதியின் மதிப்பீடொன்று.

மீண்டும் மேலே செல்வதற்கு