இலங்கை மத்திய வங்கியானது பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையினை ஆரம்பித்துள்ளது

அனைத்தையுமுள்ளடக்கிய எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் கண்காணிப்பு முறைமையொன்றினை தேசிய ரீதியிலான முக்கிய முன்னுரிமையொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையினை அடையாங்கண்டு இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் பங்கேற்புடன் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை எனப்படும் புதிய தரவு சேகரிப்பு முறைமையொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் தொடர்பிலான அனைத்தையுமுள்ளடக்கிய தரவு சேகரிப்பு முறைமையொன்றாகக் காணப்படுவதுடன் தற்போதுள்ள பல்வேறுபட்ட தரவு இடைவெளிகளை நிரப்புவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது. இது புள்ளிவிபர மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகிய இரு நோக்கங்களுக்குமான பெறுமதியான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல்வேறு அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்குத் துணைபுரியும். ஏற்றுமதிப் பெறுகைகள், இறக்குமதிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளல் கொடுக்கல்வாங்கல்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள், நிதியில் கணக்குக் கொடுக்கல்வாங்கல்கள் போன்ற பணிகள் கணக்குக் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் ஏனைய பல்வேறு புள்ளிவிபரவியல் தரவு உள்ளீடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சென்மதி நிலுவைப் புள்ளிவிபரங்களின் மேம்பாடு உள்ளடங்கலாக பல நோக்கங்களுக்குப் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை துணைபுரியும். ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்காக வங்கிகளின் தரவு அறிக்கையிடல் நோக்கத்திற்கும் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது உதவியளிக்கும். கல்வி, மருத்துவம், சுற்றுலா மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக நாட்டிலிருந்தான வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல்களின் மூலங்கள் போன்ற எதிர்கால கொள்கைத் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கின்ற தகவல்களாகவும் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையினது தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது வங்கிகளினால் மிகவும் வசதியான தரவு அறிக்கையிடலினை இயலச்செய்கின்ற மத்திய வங்கியின் தகவல் திரட்டலினையும் மையப்படுத்தும். பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையினது கட்டம் 1ஆனது 2022 யூன் 21 தொடக்கம் நேரலையாக செயல்படுத்தப்படுகின்றது. இவ் முறைமையானது திட்டத்தின் அடுத்த கட்டங்களில் மத்திய வங்கியினது மேலும் மையப்படுத்தப்பட்ட தரவு அறிக்கையிடலினை வசதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை இடைநிலைமைத் தேவைப்பாடுகளில் விவரிக்கப்பட்டுள்ளவாறு மத்திய வங்கியினால் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையின் ‘இணையத்தள செயலியினூடாக’ திட்டத்தின் கட்டம் 1இல் உள்ள பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய தகவல்களை சகல வங்கிகளும் அறிக்கையிடத் தேவைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய வங்கியில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமைக் கண்காணிப்புப் பிரிவானது வழங்கப்பட்ட தரவுகளின் துல்லியத்தன்மை, காலக்கிரமம் மற்றும் உள்ளடக்கம் என்பவற்றினை உறுதிப்படுத்துவதற்கு வங்கிகளுடன் நாளாந்தம் நெருக்கமாகப் பணிபுரியும்.

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் என்பவற்றினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இவ்வறிக்கையிடல் தேவைப்பாடுகள் பிரயோகிக்கப்படுகின்றன.

Published Date: 

Tuesday, June 21, 2022