2017ஆம் ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. கொந்தளிப்பான வானிலை நிலைமையின் காரணமாக பொருளாதார ரீதியான தாக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். வரட்சியும் வெள்ளமும் வேளாண்மை நடவடிக்கைகளையும் வேளாண்மையினை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் நடவடிக்கைகளையும் தடங்கலுறச் செய்தன. இம்மோசமான வானிலை நிலைமைகளிலிருந்து கசிந்த தாக்கங்கள் பொருளாதாரத்தின் மற்றைய துறைகளையும் பாதித்தன. இதன் விளைவாகப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் தொடக்கத்தில் குறைவானதாகவும் எறிவு செய்யப்பட்டதிலும் பார்க்கக் குறைவானதாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையும் அதேபோன்று அரசாங்கத்தின் ஒப்பீட்டு ரீதியான இறுக்கமான இறைக் கொள்கை நிலையும் அரச மற்றும் தனியார் முதலீட்டுச் செலவிடலை ஓரளவிற்குப் பாதித்து தாழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தன.