Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் திசெம்பர் 2018

2018 திசெம்பரில் இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையுடன் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. 2018 திசெம்பரில் ஏற்றுமதிகள் 1.4 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வளர்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் 15.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 

2018ஆம் ஆண்டில் பொருட்களின் மொத்த ஏற்றுமதிகள் 4.7 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 11.9 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் 6.0 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 22.2 பில்லியன் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. இதன் விளைவாக, 2018இல் வர்த்தகப் பற்றாக்குறை 2017இன் ஐ.அ.டொலர் 9.6 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 10.3 பில்லியனுக்கு மிதமாக விரிவடைந்தது. 

2018 திசெம்பரில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 4.8 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட ஆரோக்கியமான வளர்ச்சியுடன் தொடர்ந்தும் விளங்கி 2018இல் ஐ.அ.டொலர் 4.4 பில்லியன் கொண்ட மொத்த வருமானத்தினைத் தோற்றுவித்தது. இது 2017இனை விட 11.6 சதவீதம் கொண்டதொரு வளர்ச்சியாகும்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐ.அ.டொலர் 2.4 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குகிறது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோ~லிசக் குடியரசின் சார்பில் 2019 மாச்சு 7ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் மற்றும் 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 மாச்சு 14ஆம் நாள் மற்றும் 2029 மாச்சு 14ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் 'B2', 'B'  மற்றும் 'B' இல் முறையே தரமிடப்பட்டுள்ளன.

காணி விலைச் சுட்டெண் - 2018 இரண்டாம் அரையாண்டு

2018இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படும் கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 125.9 இனை அடைந்து 2017இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணைச் சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் என்பன இவ்வதிகரிப்பிற்கு பங்களித்தன.

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளைக் கண்காணிக்கும் பொருட்டு, காணி விலைச் சுட்டெண் அரச மதிப்பீட்டுத் திணைக்களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு பேர்ச்சு வெற்றுக் காணிக்கான விலையினை பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தின்1 அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில் தொகுக்கப்படுகிறது. காணிப் பயன்பாட்டின் பல்லினத் தன்மையைக் கருத்திற்கொள்கையில், வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று வெவ்வேறு துணைச் சுட்டெண்களாகக் கணிக்கப்பட்டதுடன் ஒரே விதமான சீர்மை அமைப்பினைப் பேணுவதற்காக இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகிறது. 

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது

மனுவெல்லா கொறேட்டி தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுவொன்று, மூன்று வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் துணைபுரியப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்தாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களுக்காக 2019 பெப்புருவரி 14-28 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில் செல்வி. கொறேட்டி பின்வருமாறான அறிக்கையை வெளியிட்டார்:

நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அடைந்த முன்னேற்றங்களை அங்கீகரித்திருக்கிறது

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் தொடர்பான உலகளாவிய கொள்கையை நிர்ணயிப்பவரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு இலங்கை அதன் நடவடிக்கைத் திட்டத்தினை நிறைவுசெய்திருக்கின்றது என்பதனை ஆரம்பத்தில் தீர்மானித்ததுடன் இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒடுக்குதல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீடொன்றின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு அதனை ஆரம்பித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் வலுவான நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதற்கான அரசியல் கடப்பாட்டிற்கு அவசியமான ஒன்றாகவும் காணப்பட்டது. தீர்மானமானது, 2019 பெப்புருவரி 20 - 22 காலப்பகுதியில் பரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் முழுமையான சமவாயத்தில் எடுக்கப்பட்டது. 

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 01 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்புருவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மாச்சு 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. நாணயச் சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் மாற்றமின்றிப் பேணுவதற்கு தீர்மானித்ததுடன், அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே தற்போதைய 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதனுடைய உள்ளார்ந்த வளத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம், நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இந்த முடிவுக்குவந்தது. 

Pages