இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கு 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 2021 செத்தெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை மீதான சமமின்மையினை கையாளுவதற்கும் நடுத்தர காலத்தில் எவையேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை வழிமுறை நோக்கிலும் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.