2020 மேயின் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான முடக்க வழிமுறைகள் நீக்கப்பட்டதன் காரணமாக வெளிநாட்டுத் துறை உறுதியடைந்தமைக்கான அறிகுறிகளைக் காட்டியது. அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பினை ஏற்படுத்தியதன் காரணமாக மேயில் அதன் தாக்கம் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்திருந்த வணிகப்பொருள் ஏற்றுமதிகள் இம்மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலாக எழுச்சியுற்றது. 2019இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2020 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாக இருந்த போதும் 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட கடுமையான குறைந்த மட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. நிதியியல் பாய்ச்சல்களைப் பொறுத்தவரையில் அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளின் மொத்த வெளிப்படுத்துகை கணிசமானளவிற்குக் குறைவாக இருந்தமைக்கு மே மாதத்தில் அரச பிணையங்களில் சிறிதளவு வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டமையே காரணமாகும்.