பேரண்டப் பொருளாதார எறிவுகளின் இற்றைப்படுத்தல் தொடர்பான ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மறுக்கின்றது

பல ஊடக அறிக்கைகள் பற்றி மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதில் குறிப்பிட்ட சில பேரண்டப் பொருளாதார எறிவுகள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பானவை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி, 2020 ஏப்பிறலில், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டதன் பின்னர் அதன் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கு எந்தவித இற்றைப்படுத்தல்களையும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. கொவிட்-19 தொற்றினால் உருவான நிச்சயமற்ற நிலைமைகளைக் கவனத்தில் கொள்கையில் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றதுடன் இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நடவடிக்கைகளின் நியமக் குறிகாட்டிகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. இது அதன் பகுப்பாய்வுகளிலும் கொள்கை வழிகாட்டல்களிலும் மரபுவழியற்ற குறிகாட்டிகளையும் அதேநேர அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றது. 

எனினும், இலங்கை மத்திய வங்கியின் பேரண்டப் பொருளாதார எறிவுகளின் பரந்த அடிப்படையிலான திருத்தங்களுக்குத் தேவைப்படும் முக்கிய ஒரு உள்ளீடாக தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்படவுள்ள 2020இன் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை உள்ளடக்கியிருக்கின்றன. இம்மதிப்பீடுகள் கிடைக்கத்தக்கதாக மாறியதும் இலங்கை மத்திய வங்கி அதன் திருத்தப்பட்ட பேரண்டப் பொருளாதார எறிவுகளை வெளியிடும். எனவே, இலங்கை மத்திய வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான குறைப்புகளை எறிவுசெய்துள்ளது என்பது பற்றியும் 2020 இற்கான இறைப்பற்றாக்குறையில் பாரிய விரிவொன்று காணப்படுகின்றது என்பது பற்றியும் ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகள் முழுமையாகவே தவறானவை எனவும் பொதுமக்களினைத் தவறாக வழிநடத்தும் உள்நோக்கினைக் கொண்டவை எனவும் இலங்கை மத்திய வங்கி மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றது.                                                                                 

 

 

Published Date: 

Friday, July 31, 2020