இலங்கையானது நாட்டிற்கான படுகடனைச் செலுத்தத் தவறுவதன் விளிம்பிலிருப்பதாக அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவையெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பன்னாட்டு நியமங்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நம்பகமான உத்தியோகபூர்வ தரவுகளின் கிடைப்பனவிற்கு மத்தியிலும் இவ்வறிக்கைகள் வெளிப்படையாகவே உண்மைக்குப் புறம்பான துல்லியமற்ற தரவுகளைக் கொண்டுள்ளனவெனவும் வருந்தி நிற்கின்றது. ஆகையால், அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதிர்வரவுள்ள சகல படுகடன் கடப்பாடுகளையும் பூரணப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அப்பழுக்கற்ற படுகடன் பணிக்கொடுப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளன என்பதனை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கியானது உறுதியளிக்க விரும்புகின்றது.