சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலத்தினை நீடித்தலும் அத்தகைய கணக்குகளில் வைக்கப்பட்ட நிதிகளை இலங்கையில் வைத்திருப்பதற்கான அனுமதியும்

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020 ஏப்பிறல் 08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2020 ஒத்தோபர் 07 அன்றுள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளிலுள்ள மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 272 மில்லியன் தொகையாகவிருந்தது.

நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணித் தொகையினை ஈர்ப்பதற்கு சிறப்பு வைப்புக் கணக்குகளின் சாத்தியத்தன்மையினையும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீதான சாதகமான தாக்கத்தினையும் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் மீது சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலப்பகுதியினை 2021 ஏப்பிறல் 07ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்குப் புறம்பாக, அத்தகைய வெளிநாட்டுச் செலாவணியினை நாட்டினுள் வைத்திருப்பதன் சாதகமான விளைவுகளைப் பரிசீலனையில்கொண்டு இலங்கை அரசாங்கமானது, முதிர்வின் குறிக்கப்பட்ட திகதிக்கும் அப்பால் சிறப்பு வைப்புக் கணக்குகளின் முதிர்ச்சிப் பெறுகைகளை இலங்கையில் வைத்திருப்பதற்கு விரும்புகின்ற சிறப்பு வைப்புக் கணக்குகளை வைத்திருப்போருக்கு, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் சாதாரண வைப்புக்களாக சிறப்பு வைப்புக் கணக்குகளை மீளப்புதுப்பிப்பதற்கும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியளித்துள்ளது. சாதாரண வைப்புகளாக அவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சிறப்பு வைப்புக் கணக்குகளில் வைக்கப்பட்ட நிதிகள், தொடர்புடைய வங்கிகளின் சாதாரண தவணை வைப்புகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களால் வழங்கப்படும் வட்டி வீதங்களுக்கு மாத்திரம் தகைமை பெறும். முதிர்வின் மீது அத்தகைய நிதிகள்;

i. ஏதேனும் எதிர்காலத் திகதியில் தங்குதடையின்றி மாற்றக்கூடியவையும் இலங்கைக்கு வெளியில் திருப்பியனுப்பத்தக்கவையுமாகும்.
ii. கணக்கு வைத்திருப்பவர் அத்தகைய கணக்கொன்றினைத் திறப்பதற்கு தகைமையுடையவராயின் அல்லது தற்போது பேணுபவராயின் உள்முக முதலீட்டுக் கணக்கொன்றினுள் அல்லது தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றினுள் மாற்றல் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

இலங்கை அரசாங்கத்தின் மேற்குறித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி) இலங்கை மத்திய வங்கி அவசியமான பணிப்புரைகளை வழங்கியுள்ளது.

சிறப்பு வைப்புக் கணக்குகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் www.dfe.lk என்ற வலைத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Published Date: 

Tuesday, December 1, 2020