கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூனின் 5.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவல்லா வகைகளின் பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதன் பின்னர், உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 11.3 சதவீதத்திலிருந்து 2021 யூலை 11.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூலை 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது உணவல்லா வகைகளின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலைகளின் அதிகரிப்புக்கள் காரணமாக 2021 யூலையில் 0.50 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் முறையே -0.05 சதவீதத்தினையும் 0.55 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் தேங்காய், உடன் மீன் மற்றம் தேங்காய் எண்ணெய் என்பவற்றின் விலைகள் குறைவடைந்தது. அதேவேளை, போக்குவரத்து (பெற்றோல்) உணவகம் மற்றும் விடுதிகள் துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக மாத காலப்பகுதியில் உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 3.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 யூனின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 3.1 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 30, 2021