சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு மீள நியமிக்கப்பட்டுள்ளார்

சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து  அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்;கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார்.

தற்பொழுது இவர் வெளிநாட்டுப் படுகடன் கண்காணிப்புக் குழுவின் நாணயச் சபை மட்டத் தலைவராகவும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவிற்கும் இவர் தலைமைதாங்குகின்றார்.

1992இல் சட்டத்தரணியாக இணைந்துகொண்ட திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்கள் கடந்த 29 ஆண்டுகளாக பிரத்தியேகமாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தொழில்புரிந்து வருவதுடன் 2012ஆம் ஆண்டில் சனாதிபதி சட்டத்தரணி என்ற உயர் கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் மேன்முறையீட்டுச் சட்டம், அரசியல் யாப்பு மற்றும் பொதுச் சட்டங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் விசேடத்துவம் பெற்றுள்ளதுடன் குடியியல், ஒப்பந்தம், வர்த்தகம், ஆதனம், வரிவிதிப்பு, வங்கித்தொழில் மற்றும் சட்டம் தொடர்பான ஏனைய பிரிவுகள் உள்ளிட்ட பன்முகத்தன்மையும் வேறுபட்ட துறைகளிலான விரிவான நிபுணத்துவத்தினையும் கொண்டுள்ளார்.

திரு. ஜயவர்த்தன இலங்கை சட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2015 நியமிக்கப்பட்டதுடன் ஆணைக்குழுவின் புதிய ஐந்தாண்டுகளைக் கொண்ட மேலுமொரு காலப்பகுதிக்காக அண்மையில் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் மீள நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பினை வரைவதற்கு அமைச்சரவையினாலும் அதிமேதகு சனாதிபதியினாலும் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உறுப்பினராக இவர் பணியாற்றிவருவதுடன் இலங்கையில் தரவுப் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தல் மீதான சனாதிபதி நிபுணர்கள் குழுவின் தலைவருமாவார்.

திரு. ஜயவர்த்தன, பல்கலைக்கழகத்தின் ஆளுகை அமைப்பான கொழும்புப் பல்கலைக்கழகச் பேரவையில் பணியாற்றும் உறுப்பினரொருவராக செயற்படுகின்றார். இவர் இலங்கை சட்டக் கல்லூரியின் ஆளுகை அமைப்பான கௌரவ பிரதம நீதியரசரினால் தலைமை வகிக்கப்படுகின்ற கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவை உறுப்பினரொருவருமாவார்.

மேலும், சனாதிபதி சட்டத்தரணி நியமனம் மீது சனாதிபதிக்கு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான குழுவின் உறுப்பினரொருவராக இவர் அதிமேதகு சனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

முன்னர், திரு. சஞ்சீவ ஜயவர்த்தன, அப்போதைய பிரதம நீதியரசர் திரு. சரத் என் சில்வா, சனாதிபதி சட்டத்தரணி தலைவராக இருந்த பொருளாதார அபிவிருத்திக்கான தேசியச் சபையின் சட்டக் கொத்தணியிலும் பணியாற்றினார்.

இவர் இலங்கையின் புலமைச் சொத்து ஆணைக்குழுவிலும் ஒரு தடவை நியமனத்தராக இருந்திருக்கிறார்.

2004இல் திரு. ஜயவர்த்தன “இலங்கையின் மிகச் சிறந்த இளம் ஆட்கள்” என்ற விருதினைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திலிருந்து சட்டமானியில் சிறப்புப் பட்டத்தினையும் அதே நிறுவனத்திலிருந்து தத்துவவியலில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் வழங்கப்பட்ட தத்துவ ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான அவரது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையினையும் அவர் தற்போது நிறைவுசெய்துள்ளார்.

அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சட்ட முதுமானி தத்துவவியலின் சிறப்புக் குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன் சட்ட முதுமானி மற்றும் தத்துவ முதுமானி பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டிற்குமான பரீட்சகரொருவராகவும் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் சட்ட பீடத்தின விருந்தினர் விரிவுரைகளையும் ஆற்றியிருக்கிறார்.

இவர் இலங்கை தகவல் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் சட்ட மானிப் பட்டப்படிப்பின் நிகழ்ச்சித்திட்டத்தின் மதியுரைச் சபையிலும் இருக்கிறார்.

திரு. ஜயவர்த்தன தற்போது றோயல் கல்லூரி ஒன்றியத்தின் நம்பிக்கைப்பொறுப்பாளர்  சபையின் உறுப்பினரொருவராகப் பணியாற்றுவதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட மற்றும் சட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் நீதிமன்றக் குழு உறுப்பினராகவுமுள்ளார்.

இவர் முன்னர், மீயுயர் நீதிமன்றங்கள் கட்டடத்தொகுதிக் குழுவின் தலைவராகவும் உயர்நீதிமன்ற விதிகள் குழுவின் உறுப்பினராகவும் சட்டத்தரணி சங்கத்தின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற அத்துடன் சட்டத்தரணிகள் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்தார்.

திரு. ஜயவர்த்தனவின் தந்தை, காலம்சென்ற திரு. ஸ்ரான்லி ஜயவர்த்தன அவர்களும் 1989.03.01 இலிருந்து 1994.09.12 வரை நாணயச் சபையில் பணியாற்றியுள்ளார்.

Published Date: 

Wednesday, July 14, 2021