பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது -2018 செத்தெம்பர் 27

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அவர்கள் கண்டறிந்த பூர்வாங்க விடயங்களை அறிவிக்கின்ற அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு, சபைக் கலந்துரையாடல் ஒன்றிற்கு வழிவகுக்காது.

      • சந்தைத் தளம்பலுக்கான பொருளாதாரத்தின் தாக்குபிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துகின்ற அதேவேளை, போட்டித்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் துணையளிப்பதற்கு வலுவான கொள்கைக் கலப்பு மற்றும் செலாவணி வீத நெகிழ்வுத்தன்மை என்பன இன்றியமையாதவையாகும்.
      • 2019 வரவுசெலவுத் திட்டத்தில் அரசிறையை அடிப்படையாகக் கொண்ட இறைத் திரட்சியின் முன்னேற்றமானது, இலங்கையின் பேராவலுடைய சமூக மற்றும் அபிவிருத்தி இலக்குகளுக்கு துணையளிக்கும் அதேவேளையில், அரசாங்கப் படுகடனை குறைக்கமுடியும்.
      • வர்த்தகம், முதலீடு மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சி என்பவற்றுக்கு துணையளிப்பதற்கு அதிகாரிகள் மறுசீரமைப்பு முயற்சிகளை நிலைநாட்ட வேண்டும்.

மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்டுவரும் இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக மனியூலா கொரட்டி அவர்களின் தலைமையிலான ப.நா.நிதியத்திலிருந்தான அலுவலர் குழுவொன்று, 2018 செத்தெம்பர் 13 - 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. விஜயத்தின் முடிவில் திருமதி. கொரட்டி பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார்.

'விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளின் ஐந்தாவது மீளாய்வினை நிறைவு செய்வது தொடர்பில் குழுவானது அரசாங்கத்துடனான அலுவலர்மட்ட இணக்கப்பாடொன்றினை எய்வது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. ஒத்தோபரில் ப.நா.நிதியத்தினதும் உலக வங்கியினதும் ஆண்டுக் கூட்டங்களின் போது இக்கலந்துரையாடல்கள் தொடரும்.

2018இன் முதலரைப் பகுதியில் பேரண்டப் பொருளாதாரத்தின் செயலாற்றமானது படிப்படியாக மீளுகின்ற வளர்ச்சி மற்றும் நடுஒற்றை இலக்கத்தில் நிலைப்படும் பணவீக்கம் என்பவற்றுடன் கலப்பானதாகவிருந்தது. வலுவான ஏற்றுமதிச் செயலாற்றத்திற்கு மத்தியில் உயர்வான எரிபொருள் இறக்குமதியின் பின்னணியில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்த அதேவேளை தளம்பல்மிக்க உலகச் சந்தை நிலைமைகளுக்கு மத்தியில், பன்னாட்டு ஒதுக்குகள் ஏப்பிறலில் அவற்றின் உச்ச மட்டத்திலிருந்து வீழ்ச்சியடைந்தன. 2018இல் வளர்ச்சியானது 4 சதவீதத்திற்குக் கீழ் இருப்பதற்கும் நடுத்தரகாலத்தில் படிப்படியாக 5 சதவீதத்தினை எய்துவதற்கும் எதிர்வுகூறப்படுகின்றது.

தூதுக்குழுவானது, அதிகாரிகள் தமது பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டியது. பலவீனமான பொருளாதாரச் சூழல் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தலில் தாமதம் என்பன காரணமாக ஒதுக்குத் திரட்டுதல் மற்றும் வரி வருவாய்களின் நிகழ்ச்சித்திட்ட இலக்குகளின் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், 2018 யூன் இறுதிக்கான முதனிலை மிகைகள் மீதான கணியம்சார் செயலாற்றல் இலக்கு எய்தப்பட்டிருந்ததுடன் பணவீக்கம் இலங்கை மத்திய வங்கியின் வீச்சினுள் காணப்பட்டது.

இன்னமும் முக்கியமான பாதிப்படையக்கூடிய தன்மையினைக் கருத்திற்கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்வுகளுக்கு இலங்கையின் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுவூட்டுவதற்கு மறுசீரமைப்புகள் துரிதப்படுத்தப்பட வேண்டியுள்ளன. வளர்ந்துவரும் சந்தைகளிலுள்ள பாரிய சந்தைத் தளம்பல்களின் மத்தியில், முன்மதிமிக்க நாணயக் கொள்கை மற்றும் மேலதிக இறைத் திரட்டுதல் என்பவற்றுடன் கூடிய வலுவான கொள்கை உறுதிப்பாட்டொன்றினை அதிகாரிகள் பேணியுள்ளனர்."

பணவீக்க இலக்கிடலிற்கு மாறுவதற்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகை மற்றும் பொறுப்புக்கூறல் கட்டமைப்புகளை வலுப்படுத்தல் என்பவற்றுக்காக மத்திய வங்கியின் நாணய விதிச் சட்டத்தினைத் திருத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பினை தூதுக்குழு வரவேற்றிருக்கிறது. ஒதுக்குத் தாங்கியிருப்புக்களை வலுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் மீள்புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் செலாவணி வீத நெகிழ்ச்சித்;தன்மைக்கான தெளிவான கடப்பாடு என்பன வெளிநாட்டுப் போட்டித்தன்மையினை அதிகரிப்பதற்கும் பாதகமான உலக சந்தை நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் மிக முக்கியமானவையாகும்.

படுகடனை கீழ்நோக்கிய சரிவுப்பாதையில் அடைந்து கொள்வதற்கும் முதலீட்டாளர்களது நம்பிக்கைக்கு ஆதரவளிப்பதற்கும் மத்திய வங்கியின் முயற்சி ஒரு வலுவான 2019 இற்கான வரவுசெலவுத் திட்டம், நன்கு வரையறுக்கப்பட்ட நடுத்தரகால படுகடன் உபாயம் மற்றும் ஆற்றல்வாய்ந்த இறைவிதி போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட வேண்டும். அரசிறையானது இலக்கினைவிட குறைவாகவிருப்பதனால் வரி இணங்குவித்தலினை வலுப்படுத்துவதற்கான நவீனமயப்படுத்தப்பட்ட வியாபார செய்முறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு புதிய உண்ணாட்டரசிறை சட்டத்தினையும் ஏனைய வரிக் கொள்கை வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். பாரியளவான அரசிறைத் திரட்சியானது சிறப்பாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட தெரிவுப் பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் பாதிப்படையக்கூடிய குடும்பங்களை பரந்தளவில் உள்ளடக்குதல் உள்ளிட்ட முக்கியமான செலவிடல் தேவைகளுக்கான விஸ்தீரணத்தினை ஏற்படுத்தமுடியும்.

அரசிற்கு உரித்தான பாரிய தொழில்முயற்சிகளுக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் செலவு வினைத்திறன் என்பவனவற்றைக் கொண்டுவருதற்கான கட்டமைப்புசார்ந்த மறுசீரமைப்புகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இந்நோக்கில், எரிபொருள் விலைச் சூத்திரத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலினை தூதுக்குழு பாராட்டியதுடன் மின்சாரத்திற்காக தானியக்க விலையிடல் பொறிமுறையொன்றின் அறிமுகப்படுத்தலினையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

வர்த்தகத்தின் திறந்ததன்மை மற்றும் முதலீடு, ஊழலுக்கு எதிராகப் போராடுதல், சமூகப் பாதுகாப்பினை அதிகரித்தல் மற்றும் பெண் தொழிற்படை பங்கேற்பினை ஊக்குவிப்பதற்குமான ஆதரவளிக்கப்பட்ட முயற்சிகள் ஊடாக இலங்கையின் துரிதமான மற்றும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சிக்கு துணையளிப்பதற்கு அவர்களது தொலைநோக்கு 2025 இனை நோக்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்."

தூதுக்குழுவானது பிரதம அமைச்சர் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் சமரவீர, இராஜாங்க நிதி அமைச்சர் விக்கிரமரத்ன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி ஆகியோரையும் ஏனைய அரசாங்க அலுவலர்களையும் வர்த்தகச் சமூக, சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு பங்காளர்களையும் சந்தித்தது.

Published Date: 

Friday, September 28, 2018