Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இன்ரபோல் தகவல் முறைமையினை நேரடியாக அணுகும் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக, 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் (தேசிய மத்திய பணியகம், கொழும்பு) ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.

இலங்கை கொள்வனவு முகாமையாளா் சுட்டெண் அளவீடு - 2019 செத்தெம்பா்

2019 செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தன. இது, 2019 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு வீழ்ச்சியாகும். தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட இம்மெதுவான போக்கிற்கு செத்தெம்பர் மாத காலப்பகுதியில் உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவடைந்தமையே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உற்பத்தியில் மெதுவான போக்கு, குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் அவதானிக்கப்பட்டது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் மெதுவான வேகத்தில் விரிவடைந்த போதும் எதிர்காலத்தில், குறிப்பாக, உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பிற்கு உயர்ந்த கேள்வி காணப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக கொள்வனவுகளின் இருப்பு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 ஓகத்து

இறக்குமதிகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த வேளையில், முன்னைய மாதத்தில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சி பெருமளவிற்கு மீட்சியடைந்தமையின் காரணமாக 2019 ஓகத்தில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 ஓகத்தில் இறக்குமதிச் செலவினம் 16.6 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் முக்கிய ஏற்றுமதி வகைகளின் விலைகள் குறைவடைந்தமையின் பிரதான காரணமாக ஏற்றுமதி வருவாய்கள் 0.4 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) பகுதியளவில் வீழ்ச்சியடைந்தன.

2019 ஓகத்தில் வர்த்தகப் பற்றக்குறை 2019 யூலையில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 717 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 540 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. 

2019 ஓகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் உறுதியாக மீட்சியடைந்து முன்னைய மாதத்தினைக் காட்டிலும் 24.1 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் இடைவெளியும் குறுக்கமடைந்தது. 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.6 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 ஒத்தோபர் 10ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்தது. சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது பணவீக்கத்தினை விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் பேணுவதனுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்ட வேளையில் பொருளாதார வளர்ச்சி நடுத்தர காலப்பகுதியில் அதன் உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் காணப்பட்டது.

 

10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019, கொழும்பு இலங்கை

இலங்கை மத்திய வங்கி இணைந்து நடாத்திய நாணய ஆராய்ச்சியுடன் இணைந்த 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019 கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் 2019 செத்தெம்பர் 23 - 26 வரை இடம்பெற்றது. பன்னாட்டு வர்த்தக ரீதியான பணத் தொழிற்பாடுகள் கருத்தரங்கு என முறைசார்ந்து அறியப்படுகின்ற பணச் சுழற்சிக் கருத்தரங்கானது வர்த்தக ரீதியான காசு முகாமைத்துவம், விநியோகம் மற்றும் சுற்றோட்டம் என்பனவற்றின் ஆர்வலர்களுக்கான முதன்மை வாய்ந்த உலக நிகழ்வொன்றாகும். 24 வருட அதன் வரலாற்றைக் கொண்ட இக்கருத்தரங்கினை நடாத்திய முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை விளங்குகின்றது. 

தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் – பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2019 செத்தெம்பர் 26 இலிருந்து 28 வரை கொழும்பில் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் - பன்னாட்டுத் தீர்ப்பனவிற்கான வங்கி உயர்மட்ட ஆய்வரங்கினையும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் நிறைவேற்றுக் குழுவின் 18ஆவது கூட்டத்தினையும் நடாத்தியது. இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர், பதில் ஆளுநர்கள் மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் உறுப்பினர்களாகவுள்ள மத்திய வங்கிகள் மற்றும் நாணய மேலாண்மைச் சபைகளின் பேராளர்கள் மற்றும் தனிச் சிறப்புமிக்க பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்