இரண்டாந்தரச் சந்தையில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் முதலிடுவதற்கு உள்நாட்டுக் கம்பனிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை (2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கமைவாக நிதி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற கம்பனிகள் நீங்கலாக) அனுமதிப்பதற்கு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக கௌரவ நிதி அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒழுங்குவிதிகளை வழங்கியுள்ளார்.

மேற்குறித்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாகவும் பின்வருகின்ற நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து கடன்பெற்ற வெளிநாட்டு நாணயத்தின் 50% இனை உபயோகப்படுத்தி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் கம்பனிகள் முதலிடலாம்.

  1. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, அத்தகைய கோரிக்கைகளை பரிசீலனையில் கொண்டு விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் அனுமதியளிக்கும்.
  2. மேற்குறிப்பிட்ட கடன்பாடுகளின் மீதி ஐம்பது சதவீதம் (50%), இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்யப்படுதல் வேண்டும்.
  3. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலுமுள்ள முதலீடுகள் இலங்கைக்கு உள்முக பணவனுப்பல்களாக கிடைக்கப்பெற்ற உள்நாட்டு கடன்பெறுநரின் வெளிநாட்டு நாணய கடன்பாடுகளில் இருந்து பிரத்தியேகமாகச் செய்யப்படுதல் வேண்டும்.
  4. தகைமையுடைய கம்பனிகள் (மேலே குறிப்பிடப்பட்டவை) நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி) வெளிநாட்டு வர்த்தக கடன்பாட்டுக் கணக்கொன்றினைத் திறந்து பேணமுடியும். அதே வெளிநாட்டு வர்த்தக கடன்பாட்டுக் கணக்கு, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலும் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பில் அனைத்து உள்முகப் பணவனுப்பல்களையும் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
  5. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினதும் இலங்கை அபிவிருத்தி முறிகளினதும் கூப்பன்களான அத்துடன் முதிர்ச்சிப் பெறுகைகளான ஏதேனும் வருமானக் கிடைப்பனவு, ஆரம்ப முதலீடு மேற்கொள்ளப்பட்ட அதே வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாட்டுக் கணக்கிற்கு வரவு வைக்கப்படல் வேண்டும்.
  6. சொல்லப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளின் வட்டி மற்றும் மூலதனத்தின் மீள்கொடுப்பனவு அட்டவணை, (வதிகின்ற கடன்பெறுநருக்கும் வெளிநாட்டு கடன்வழங்குநருக்கும் இடையில் இணங்கியவாறு) நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலுமுள்ள தொடர்புடைய முதலீடுகளின் கூப்பன் கிடைப்பனவுகளுக்கும் முதிர்ச்சிப் பெறுகைகளுக்கும் அமைவாகப் பொருந்தியிருத்தல் வேண்டும்.
  7. எச்சந்தர்ப்பத்திலேனும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலும் முதலிடுகின்ற நோக்கத்திற்காக இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆளொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொல்லப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளின் மீள்கொடுப்பனவானது இலங்கை ரூபாவினை வெளிநாட்டுச் செலாவணிக்கு மாற்றுவதன் மூலம் செய்யப்பட்டிருத்தலாகாது.
  8. மேலும், அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள், தகைமையுடைய கம்பனிகளின் ஒழுங்குவிதிகளுடனான உரிய விழிப்புக்கவனத்தினையும் இணங்குவித்தலினையும் எப்போதும் உறுதிசெய்தல் வேண்டும்.

இவ்வொழுங்குவிதிகள் 2021.06.30ஆம் திகதியிடப்பட்ட 2234/20ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேடம்) அறிவித்தல்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பதுடன் www.dfe.lk என்ற இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Published Date: 

Thursday, July 8, 2021