“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.