இலங்கை மத்திய வங்கியானது இந்திய ரிசேர்வ் வங்கியுடன் நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியும் இந்திய ரிசேர்வ் வங்கியும் 2019-2020 காலப்பகுதிக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கைக் கட்டமைப்பின் கீழ் 2020 யூலை 24ஆம் திகதியன்று நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளன. இது, நாட்டின் சென்மதி நிலுவைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு குறுகிய கால நிதியிடலை வழங்கும்.

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைக் குறைபாடற்ற விதத்தில் பேணுகின்ற வேளையில், தேவையானளவு குறுகியகால வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினைப் பராமரிப்பதே இலங்கை மத்திய வங்கி இப்பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதன் நோக்கமாகும். இலங்கையின் தற்போதைய சவால்மிக்க வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலானது கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பெரும்பாலும் விளைவிக்கப்பட்டதொன்றாகும். இப்பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையின் கீழ், தொடக்கத்தில் மூன்று மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு இலங்கை ஐ.அ.டொலர் 400 மில்லியனைப்  பெற்றுக்கொள்ளும் என்பதுடன் ஏற்கனவே காணப்படுகின்ற சார்க் கட்டமைப்பின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீதான உடன்படிக்கைக்கு உட்பட்டு ஒவ்வொன்றும் மூன்று மாதங்களைக் கொண்ட இரு தடவைகள் நீடிப்புச் செய்யப்படும்.

இலங்கை மத்திய வங்கிச் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்டதுடன் இந்திய ரிசேர்வ் வங்கி சார்பில் இந்திய ரிசேர்வ் வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. அஜய் குமார் உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்திய ரிசேர்வ் வங்கியுடனான விசேட இருதரப்பு பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையின் கீழ், மேலதிகமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன.

Published Date: 

Monday, July 27, 2020