கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து உறுதியான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நோக்கிய முனைப்புடனானதொரு பாதையில் தடம் பதித்துள்ளது. உலகளாவிய நோய்த்தொற்று நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தில் கணிசமானதொரு இழப்பினை விளைவித்த போதும் இறை, நாணய மற்றும் பொது சுகாதார விடயங்களில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத ஆதரவு பொருளாதாரத்தின் வலுவான மீளெழுச்சிக்கும் அதேபோன்று சில வெளிநாட்டுச் செலாவணியீட்டும் துறைகளில் கணிசமானதொரு மீட்சிக்கும் துணைபுரிந்துள்ளது. சுற்றுலாத் துறையும் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியைக் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் முறைசார் வழிகளினூடாக தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சந்தையில் காணப்பட்ட அண்மைய பதட்ட நிலைகளும் பொருளாதாரத்தினைப் பல்வேறு வகையிலான அதிர்வுகளுக்கு உட்படுத்தும் அதன் வெளிநாட்டுக் கடன்பாடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக இலங்கை காலப்போக்கில் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் மீது அதனுடைய தங்கியிருக்கும் தன்மையினை அதிகரிப்பதற்கான தேவையினை எடுத்துக்காட்டியுள்ளது.
















